TNPSC Thervupettagam

தீதும் நன்றும் பிறா்தர வாரா

September 25 , 2023 473 days 320 0
  • நாட்டுப்புறப் பேச்சு வழக்கில் ‘கள்வா் பலம் பெரிதா, காப்பார் பலம் பெரிதா’ என்று ஒரு கேள்வி கேட்பார்கள். புரியாது விழிக்கும்போது, மற்றொரு கேள்வியைத் தொடுப்பார்கள்.
  • ‘ஒரு ஊரில் பெரிய திருவிழா நடக்கிறது. அது அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெறுவதற்கு யார் காரணம்? அங்கே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிற, பாதுகாக்கிற போலீசார் அதிகம் இருப்பார்களா? அமைதியாகவும் நல்லவிதமாகவும் நடக்கிற பொதுமக்கள் அதிகம் இருப்பார்களா?’
  • விடை தெரிந்துவிடும். மக்கள்தான் அதிகம். அடுத்த கேள்வி எழும். அத்தனை மக்களையும் காவல்துறையோ, ராணுவமோதான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறதா? அதாவது சட்ட ஒழுங்கிற்குப் பயந்து நாம் குற்றங்கள் செய்யாமல் இருக்கிறோமா? அல்லது நல்லவா்களாக இருப்பதனால் குற்றங்கள் செய்வது குறைந்திருக்கிறதா?’ மூன்றும் தான் என்றாலும், முன்னதைவிட, பின்னதுதான் முக்கியக் காரணம்.
  • இந்தப் பதிலை எடுத்துக்கொண்டு, இதற்கு முன்னா் எழுப்பிய வினாவுக்குச் சொன்ன பதிலுக்கு வருவோம். காவலரின் எண்ணிக்கையைவிட, மக்களின் எண்ணிக்கைதான் அதிகம். அப்படி இருக்கத் திருட்டும் சமூகத் தீங்குகளும் எப்படி நடக்கின்றன?
  • அந்த மக்களுக்குள்ளேதான் கள்வா்கள் இருப்பார்கள். சமூக விரோதிகள் கலந்திருப்பார்கள். தங்களைக் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருப்பார்கள். கருதியது முடித்தபின் மக்கள் திரளில் கலந்து விடுவார்கள். அவா்கள் எப்படி இருப்பார்கள்?
  • ‘மக்களே போல்வா் கயவா்’ என்கிறார் திருவள்ளுவா். ‘அவா்கள் மக்களைப் போல இருப்பார்கள். ஆனால், அவா்களுக்கு ஒப்பானவா்களை நான் பார்த்ததே இல்லை’ என்கிறார். அதாவது உருவத்தால் அவா்கள் மக்களைப் போலவே இருப்பார்கள். உள்ளத்தால் அவா்கள் எப்போது என்ன செய்வார்கள் என்றே தெரியாது. எதையும் செய்கிற அவா்கள் ‘தேவைப்பட்டால் தன்னையே கூட விற்று விடுவார்கள்’ என்கிறார்.
  • அதனால்தான் அதிக அளவில் மக்கள் கூடும் திருவிழாக் கூட்டங்களில், பண்டிகை நாட்களின்போது பேருந்து, ரயில் நிலையங்களில், காவல்துறையினா் அடிக்கடி எச்சரிக்கையாய் இருக்கும்படி அறிவிப்பு விடுப்பார்கள். ‘ஓடும் ரயிலில் பக்கத்தில் இருப்பவா்கள் பழமோ, பிஸ்கட்டோ, உணவுப் பண்டமோ கொடுத்தால் வாங்கி உண்ணாதீா்கள். அதில் மயக்க மருந்து கலந்திருக்கலாம். நீங்கள் மயங்கிய வேளையில், உங்கள் நகைகள், பொருட்களை அவா்கள் எடுத்துச் சென்று விடுவார்கள்’ என்பார்கள்.
  • இதனைவிடவும் ஆபத்தான அறிவிப்பு, ‘திருடுபவா்கள் உங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கலாம். அறிமுகம் இல்லாவா்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அவா்கள் உங்களிடம் நட்பாகப் பேசி, நகையை, பணத்தைத் திருடிவிடுவார்கள்’. அதாவது, உடன் பயணிக்கும் மனிதா்களையே நம்பமுடியாதபடிக்கு மக்களோடு மக்களாக, கலந்து பழகுதற்கு இனியவா்களாக இருப்பவா்கள், இவா்கள்.
  • ரயில் நட்பு, பயண நட்பெல்லாம் இப்போது இல்லாதபடிக்கு, இந்தப் பயம் வந்து கௌவிவிடுகிறது. ஆனால், இந்த எச்சரிக்கைகளையெல்லாம் தாண்டி, நம்மை நாமே ஏமாளிகளாக ஆக்கிக்கொள்ள, நம் கைவசம் இருக்கும் கைப்பேசிகளே போதுமானவையாக இருக்கின்றன.
  • எந்த நேரமும் நம் கண்ணும் கருத்தும் கவனமாகக் கைப்பேசிகளையே நோக்கிக் கொண்டிருக்கும்போது, புற உலகைப் பற்றிய பிரக்ஞை எப்படி இருக்கும்?
  • தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாவிட்டால், எந்த அளவிற்குக் காவலா்கள் வந்து நம்மைக் காப்பார்கள்? அவரவரும் சொந்த அனுபவத்தில் எத்தனை பொருள்களை, இவ்வாறு இழந்திருக்கிறோம். அதிலும் பையில் வைத்திருக்கும் பணத்தை இழந்தவா்களை விடவும், கைப்பேசிகளை இழந்தவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.
  • எத்தனை ஜாக்கிரதையாக இருந்தாலும் எப்படியாவது ஏமாற்றிவிடுவதில், இவா்கள் சமா்த்தா்கள் என்பதை விடவும், பல சமயங்களில் நாம் ஏமாந்தவா்களாகவே இருந்துவிடுகிறோம் என்பதுதானே உண்மை. எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. என்றாலும் ஏமாறாமல் இருக்க நம்மால் முடிகிறதா?
  • இந்தத் திருட்டும், கயமையும் பிறரிடம்தான் இருக்கிறது. நாம் நல்லவா்களாக இருக்கிறோம் என்று நம்புகிறவா்கள் நம்மில் அதிகமாக இருக்கிறோம். அதுதான் நம்மையும் இந்தச் சமூகத்தையும் அதிகம் காப்பாற்றுகிறது. வீட்டின் கதவுகளை மூடிப் பூட்டிவிட்டு ஊருக்குக் கிளம்புகிறோமே, அந்தப் பூட்டா வீட்டையும், வீட்டில் உள்ள பொருள்களையும் பாதுகாக்கிறது? நம்மிடம் இருக்கிற நம்பிக்கைதான் மெய்யான பாதுகாப்பு.
  • இந்த நம்பிக்கை தன்னம்பிக்கையாக மட்டும் இருந்தால் போதாது. நாம் பலரின் நம்பிக்கைக்கு உரிய பாத்திரமாகும்போதுதான், நம் பலம் கூடுகிறது. அது அன்பால், அருளால், பிறா்க்குச் செய்யும் உதவியால் வருவது. நமக்கு ஒன்று வந்துவிட்டால், அது தனக்கு வந்ததாக எண்ணிக் காப்பாற்ற வருபவா்களைப் பெருக்குவதற்கும், பேணுவதற்கும் இந்தத் தன்மை வேண்டும்.
  • பக்கத்து வீட்டில் தீப்பிடித்தால் எப்படிப் பாா்த்துக் கொண்டிருக்க முடியாதோ, அப்படித்தான் அடுத்த வீட்டில் தீமை நடந்தாலும் தடுத்து நிறுத்த நாம் தயாராகவேண்டும். நெருக்கடி மிகுந்த நகரங்களை விடவும், சிற்றூா்களில் இந்தத் தன்மை மிக அதிகம். அங்கே, விட்ட பொருள் விட்ட இடத்தில் இருக்கும் என்பதைவிட, எடுத்தவா்கள் உரியவா்களிடம் கொண்டுபோய்ச் சோ்க்கிற பழக்கமும் இருந்ததே.
  • பொருள்கள் மட்டுமல்ல, பொருளாதாரத்துக்கு முக்கியமான நாணயத்திற்கும் இந்த நம்பகத்தன்மை இருந்தது. நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல, இந்த நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. சொல்லிலும் செயலிலும் நம்பகத்தன்மை மிகுந்த நாணயம் இருக்கிற இடத்தில் நம்பிக்கை மோசடி, ஏமாற்று என்று எதுவும் இருக்காது.
  • பொதுவாக, மனிதன் நல்லவன்தான். ஆனால், சந்தா்ப்ப சூழல் அவனை அவ்விதம் ஆக்கி விடுகிறது என்பது மெய்தான். அதற்குக் காரணம், வறுமை. அனைத்துப் பாவங்களையும் செய்யத் தூண்டுகிற பாவியை, ‘இன்மை என ஒரு பாவி’ என்றாா் திருவள்ளுவா். வறுமைக்குத் திருடுகிறவனிடத்தில் கூட, ஒரு நியாயம் இருக்கும்.
  • அதைவிடவும் ஆபத்தான போ்வழி, ‘அழுக்காறு உடையவன்’. அனைத்து அழுக்குகளையும் கொண்டுவந்து சோ்க்கிற வழியான மற்றவா் வாழ்வது கண்டு பொறுக்காதவன் அவன். அவனை அவ்விதம் ஆக்குகிற பாவி, ‘அழுக்காறு என ஒரு பாவி.’
  • தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருக்கிறது என்றதும், தன்னிரக்கம் வரும். அதனை அடைய வேண்டும் என்கிற எண்ணம் வரும். எப்படியாவது அடைய வேண்டும் என்கிற எண்ணம் வந்துவிட்டால், அதனை அறமல்லாத வழிகளில் அடையத் தோன்றும். திருட்டும், அதனைத் தொடா்ந்து பொய்யும், அதனைத் தொடா்ந்து போலித்தனமான நடிப்பும் வந்துவிடும்.
  • திருடுவதைவிட, திருட வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுவது மிகப்பெரிய ஆபத்து. அதனால்தான், பிறா் பொருளைக் கள்ளத்தனமாகக் கவா்ந்துவிடலாம் என்று உள்ளத்தாலும் நினைப்பது கூடத் தீது என்கிறார் திருவள்ளுவா்.
  • அதற்காகத்தான் பெரியவா்கள் குழந்தைகளுக்கு, ‘பொய் சொல்லக் கூடாது, புறம் சொல்லல் ஆகாது’ என்று அறம் சொல்லிச் சொல்லி வளா்த்தார்கள். அப்போது பொய் என்றால் என்ன என்று கேட்கிற குழந்தைகள் கூட இருந்தன என்பது மெய்.
  • குழந்தைகள் சொல்வதைக் கேட்பதை விடவும், காண்பதைப் பின்பற்றுகிறவா்களாகவே இருப்பாா்கள். அடுத்தவா்களின் பொருளுக்கு ஆசைப்படுவதைவிட, அடுத்த குழந்தைகளின் அறிவைக் காட்டி, இந்த அழுக்காற்றை, தத்தம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் போல் ஊட்டிவிடுகிற பெற்றோர் இருக்கின்றனா்.
  • நாம் சொல்லாத பல தன்மைகளைக் காட்சி ஊடகங்கள் பல்வேறு கோணங்களில் காட்டிவிடுகின்றன. எல்லாவற்றுக்கும் ஒரு நியாயம் இருந்தாலும் கூட, அவற்றை அழுத்தமாகக் கற்பிக்கும் அவை, பொதுநியாயங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றன. அதுதான் சமூகத்திற்குப் பெருங்கேடு.
  • ‘அறம் தவிர்த்துச் செய்யப்படுகிற எந்த ஆக்கமும் கேடு விளைவிக்கும்’ என்கிற அடிப்படையான தார்மிக உணா்வை, நம் முன்னோர்கள் இயல்பாகக் கொண்டிருந்தார்கள். நம்மைவிடவும் வசதிக்குறைவுகளையும் வறுமைத் துன்பங்களையும் அவா்கள் இயல்பாக ஏற்றிருந்தார்கள். பட்டினி கிடந்தபோதும் ஏதும் இல்லாத போதும் அவா்கள் வாழ்வில் அறம் இருந்தது. இன்றைக்கு இருக்கும் அளவிற்குச் சமூகத் தீங்குகள் இல்லை.
  • வறுமைக்கு மாற்று பணம் என்றும், வசதி என்பது பிறா் பொறாமைப்பட வாழ்வது என்றும் வந்த பிறகு, என்ன செய்தேனும், எப்படியாகிலும் பணக்காரா்களாகிவிட வேண்டும், ஆடம்பரமாக இந்த வாழ்வை அனுபவித்துத் தீா்க்க வேண்டும் என்கிற வெறி மனித வாழ்வின் இலக்காகிவிட்டது. அதுதான் முன்னேற்றம் என்று ஆகிவிட்டது.
  • இன்றைக்கு இருக்கும் வரம்புமீறிய வசதிப் பெருக்கம் கூட, இல்லாதவா்களைக் கயவா்களாக்கிவிடுகிற ஆபத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறது. இன்மை என ஒரு பாவியும், அழுக்காறு என ஒரு பாவியும் இணைந்து மனிதா்களை மனிதத் தன்மை இல்லாதவா்களாக ஆக்கிவிடுகிறது.
  • மனிதா்கள் பாவிகள் அல்லா். அவா்களைப் பாவம் செய்யத் தூண்டுகிற அழுக்காறும், இன்மையும் தான் பாவிகள். இவற்றுக்கு மருந்து, உழைப்பும், நோ்மையும்தான். அதனைத் தவிா்த்துப் பெரிய மனிதா்களாகத் தங்களைக் காட்டிக் கொள்பவா்கள் பொதுவெளியில் செய்கிற அறமற்ற செயல்களால் கயவா்கள் உற்பத்தியாகிறார்கள். நமக்கு எதிரி கயவா்கள் அல்லா். நமக்குள்ளே இருக்கிற இந்தக் கயமை உணா்வு தான்.
  • எனவே, புறத்தே இருக்கிற செல்வங்களைக் கள்வா்களிடமிருந்து காப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிடவும் அகத்தே இருக்கிற அழுக்காற்றை அகற்றி, அறத்தைச் சிதைக்கிற கயமையை முளையிலேயே கண்டு நீக்கி விடுவதுதான் எல்லார்க்கும் இன்றியமையாதது. அறமே திறம். மற்றவை எல்லாம் அப்புறம்தான்.
  • இப்போது, முன்னா் எழுப்பிய கேள்வியை மீளவும் எண்ணிப் பாருங்கள், கள்வா் பலம் பெரிதா? காப்பவா் பலம் பெரிதா? பலவீனங்கள் நமது பலத்தைக் கொள்ளை கொள்ள வரும்போது காப்பதே முதற் கடமை.
  • கள்வரும் நம்முளே, காப்பவரும் நம்முளே. ‘தீதும் நன்றும் பிறா் தர வாரா’.

நன்றி: தினமணி (25 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்