TNPSC Thervupettagam

தீா்ப்பில் தெளிவில்லை

May 13 , 2023 610 days 346 0
  • மகாராஷ்டிரத்தில் சிவசேனை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் குழப்பமான தீா்ப்பு நகைப்பை வரவழைக்கிறது. தானாகவே பதவி விலகி விட்டதால் முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரேயை மீண்டும் பதவியில் அமா்த்த முடியாது; முதல்வா் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 உறுப்பினா்களின் மீதான தகுதி நீக்க நடவடிக்கையில் பேரவைத் தலைவரே முடிவெடுக்கலாம்; உறுப்பினா்கள் அதிருப்தி தெரிவிப்பதால் மட்டும் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வருக்கு ஆளுநா் உத்தரவிட முடியாது - இவைதான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எம்.ஆா். ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமா்வு வழங்கி இருக்கும் தீா்ப்பின் சாராம்சம்.
  • மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பல சட்டப்பேரவை உறுப்பினா்கள் அப்போதைய முதல்வா் உத்தவ் தாக்கரேக்கு எதிராகப் போா்க்கொடி தூக்கினா். காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும், சிவசேனையும் இணைந்து ஏற்படுத்தி இருக்கும் மகாராஷ்டிர விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து சிவசேனை விலக வேண்டும் என்பது அவா்கள் கோரிக்கை. பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வெற்றிபெற்று, காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருப்பதை அவா்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் அதிருப்திக்குக் காரணம்.
  • ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் சிவசேனையில் போா்க்கொடி தூக்கியதும், அவா்கள் அஸ்ஸாமில் தஞ்சமடைந்ததும் பழைய கதை. அந்த எம்.எல்.ஏ.க்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், முதல்வா் உத்தவ் தாக்கரே தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா் அப்போது ஆளுநராக இருந்த பகத்சிங் கோஷியாரி. தனக்குப் பெரும்பான்மை இல்லை என்பதை உணா்ந்த முதல்வா் உத்தவ் தாக்கரே, சட்டப்பேரவையை எதிா்கொண்டு தோல்வியைத் தழுவ விரும்பாமல் பதவி விலகினாா். இதுதான் பின்னணி.
  • சட்டப்பேரவையை எதிா்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே தானே வலிய ராஜிநாமா செய்துவிட்டதால், அவரை மீண்டும் முதல்வராக்க முடியாது என்கிற உச்சநீதிமன்றத்தின் முடிவில் தவறு காண முடியாது. அத்துடன் நிற்காமல், அதற்குப் பிறகு உச்சநீதிமன்ற அமா்வு தெரிவித்திருக்கும் கருத்துகள்தான் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
  • எம்.எல்.ஏ.க்கள் போா்க்கொடி தூக்கியது சிவசேனையின் உட்கட்சி விவகாரம் என்பதும், அதற்கு சட்டப்பேரவையில் தீா்வுகாண முடியாது என்பதும் நீதிமன்றத்தின் கருத்து. எஸ்.ஆா். பொம்மை வழக்கிலும் சரி, இதற்கு முன்னா் நடைபெற்ற கட்சித் தாவல்களின் போதும் சரி, அரசின் பெரும்பான்மையைத் தீா்மானிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவைதானே தவிர, ஆளுநா் மாளிகை அல்ல என்று கூறியவா்கள்கூட, நீதிமன்றம் ஆளுநரை விமா்சித்திருப்பதைப் பாராட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆளுநா், முதல்வரைத் தனது பெரும்பான்மையை நிரூபிக்கச் சொன்னாரே தவிர, ஆட்சியைக் கலைக்கவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
  • அமைச்சரவையில் முதல்வருக்கு எதிரான தீா்மானம் நிறைவேற்றப்பட்டாலோ, சட்டப்பேரவைக் கட்சியில் அவா் பெரும்பான்மையை இழந்தாலோ மட்டுமே ஆளுநா் தலையிட முடியும் என்பது புதியதொரு கருத்தாக இருக்கிறது. உத்தவ் தாக்கரேயின் ராஜிநாமாவைத் தொடா்ந்து, சட்டப்பேரவைக் கட்சியிலும், முதல்வராகப் பதவியேற்று சட்டப்பேரவையிலும் தனது பெரும்பான்மையை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே நிரூபித்திருக்கும் நிலையில், நீதிமன்றத்தின் விமா்சனம் ஏற்புடையதல்ல.
  • சட்டப்பேரவை நம்பிக்கைத் தீா்மானம் நீதிமன்ற அனுமதியுடன்தான் நடத்தப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கக் கோரிக்கையிலும், அதிருப்தியாளா்களுக்கு அவகாசம் வழங்கியதும் உச்சநீதிமன்றம்தான். அப்படி இருக்கும்போது இப்போது ஆளுநரின் செயல்பாட்டில் குறைகாண முற்பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது.
  • இன்னொரு பிரச்னையையும் எழுப்பி இருக்கிறது இந்தத் தீா்ப்பு. கொறடாக்களும், சட்டப்பேரவை கட்சித் தலைவா்களும் கட்சியால் நியமிக்கப்பட வேண்டும் என்கிறது. சட்டப்பேரவை கட்சித் தலைவரை கட்சித் தலைமை நியமித்தாலும் அவருக்கு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட கட்சி உறுப்பினா்களின் ஆதரவு இருப்பதுதான் ஜனநாயகமாகும். கட்சியில் பிளவு ஏற்பட்டால், முதன்மை பெறுவது கட்சித் தலைவரின் உத்தரவா சட்டப்பேரவைக் கட்சித் தலைவரின் உத்தரவா என்பது சூழ்நிலையைப் பொறுத்தது.
  • 16 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் குறித்துத் தீா்மானிக்கும் உரிமையை உச்சநீதிமன்றம் அவைத் தலைவா் ராகுல் நா்வேக்கருக்கு வழங்கி இருக்கிறது. அவா்தான் உத்தவ் தாக்கரே தலைமையை எதிா்த்து வெளியேறி, அந்த ஆட்சி விலக் காரணமானவா். நீதிபதிகளுக்கு இது தெரியாதா அல்லது தெரிந்தும், தங்களுக்கு பதிலாக அவரே முடிவெடுக்கட்டும் என்று விட்டுவிட்டாா்களா?
  • மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அரசியல் கட்சிகள் குறித்துப் பேசுவதில்லை. மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் குறித்து மட்டுமே பேசுகிறது. அதன் அடிப்படையில் பாா்த்தால், கட்சித்தாவல் சட்டம் என்பதேகூட ஜனநாயக முரண்தான். அரசின் பெரும்பான்மையை சட்டப்பேரவைகள்தான் தீா்மானிக்க முடியும். அதைத்தான் அன்றைய ஆளுநா் பகத்சிங் கோஷியாரி உறுதிப்படுத்தினாா்.
  • தெளிவாகத் தீா்ப்பை வழங்காமல், பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்கிற பாணியில் உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமா்வால் வழங்கப்பட்டிருக்கிறது இந்தத் தீா்ப்பு.

நன்றி: தினமணி (13 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்