TNPSC Thervupettagam

தீராத்தொல்லை! - பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்

December 2 , 2020 1510 days 688 0
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 2017-இல் இந்தியா உறுப்பினராக இணைந்த பிறகு, அந்த அமைப்பின் கூட்டத்தை கடந்த மாதம் நடத்தியது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) காணொலிக் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆற்றிய உரை, தெற்காசியாவின் நிஜ நிலையை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.
  •  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டதுபோல, எஸ்சிஓ அமைப்பில் தேவையில்லாமல் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையை எழுப்பும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டது. எஸ்சிஓ குழுவின் கொள்கைகளுக்கும் விதிமுறைகளுக்கும் மீறிய இந்த செயல்பாட்டை, எல்லா சர்வதேச அமைப்புகளிலும் கடைப்பிடிக்க முற்படுவது பாகிஸ்தானுக்குப் புதிதொன்றுமல்ல.
  • ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபையில் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்ப முற்படுவதும், அது நிராகரிக்கப்படுவதும் வழக்கமாகியிருக்கிறது.
  •  பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு குடியரசு துணைத் தலைவர் முன்னுரிமை அளித்து உரையாற்றியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வந்த ஒரு வாகனம் பாதுகாப்புப் படையினரால் கடந்த மாதம் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது.
  • அப்போது அதில் பயணித்துக் கொண்டிருந்த நான்கு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் எப்படி நுழைந்தார்கள் என்பது குறித்து தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
  •  ஜம்மு - காஷ்மீரில் இப்போது மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் நடைபெறுகிறது. மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு தினம் நவம்பர் 26. அதைக் காரணமாக வைத்து, மிகப் பெரிய அளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி, அந்தத் தேர்தலை முடக்க சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
  •  ஜம்முவின் சம்பா செக்டாரில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் சுரங்கப் பாதை ஒன்று கண்டறியப்பட்டது. சம்பாவில் மட்டுமல்லாமல் எல்லையை ஒட்டிய பல பகுதிகளில் இதுபோல சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்கிற ஐயப்பாடு எழுந்ததால், கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டு தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  •  ஜம்மு - காஷ்மீரில் நடக்க இருந்த மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலை பாதுகாப்புப் படையினர் முறியடித்திருக்கிறார்கள். காஷ்மீரில் நடைபெறும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலை சீர்குலைப்பதுதான், ஜெய்ஷ்-ஏ-முகமது தலைவர் மசூத் அஸாரின் மைத்துனரான அப்துல் ரவூஃப் அஸ்கர் என்பவரால் திட்டமிடப்பட்ட இந்தத் தாக்குதல்களின் நோக்கம்.
  •  நக்ரோட்டா சோதனைச் சாவடியில் நடந்த மோதலைத் தொடர்ந்து அஸ்கரின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது. நடக்க இருந்த தாக்குதல்களுக்குப் பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் ஆதரவும் இருப்பதை இந்தியப் புலனாய்வுத் துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.
  • பயங்கரவாதிகளிடமும், அவர்கள் வந்த வாகனத்திலும் காணப்பட்ட ஆயுதங்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை. அதுமட்டுமல்லாமல், எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் நான்கு பயங்கரவாதிகள் நுழைகிறார்கள் என்றால், அது தனிப்பட்ட அமைப்பின் செயல்பாடாக இருக்க முடியாது. அதற்குப் பின்னால் பாகிஸ்தான் அரசின் ஆதரவு இல்லாமல் அவர்கள் செயல்பட்டிருக்கமாட்டார்கள்.
  •  சம்பா பகுதியில் சர்வதேச எல்லையைக் கடப்பதற்கு அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எல்லையிலிருந்து 200 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதையை அமைத்திருக்கிறார்கள். மிகப் பாதுகாப்பான இந்திய - பாகிஸ்தான் எல்லையைக் கடப்பதற்கு சுரங்கப் பாதையை அமைப்பதற்கான தொழில்நுட்பமும், பொறியியல் உபகரணங்களும் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியில்லாமல் அந்த பயங்கரவாதிகளுக்குக் கிடைத்திருக்க வழியில்லை.
  • இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் கண்களில் படாமல் சுரங்கம் அமைப்பது என்றால், அது பாகிஸ்தானிய ராணுவத்தால் மட்டுமே சாத்தியம்.
  •  சம்பா பகுதியில் மட்டுமல்லாமல், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இதேபோல எத்தனை சுரங்கங்களை பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு அமைத்துக் கொடுத்து இந்தியாவுக்குள் அவர்கள் ஊடுருவ வழிகோலியிருக்கிறது என்று தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மூன்று நான்கு இடங்களில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. சில சுரங்கங்கள் மூடப்பட்டிருப்பதும் இந்திய ராணுவத்தின் கவனத்திற்கு வந்திருக்கிறது.
  • பாகிஸ்தான் தூதரை அழைத்து காஷ்மீரில் நடக்க இருந்த ஜெய்ஷ் தாக்குதல் குறித்து இந்தியா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.
  • இந்தியாவுக்கு எதிரான எல்லை கடந்த பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவிப்பதை ஆதாரபூர்வமாக இந்த சுரங்கங்கள் உறுதிப்படுத்துவதை, சர்வதேச அளவில் இந்தியா வெளிக்கொணர்ந்திருக்கிறது. அதன் மூலம் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளையும், பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கை மேலும் வலுவடைந்திருக்கிறது.
  • எல்லை கடந்த பயங்கரவாதத்தில் கவனம் செலுத்தும் காலம் வரை, பாகிஸ்தானில் வளர்ச்சி ஏற்படாது.
  • இதை அங்கேயுள்ள அரசியல்வாதிகளும், ராணுவமும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பும், மத குருமார்களும் உணராத வரையில், இந்தப் பிரச்னைக்கு விடிவு காலம் இருக்கப் போவதில்லை. எப்போதுதான் பாகிஸ்தான் இதை உணரப் போகிறதோ, தெரியவில்லை.

நன்றி :தினமணி (02-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்