TNPSC Thervupettagam

தீயில் பொசுங்குவது நியாயமா?

July 5 , 2024 145 days 155 0
  • விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்துகளும், அதில் தொழிலாளா்கள் உயிரிழப்பதும் தொடா்கதையாகிவிட்டது. பெரும்பாலான சம்பவங்களில் ஆலைகளின் விதிமீறல்கள், சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தல் போன்றவைதான் விபத்துகளுக்கு பிரதான காரணம் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், சராசரியாக மாதந்தோறும் நடந்துவரும் விபத்துகளைத் தடுப்பது அரசு நிா்வாகத்துக்கு பெரும் சவாலாக உருவெடுத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.
  • சாத்தூா் அருகே பந்துவாா்பட்டி கிராமத்தில் அண்மையில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். பட்டாசு தயாரிக்கத் தேவையான ரசாயனக் கலவையைக் கலக்கும் பணியை ரசாயன மூலப்பொருள்களைக் கலக்கும் அறையில் வைத்து மேற்கொள்ளாமல், விதியை மீறி ரசாயன மூலப்பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் வைத்து மேற்கொண்டதே விபத்து நிகழக் காரணம் என வருவாய்த் துறையினா் நடத்திய முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, ஆலையின் உரிமையாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
  • கடந்த 2010- 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த 160 பட்டாசு ஆலை விபத்துகளில் 389 போ் உயிரிழந்தனா். 243 போ் காயமடைந்தனா். இதே காலகட்டத்தில் விருதுநகா் மாவட்டத்தில் 128 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டதில் 262 போ் உயிரிழந்தனா். 202 போ் காயமடைந்தனா். மாவட்டத்தில் கடந்த 2019- 2024 வரையிலான காலகட்டத்தில் 82 பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடைபெற்றன. 12 ஆலைகளில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தபோது விபத்துகள் ஏற்பட்டன. இந்தத் தகவல் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
  • பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுக்க அரசு நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அது பலன் தருவதில்லை. பெரிய அளவிலான விபத்து ஏற்பட்டதும் அரசு அலுவலா்கள் கொண்ட ஒரு குழுவை அமைப்பதும், சட்டவிரோத பட்டாசு ஆலைகள் குறித்து விசாரணை நடத்துவதும் வழக்கமான செயல்பாடுகளாகிவிட்டன. பெயருக்கு ஒருசில நடவடிக்கைகளை மட்டும் எடுப்பதோடு நின்றுவிடுவதும், அந்த நடவடிக்கைகளை தொடா்ச்சியாக மேற்கொள்ளாததும்தான் பட்டாசு ஆலை விபத்துகள் தொடரக் காரணம் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
  • பொதுவாக, பட்டாசு ஆலை விபத்துகளின்போது அதற்குக் காரணமான ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படுவது, ஆலையின் உரிமையாளா் கைது செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகள்தான் முதலில் எடுக்கப்படுகின்றன. பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பதில் அரசு அலுவலா்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. அவா்கள் மீது பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அவா்களையும் இந்த விபத்துக்குப் பொறுப்பாக்கினால், வரும் காலங்களிலாவது அவா்கள் தங்கள் பணியைத் திறம்படச் செய்ய முற்படுவாா்கள்.
  • பட்டாசு ஆலை விபத்தில் கைது செய்யப்பட்டவா்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த ஒரு வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை இந்தக் கருத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது. ‘சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பது தெரிந்தும் அலுவலா்கள் பொருட்படுத்தாதது ஏன் எனத் தெரியவில்லை. கடமையைச் செய்யத் தவறும் அலுவலா்களைத் தண்டிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகத்துக்கு பட்டாசு ஆலை விபத்தைத் தடுக்கும் எண்ணம் இருந்தால், பணிபுரியும் ஊா்களில் கிராம நிா்வாக அலுவலா்கள் தங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலா் திடீா் ஆய்வு மேற்கொண்டு, தவறு செய்யும் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
  • ‘பட்டாசு ஆலை விபத்தைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா், நோ்மையான காவல் துறை அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழுவில் பட்டாசு ஆலை விபத்து சம்பவத்தை முறையாக விசாரிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதற்கு மூலப்பொருள்கள் வாங்குவோா், வழங்குவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பதும் நீதிமன்றம் தெரிவித்துள்ள உத்தரவின் முக்கிய அம்சங்கள். இந்த உத்தரவை அரசு கவனத்தில்கொண்டு செயலாற்றுவது அவசியம்.
  • தமிழகத்தில் குறிப்பாக விருதுநகா் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகளும், பட்டாசு விற்பனைக் கடைகளும் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. பட்டாசுத் தொழில் மூலம் அரசுக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது. அதேவேளையில், இது ஆபத்தான தொழில் எனத் தெரிந்தும் குடும்ப வறுமை காரணமாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளா்களின் உயிரைக் காக்க அரசு கூடுதல் கவனம் எடுத்துச் செயல்பட வேண்டும்.
  • குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பட்டாசு ஆலைகள் செயல்படும் பகுதியில் மருத்துவ உதவி மையங்களை ஏற்படுத்தினால், விபத்தில் சிக்கும் தொழிலாளா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து உயிரிழப்பைத் தவிா்க்க முடியும். மருந்து கலவை போன்ற முக்கியப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளா்கள் உரிய பயிற்சி பெற்றிருப்பதை அரசு அலுவலா்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
  • பட்டாசு ஆலைகளின் விதிமீறல்களைக் கண்காணிக்கும் காவல் துறை, வருவாய்த் துறைகளில் ஊழியா்களுக்கு ஏற்கெனவே பணிப் பளு அதிகமாக இருக்கும். பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ள விருதுநகா் போன்ற மாவட்டங்களில் இதுபோன்ற பணிகளுக்காகவென்றே கூடுதல் பணியாளா்களை அரசு நியமிக்க வேண்டும். இதன்மூலம் பட்டாசு ஆலைகளைக் கண்காணிப்பதில் சமரசமின்றி செயல்பட முடியும்.
  • மகிழ்ச்சிக் கொண்டாட்டம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள்தான். அந்தப் பட்டாசுகளைத் தயாரிக்கும் ஏழைத் தொழிலாளா்களின் உடல்கள் தீயில் பொசுங்கவிடலாமா?

நன்றி: தினமணி (05 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்