TNPSC Thervupettagam

தீஸ்தா நதிநீர் பிரச்னை தீருமா?

April 10 , 2021 1207 days 516 0
  • வங்கதேச சுதந்திரப் போரில், இந்தியாவின் ராஜீய ராணுவ ரதியிலான செயல்பாடுகள் முக்கிய பங்கு வகித்தன.
  • கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்கதேசம், பாகிஸ்தானிடமிருந்து 1971-இல் விடுதலை பெறுவதற்காக ஏறத்தாழ 3,900 இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி பேர், அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.
  • வங்கதேச சுதந்திரத்துக்குப் பிறகு அந்நாட்டில் நிகழ்ந்த தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை, அதனால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், ராணுவ ஆட்சி போன்ற காரணங்களால், இந்தியாவுடனான அந்நாட்டின் ராஜீய உறவு கடந்த 1991-ஆம் ஆண்டு வரை ஏற்ற, இறக்கமாகவே இருந்தது.
  • பின்னர், வங்கதேசம் மீண்டும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு திரும்பியதன் விளைவாக, கடந்த பத்தாண்டில் இரு நாட்டு உறவும் குறிப்பிடத்தக்க உயரத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, வணிகம், தகவல்தொடர்பு, எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் போதிய ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
  • வர்த்தக ரீதியாக, தெற்கு ஆசியாவில் இந்தியாவின் முக்கியக் கூட்டாளியாக வங்கதேசம் திகழ்கிறது.
  • கடந்த 2018-19 நிதியாண்டில் மட்டும் 9.21 பில்லியன் டாலர் (சுமார் ரூ.68,829 கோடி) மதிப்பில் வங்கதேசத்துக்கு இந்தியா ஏற்றுமதியும், 1.04 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,772 கோடி) மதிப்பில் அந்நாட்டிடம் இருந்து இறக்குமதியும் செய்திருக்கிறது. மேலும், வங்கதேசத்தின் பெரும்பாலான பொருள்களுக்கு இந்தியா வரிவிலக்கும் அளித்திருக்கிறது.
  • இது ஒருபுறமிருக்க, வங்கதேசத்தில் சாலை வசதி, இருப்புப் பாதை, பாலங்கள், துறைமுகங்கள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியா எட்டு பில்லியன் டாலர் (சுமார் ரூ.59,200 கோடி) கடனாக வழங்கியிருக்கிறது.
  • இந்திய சுற்றுலாத்துறை வளர்ச்சியில் வங்கேசத்தின் பங்களிப்பு மகத்தானது. அதிலும், இந்தியாவுக்கு மருத்துவச் சுற்றுலாவுக்காக வரும் வெளிநாட்டுப் பயணிகளில், வங்கதேசம் 35%-க்கும் அதிகமான பங்களிப்பை நல்குகிறது. இதன் காரணமாக இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா வருவாயில் வங்கதேசம் மட்டுமே ஆண்டுக்கு 50%-க்கும் மேல் பங்கு வகிக்கிறது.
  • அண்மைக் காலமாக இரு நாடுகளுக்கும் இடையேயான பிணைப்பு புதிய உயரத்தை எட்டியிருக்கிறது. கொல்கத்தாவுக்கும், திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கும் இடையே 500 கி.மீ. தூரம் இயக்கப்பட்டு வரும் பேருந்து சேவை, வங்கதேசத்தின் வழியாகச் சென்று, அந்நாட்டின் உள் பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கிறது.
  • இதே பேருந்து சேவையை இந்திய நிலப்பரப்பு வழியாக செயல்படுத்தினால், கிட்டத்தட்ட 1,650 கி.மீ. தூரம் வரை சுற்றிச் செல்ல நேரிடும்.

இந்தியாவுக்கு பொறுப்பு இருக்கிறது

  • இந்திய - வங்கதேச எல்லை பிரச்னையைத் தீர்க்கும் பொருட்டு, இரு நாடுகளும் கடந்த 2015-இல் எல்லை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும். இதன் மூலம், இரு நாட்டினரும் தங்கள் வசிப்பிடத்தையும், குடியுரிமையையும் தெரிவு செய்யும் உரிமை பெற்றனர்.
  • இவ்வாறாக, இருநாட்டு உறவில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்ட போதிலும், தீஸ்தா நதிநீர் விவகாரமும், எல்லையில் மனித உயிர்கள் பலியாவதும் இன்னமும் தீர்ந்தபாடில்லை. இமயமலையின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகும் தீஸ்தா நதி, சிக்கிம், மேற்கு வங்கம் வழியாக வங்கதேசம் சென்று வங்கக் கடலில் கலக்கிறது.
  • மேற்கு வங்கத்தின் ஜீவாதாரமாகத் திகழும் தீஸ்தா நதிநீர், டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மிகவும் சுருங்கிவிடுவதால், அப்போது 50% தண்ணீரை தங்களுக்கு திறந்து விட வேண்டுமென வங்கதேசம் நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே உறுதியளித்திருந்தார். ஆனாலும், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
  • இது தவிர, எல்லையில் வங்கதேச குடிமக்கள், குறிப்பாக, கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுபவர்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதாக வங்கதேசம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 1,200-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் எல்லை தாண்டியதாக இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரால் (பிஎஸ்எப்) சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் மனித உரிமைகள் குழு தெரிவிக்கிறது. கடந்த 2020-இல் மட்டும் ஐம்பது பேருக்கு மேல் கொல்லப்பட்டதாக ஒரு தரவு குறிப்பிடுகிறது.
  • ஏற்கெனவே இந்தியாவின் கூட்டாளி நாடுகளாகக் கருதப்பட்ட இலங்கை, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளின் வணிக, உள்கட்டமைப்பு, பாதுகாப்புத் துறைகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்ததால், அந்நாடுகள் சீனாவின் பக்கம் நகரத் தொடங்கின. "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக இருந்தபோதிலும், இந்த பிராந்தியத்தில் அதன் செல்வாக்கை இந்தியா இழக்க நேரிடுகிறது.
  • பூடானும் தன் பங்குக்கு பிபிஐஎன் (பூடான்- வங்கதேசம்- இந்தியா- நேபாளம்) மோட்டார் வாகனங்கள் ஒப்பந்தத்திலிருந்து விலகியது. தற்போது வங்கதேசத்தின் பொருளாதார, பாதுகாப்புத் துறைகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. வங்கதேசத்தில் 9-க்கும் அதிகமான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 6.4 பில்லியன் டாலரை (சுமார் ரூ.47,360 கோடி) உதவியாக அளிக்க வேண்டுமென கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சீனாவிடம் அந்நாடு விடுத்த வேண்டுகோளை சீனா பரிசீலித்து வருகிறது.
  • இந்தச் சூழலில், தீஸ்தா நதிநீர் பிரச்னையையும், எல்லையில் நிகழும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களையும் முடிவுக்கு கொண்டு வந்து வங்கதேசத்தை அரவணைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.

நன்றி: தினமணி  (10 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்