TNPSC Thervupettagam

தீர்க்கப்படுமா தேர்தல் ஊழியர்களின் பிரச்சினைகள்

April 17 , 2024 268 days 230 0
  • ஜனநாயகத்தின் அடையாளம், தேர்தல்கள். இந்தத் தேர்தல்களை நடத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடுவார்கள். அப்போதிலிருந்து தேர்தல் ஆணையம் கூறும் எந்தப் பணியையும் எந்தக் காரணம் கொண்டும் அவர்களால் மறுக்க முடியாது.
  • ஆணைகளை மீற முயன்றால், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்’ பாயும். எனவே, தேர்தலை நடத்த வருவாய்த் துறை ஊழியர்களின் தொடர் பணியும், அதைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணியும் இன்றியமையாதவை ஆகின்றன.
  • அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எந்த வகையிலும் தேர்தல் பணியை மறுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்ல. மனிதாபிமானமற்ற அணுகுமுறைகள்தான் அவர்களை அவ்வாறு எண்ண வைக்கின்றன.
  • வீடு வீடாக பூத் ஸ்லிப் (வாக்காளர் விவரச் சீட்டு) விநியோகித்தல், தேர்தல் பயிற்சி வகுப்புகள், அதைத் தொடர்ந்து தேர்தலுக்கு முந்தைய நாளே வாக்குச்சாவடிக்குச் சென்று, தேர்தல் முடிந்து அனைத்தையும் ஒப்படைக்கும்வரை அங்கேயே இருப்பது எனத் தொடர்ந்து பல்வேறு பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
  • ஆனால், எந்தப் பணியிலும் அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. வாக்குச்சாவடி அலுவலர் பணியில் பட்டதாரி ஆசிரியர்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.
  • நடைமுறைச் சிக்கல்கள்: தேர்தல் பணியில் அமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் தேர்தலுக்கு முந்தைய நாள் காலையிலேயே வந்துவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் எங்கு பணிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆணை வழங்கப்படும். அங்கிருந்து நேரடியாக வாக்குச்சாவடிக்குச் சென்றுவிட வேண்டும்.
  • அந்த இடத்தில்தான் தேர்தல் நடத்துவதற்கான கருவிகளும், பிற ஆவணங்களும் வழங்கப்படும். தேர்தல் நடத்தும் பி.ஆர்.ஓ.தான் அனைத்துக்கும் பொறுப்பானவர். எனவே, அவர்களும் பெரும்பாலான பிற ஊழியர்களும் அங்குதான் இரவு தங்க வேண்டும்.
  • முந்தைய நாளே பணிக்கு வந்துவிடுவதால் அவர்களால் தேர்தல் அன்று உணவைக் கொண்டுவர முடியாது. தேர்தல் ஆணையம் அதற்குப் பொறுப்பேற்காது. காலை 5.30 மணிக்குத் தொடங்கும் பணி மாலையில் இயந்திரங்களை ஒப்படைக்கும் வரை நிறைவடையாது.
  • அதிகாலையில் கருவிகளைச் சரியான இடத்தில் பொருத்தி, தேர்தல் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு இயக்கிக் காட்ட வேண்டும். அவர்கள் ஒப்புதல் தந்த பிறகுதான், தேர்தல் தொடங்கும்.
  • உணவு இடைவேளை கிடையாது. தேர்தல் தொடங்குவதற்கு முன் இரண்டு மணி நேரம் தயாரிப்பு, தேர்தல் பன்னிரண்டு மணி நேரம், பிறகு ஒப்படைக்கக் குறைந்தது இரண்டு மணி நேரம். உணவு இடைவேளை இன்றிப் பணிபுரியச் சொல்வது இந்திய நாட்டின் நடப்புச் சட்டங்களுக்கே எதிரானது.
  • உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, தேர்தல் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்ற மனஅழுத்தம் எனப் பல்வேறு அழுத்தங்களுக்கு இடையில், பட்டினியுடன் அவர்கள் போராட வேண்டிய நிலை தொடர்கிறது.
  • அவ்வப்போது கட்சி முகவர்கள் உணவு வழங்க முன்வந்தாலும், அதை ஏற்றால் அவர்களின் முறையற்ற கோரிக்கைகளை ஏற்க வேண்டி வரலாம் என்ற அச்சத்தில், பெரும்பாலான ஊழியர்கள் அவர்களிடமிருந்து எதையும் பெறுவதைத் தவிர்த்துவிடுவர்.
  • மாலையில் தேர்தல் முடிந்த பிறகு பெட்டிகளை சீல் வைத்து, ஆவணங்களைத் தயார்செய்ய வேண்டும். பெட்டியை எடுத்துச் செல்லும் அதிகாரி முன்னதாக வந்துவிட்டால்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், பெரும்பாலும் தாமதமாகிவிடும். சில வேளை நள்ளிரவையும் தாண்டித்தான் பெட்டியை எடுப்பார்கள்.
  • அதன் பிறகு தேர்தல் ஊழியர்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவர்களது பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் / துணை ராணுவப் படையினர் அப்படியே புறப்பட்டுவிடுவார்கள். ஊழியர்கள் பத்திரமாக வீடு திரும்பினார்களா என்பதை உறுதிசெய்வதெல்லாம் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாக இல்லை.
  • சில தேர்தல் ஊழியர்கள் நள்ளிரவுக்கு மேல் புறப்பட்டு, வீடு திரும்பும் தருணங்களில் விபத்தில் சிக்கி மரணமடைந்ததெல்லாம் உண்டு. அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தேர்தல் பணி குறித்து அச்சப்படுவதற்கு இப்படிப் பல காரணங்கள் உண்டு. பெருமையுடன் செய்யவேண்டிய ஒரு பணி, இப்படியான அலைக்கழிப்புகளால் அச்சம் கலந்த பணியாக மாறுகிறது.
  • தற்காலிகத் தீர்வுகள்: வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் குறைந்தபட்சம் கழிப்பறை, குளியலறை வசதிகள் சுத்தமாகக் கிடைக்கும் வகையிலாவது ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் நேரடியாகவோ யாரையாவது நியமித்தோ முந்தைய நாள் இரவிலிருந்து வாக்குப்பதிவு நாள் இரவு வரை தேநீர், உணவு உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • உண்மையில், இவ்விஷயத்தில் பல நீண்ட காலச் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன. எனினும், தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த அடிப்படை வசதிகளையாவது தேர்தல் ஆணையம் நிறைவேற்றித் தர வேண்டும் என அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்