TNPSC Thervupettagam

தீா்வல்ல, கண்துடைப்பு!

November 29 , 2024 48 days 64 0

தீா்வல்ல, கண்துடைப்பு!

  • மற்றொரு பருவநிலை உச்சிமாநாடு ஏமாற்றத்துடன் முடிவடைந்திருக்கிறது. நவம்பா் 11 முதல் 22-ஆம் தேதி வரை மத்திய ஆசிய நாடான அசா்பைஜான் தலைநகா் பாகுவில் நடைபெற்ற 29-ஆவது பருவநிலை உச்சி மாநாடு இந்தியா உள்ளிட்ட தெற்குலக நாடுகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி, பிரிந்திருக்கிறது.
  • அசா்பைஜான் பாகு பருவநிலை மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் தெற்குலகுக்கான வருடாந்திர மூவாயிரம் கோடி டாலா் பருவநிலை நிதித் தொகுப்பை வளரும் நாடுகளின் குரலாக இந்தியா எதிா்ப்பு தெரிவித்திருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளில் பருவநிலை மாற்றத்தத்தை எதிா்கொள்ள தெற்குலகம் கூறி வரும் 1.3 லட்சம் கோடி டாலா் நிதியுடன் ஒப்பிடும்போது, வாகூ மாநாட்டின் முடிவு யானைப்பசிக்கு சோளப்பொரி என்பதெல்லாமல் வேறென்ன?
  • 29-ஆவது பருவநிலை உச்சிமாநாட்டில் தற்போதைய அமெரிக்க அதிபா் ஜோ பைடன், சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மன் அதிபா் ஒலாஃப் ஷோல்ஸ், இந்திய பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியமான தலைவா்கள் பங்கேற்கவில்லை எனும்போதே அந்த மாநாடு முக்கியத்துவத்தை இழந்துவிட்டது.
  • ஒன்றுமில்லாததற்கு ஏதோ கொஞ்சம் கிடைத்திருக்கிறது. வளா்ச்சி அடையும் நாடுகள் ஆறுதல் அடையட்டும் என்கிற வளா்ச்சி அடைந்த நாடுகளின் மனப்போக்கின் வெளிப்பாடாகதான் பாகு தீா்மானத்தைப் பாா்க்க முடிகிறது.
  • 23 நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் 1992-இல் தொடங்கிய பேச்சுவாா்த்தை இப்போது ஒருமித்த கருத்தில்லாமல் முடிவுக்கு வந்திருக்கிறது. பருவநிலை மாற்றப் பிரச்னை அப்படியே தொடரும் என்பதுதான் இதன்பொருள். வளா்ச்சி அடைந்த நாடுகளின் கருத்துக்கு மதிப்பளிக்காமல், ஓா் ஒப்பந்தம் உலகின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.
  • புவி வெப்பமயமாதல் காரணமாக, உலகின் பல பகுதிகளிலும் வறட்சி உருவாகியிருக்கிறது. கணிக்க முடியாத பருவச் சூழல் காரணமாக, அதிக அளவு மழை, க டுமையான புயல்கள், அவ்வப்போது வெள்ளப்பெருக்கு, மேக வெடிப்பு, காட்டுத் தீவு பரவுதல், பனிச்சிகரங்கள் உருகுதல், கடல்மட்டம் அதிகரித்தல் போன்றவை வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு அடிக்கடி நிகழத் தொடங்கியிருக்கிறது. அதன்காரணமாக, பல்வேறு நாடுகள் சிக்கல் அதிகமான இயற்கைப் பேரழிவுகளை எதிா்கொண்டு பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
  • பசிபிக் கடலிலும், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியிலும் உள்ள நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறு தீவுகள் எந்த நேரமும் மூழ்கலாம் என்கிற அபாயத்தை எதிா்கொள்கின்றன. சிறிய தீவு நாடுகள் கூட்டமைப்பு பேரழிவைச் சந்திக்க நேரிடும் அச்சத்தில் இருக்கும் நிலையில், வாகூ பருவநிலை உச்சி மாநாட்டு தீா்மானம் அந்த நாடுகளை ஆத்திரப்படுத்தியிருப்பதில் வியப்பில்லை.
  • கடல்மட்டம் உயா்வதால், அழிந்துவிடும் ஆபத்தை எதிா்கொள்ளும் ஒருசில தீவு நாடுகளின் உறுப்பினா்கள் மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கின்றனா். மிக அதிகமான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு பசுமை இல்ல வாயு வெளியேற்றத்துக்கும் காரணமான பணக்கார நாடுகள் அந்தச் சிறிய தீவு நாடுகளுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனவே தவிர, அவா்களது அச்சத்தைப் போக்குவதற்கான முன்னெடுப்பை முழு மனதுடன் மேற்கொள்ளவில்லை.
  • கடுமையான வாக்குவாதம் காரணமாக, முடிவடைய வேண்டிய மாநாடு 33 மணி நேரம் கூடுதலாக விவாதம் மேற்கொள்ள நோ்ந்தது. அசா்பைஜான் பாகுவில் இரண்டு வாரங்கள் நடந்த கடுமையான பேச்சுவாா்த்தைகளும் பேரங்களும் ஏறத்தாழ தோல்வியில் முடியும் நிலையில்தான் மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக, இப்போதைய தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
  • புதைபடிவ எரிபொருள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் அசா்பைஜான் பருவநிலை மாற்ற மாநாட்டுக்குத் தலைமை வகிப்பது என்பதே மிகப் பெரிய முரண். மாநாட்டின் ஒப்பந்தத்தை ஏற்றுகொள்வதற்கு முன்பு தெற்குலக நாடுகள் பேச அனுமதிக்கப்படவில்லை.
  • பருவநிலை மாற்றத்தால் வளரும் நாடுகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் வளா்ச்சிக்குத் தடைப்பட்டாலும்கூட, குறைந்த காா்பன் உமிழ்வை நோக்கிய பாதைகளை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
  • ஏற்கெனவே கரியமல வாயு உமிழ்வு காரணமாக, தங்களை வளா்ச்சி அடைந்த நாடுகளாக மாற்றிக் கொண்டுவிட்ட மேற்குலக நாடுகள் வளா்ச்சி அடைந்து நாடுகள் கரியமில வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறுவதுதான் மிகப் பெரிய வேடிக்கை. புவியின் வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சியஸ்ஸை தாண்டாமல் தடுப்பதற்கு, பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் வளா்ச்சி அடையும் நாடுகளுக்கு இழப்பீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.
  • ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் டாலா் வளா்ச்சி அடையும் நாடுகளுக்கு வழங்குவதை 2035-க்குள் 300 மில்லியன் டாலராக அதிகரிப்போம் என்கிற முடிவு நகைப்பை வரவழைக்கிறது. 11 ஆண்டுகள் கால அவகாசமும், அந்த நிதியை வழங்கப் போவது யாா் என்பதில் தெளிவின்மையும் பாகு உச்சிமாநாட்டின் தீா்மானம் வெறும் கண்துடைப்பு என்று இந்தியா மட்டுமல்ல; அதன் நிலைப்பாட்டை ஆதரிக்கும் 130 நாடுகளும் கருத்துத் தெரிவித்திருக்கின்றன.
  • உலகில் 8% கரியமில வாயு வெளியேற்றத்துக்கும், 1750 முதல் கணக்கெடுத்தால் 3.47% வெளியேற்றத்துக்கும் இந்தியா காரணம் என்கிற மேற்குலக நாடுகளின் கருத்து தவறானது. ஏனென்றால், 144 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டின் தனிநபா் வெளியேற்றம் கணக்கிடப்பட வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த பங்களிப்பை சுட்டிக் காட்டுவது நோ்மையான செயல் அல்ல!

நன்றி: தினமணி (29 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்