- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். கல்வி, சுகாதாரம் அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும் என்றே அரசியல் சாசனம் கூறுகிறது. அவற்றை வழங்குவதே மக்கள் நலம் நாடும் அரசாகும்.
- மக்கள் நல்வாழ்வு பெறுவதற்காகவே திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். சமுதாயத்துக்குத் தீங்கு தரும் பழக்க வழக்கங்களை தடை செய்ய வேண்டும். அறிவார்ந்த பெரியோர்களின் உபதேசங்களைப பின்பற்ற வேண்டும். அவர்கள் இயற்றிய நீதி நூல்கள், மக்கள் கொள்ள வேண்டியவற்றையும், தள்ள வேண்டியவற்றையும் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
- நமது மகான்கள் பஞ்சமா பாதகங்களை வரிசைப்படுத்திக் கூறியுள்ளனர். மது, மாது, சூது ஆகியவை மக்களுக்குத் தீமை மட்டுமே செய்வதால் அவற்றை விட்டு விலகியிருக்க வேண்டும். இதில் சமுதாயத்துக்கும், அரசுக்கும் பெரும் பங்கு உள்ளது. என்றாலும் தனி மனிதர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
- சூதாட்டம் சமுதாயத்தைச் சீரழிக்கிறது. கிராமம் முதல் நகரம் வரை பல வடிவங்களில் அவதாரம் எடுத்துள்ளது. அறிவியல் வளர்ச்சியால் ஆன்லைனில் சூதாட்டம் நடைபெறுகிறது. இரவும், பகலும் இளைஞர்கள் இதில் ஈடுபட்டு பெரும் பொருளை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள் தினந்தோறும் வருகின்றன.
- தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா முதலிய புகையிலைப் பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. குறிப்பாக மாணவர்கள் இளைஞர்கள் இதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.
- வாயில் போட்டு மெல்லும் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருள்களுக்கு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டிருந்தது. உடல் பாதிப்புகளைத் தடுக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே இதுபோன்ற போதைப் பொருள்களுக்கு அரசு தடை விதித்தது.
- ஆனாலும் இதைப் பயன்படுத்திய பெரும்பான்மையோரால் அந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியவில்லை. அதனால் அவை இன்னமும் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு மறைத்து வைத்து விற்கப்படும் புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் அவ்வப்போது பறிமுதல் செய்து வருகின்றனர்.
- மூளையின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய அல்லது மாற்றக்கூடிய பொருள்கள் என சில பொருள்களை உலக சுகாதார நிறுவனம் பட்டியல் இட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நிகோடின், ஆல்கஹால், கஃபைன், பாக்கு போன்றவை வருகின்றன. இந்தப் பாக்கு வகைகளில்தான் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருள்கள் வருகின்றன.
- தொன்மை வாய்ந்த நமது கலாசாரத்தில் வெற்றிலைப் பாக்குடன் புகையிலை போடும் பழக்கம் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. சாதாரணமாக புகையிலை இலை பதப்படுத்தப்பட்டாலும், அத்துடன் ஏராளமான வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் வாய்ப்புண் முதல் வாய்ப்புற்று நோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அத்துடன் உடல், மன ரீதியான பாதிப்புகளையும் உண்டாக்குகிறது.
- இந்தப் புகையிலைப் பொருள்களைத் தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் இளைஞர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு ஏற்படும். பெண்களுக்கு இந்தப் பழக்கம் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு எடை குறைவு முதலிய பல்வேறு கோளாறுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- இந்தப் புகையிலைப் பொருள்களை பயன்படுத்தியதும் பழக்கத்தை ஆரம்பத்தில் குறைவான அளவில் தொடங்கினாலும் நாளடைவில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று தோன்றும். பின்னர் அதைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி காணப்படும்.
- புகையிலையில் நிக்கோடின் என்னும் நச்சுப் பொருள் உள்ளது. புகைத்தல் மற்றும் ஹான்ஸ் பழக்கத்துக்கு அடிமையாக்கும் தன்மை உள்ளது. இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு ஒன்பது லட்சம் பேர் புகையிலைப் பொருள்களால் ஏற்படும் நோய்களால் இறக்கின்றனர். புற்று நோயால் இறப்பவர்கள் 30 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.
- புகை பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய், புகைப்பவர்களுக்கு அருகிலிருந்து சுவாசிப்பவர்களுக்கும் வர வாய்ப்புள்ளது. நுரையீரல் புற்றுநோய் புகை பிடிப்பதால் வருகிறது. நுரையீரல் மட்டுமல்லாமல் வாய், தொண்டை, கணையம், கழுத்து, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்றவற்றிலும் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு, சனி, இருமல், அல்சர், பக்கவாதம் போன்றவை வரவும் அதிக வாய்ப்பு உள்ளது.
- இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து வெளியே வர வேண்டும். பல காலமாகப் பின்பற்றி வந்த பழக்கத்தை கைவிடும்போது அந்த மாற்றத்தை உடலும், மனதும் ஏற்றுக் கொள்ள சிறிது காலம் தேவைப்படும். குறிப்பாக தூக்கமின்மை, எரிச்சல், சோர்வு போன்றவை ஏற்படும்.
- இவையெல்லாம் மன அளவில் ஏற்படும் மாற்றங்களே. இதனால் எதிர்காலம் இனிமையாகும் என்பதால் ஏற்றுக் கொள்வது நல்லது.
- கடந்த 2006}ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் ஆணை பிறப்பித்தார். ஆண்டுதோறும் இது தொடர்பான அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
- இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால் அரசின் அறவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
- வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், "உணவின் பாதுகாப்பு தரத்தை உறுதி செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்பு, தரச் சட்டததில் புகையிலை உணவுப் பொருளாகாகச் சுட்டிக் காட்டப்படவில்லை. சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்துதல் சட்டத்தில் புகையிலைப் பொருள்களை விளம்பரப்படுத்தவது, முறைப்படுத்தவது பற்றியும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அதனால் புகையிலைப் பொருள்களுக்கு தடை விதிக்க இவ்விரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை. தடை விதிக்கும் அதிகாரத்தையும் வழங்கவில்லை. குறிப்பிட்ட வழக்குகளில் நீதிபதிகள், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- எனவே உணவுப் பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தையும் மீறி புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்கிறது. மேலும் இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்கிறோம்' என்று கூறினர். இதன்மூலம் தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது.
- நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கடைகளில் குட்கா முதலிய போதைப் பொருள்களை விற்பனை செய்யலாமா என்பதில் குழப்பம் இருந்து வருகிறது. இது தொடர்பாக அரசு விரைவில் தெளிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று வணிக சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
- மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், "குட்கா தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. இருப்பினும் மாநில அரசு போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. எனவே உணவுப் பொருள்களை விற்கும் மளிகைக் கடைகளில் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பொருள்களை விற்க வேண்டாம் என்று வணிக சங்க பிரதிநிதிகளுக்கு நான் கோரிக்கையாகவே வைக்கிறேன். நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்யப்படும். தேவைப்பட்டால் வரும் சட்டசபைக் கூட்டத் தொடரில் சட்டத்திருத்தம் செய்யப்படும்' என்று கூறியுள்ளார்.
- இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களினால் ஏற்படும் பேராபத்தைக் கருத்தில் கொண்டு தான் தமிழக அரசு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் அந்தப் பொருள்களை விற்பதோ பதுக்குவதோ சட்ட விரோதம் என்று கூறி அதற்குத் தடை விதித்தது.
- ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் எதிர்காலம் உச்சநீதிமன்றத்தின் கையில் உள்ளது. அத்துடன் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளனர். அதனால் மனம் உடைந்து உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
- இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒரு மசோதா இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் அதன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
- அதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் "ஒரு மாநிலத்தில் நடைபெறும் குறிப்பிட்ட விவகாரம் பற்றி இங்கு பதில் கூற இயலாது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான மசோதாவை 19 மாநிலங்கள் கொண்டு வந்துள்ளன.
- அனைத்து மாநிலங்களும் முன்வந்தால் தேசிய அளவில் மசோதா கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்கும்' என்று கூறியுள்ளார்.
- மாநில அரசாயினும், மத்திய அரசாயினும் மக்களுக்கான அரசு என்று என்று எண்ண வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைப் பற்றி நினைக்காமல் எப்போதும் நினைக்க வேண்டும். அவர்களுக்கு நன்மை செய்வதை விட முக்கியமானது, தீமை வராமல் காக்க வேண்டியது.
நன்றி: தினமணி (13 – 02 – 2023)