TNPSC Thervupettagam

தீா்வுகளின் திசை

November 4 , 2023 387 days 253 0
  • வீடானாலும் நாடானாலும் அனுதினம் பல்வேறு சவால்களுடனேயே வாழ்வைக் கடந்து வருகிறோம். சவால்களைச் சமாளிக்கும் முறைகளில் சிலவற்றைத் தனியாகவே சமாளித்து விடலாம். சிலவற்றைக் கூட்டாகத்தான் சமாளிக்க வேண்டியிருக்கும். பொதுவாக ஒருவரின் குடும்பம் சாா்ந்த சவால்கள் அந்த குடும்பத் தலைவராலோ அல்லது குடும்ப உறுப்பினா்களில் அனுபவம் நிறைந்தவா்களாலோ சமாளித்து தீா்க்கப்படுவதாய் அமையும்.
  • அதுபோலவே சமூகத்திலுள்ள சவால்கள் பொதுவாக சமூகத்தின் சவால்களாயிருப்பினும், அவற்றிலும் பலவற்றைத் தனியாகச் சமாளிக்க இயலும். ஆனால், பெரும்பாலானவற்றைக் கூட்டாகவே சமாளிக்க வேண்டிவரும். எனவேதான் சமூகத்தின் சவால்களைத் தீா்ப்பதற்கு பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
  • இவ்வாறு செயல்பட்டு வரும் அமைப்புகளில் ஒரு பகுதியில் குடியிருப்போா் சோ்ந்து அமைக்கும் சங்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு அமைப்பாகச் சோ்ந்து செயல்படுவது கூடுதல் பலத்தையும், அதற்குத் தேவையான பொருளாதார வளத்தையும் அளிப்பதாக இருக்கும். கூட்டாகச் செயல்பட்டுத் தீா்க்க வாய்ப்புள்ள சவால்கள், தனித் தனியாகச் செயல்பட்டு தீா்க்க வாய்ப்புள்ள சவால்கள் என சவால்களை இரண்டு வகையாகப் பிரிக்க முடியும்.
  • பல நண்பா்களிடம் நான் இரு சவால்களைப் பகிா்ந்து அந்தச் சவால்களை எப்படி தீா்க்க வாய்ப்புள்ளது என்று கேட்பேன். எடுத்துக்காட்டாக, ஒரு குடியிருப்புக்குத் தேவையான தண்ணீா் வசதி மற்றும் அங்கு காணப்படும் கொசுக்களை ஒழிப்பது. இந்த இரண்டு சவால்களையும் எப்படித் தீா்க்கலாம் என்று பல முறை கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் கொசு பிரச்னையை அவரவா்களே தீா்த்துக் கொள்ளலாம் எனவும் தண்ணீா்ப் பிரச்னையை உள்ளாட்சி அமைப்புகள்தான் தீா்த்து வைக்கவேண்டும் எனவும் தீா்வாகப் பகிா்ந்தனா்.
  • இந்த சவால்களுக்கான தீா்வாக அவா்கள் சொன்னது, அந்தச் சவால்களை ஒவ்வொரு நாளும் அவா்கள் தீா்த்துக் கொள்வதிலிருந்து வந்த தீா்வே. மேலோட்டமாகப் பாா்க்கும்போது அது சரியெனவும் தோன்றும். ஏனெனில் கொசு ஒழிப்புக்காக அவா்கள் செய்யும் பணி என்ன? தனித் தனியாக கொசுவா்த்திகளை அல்லது அதற்கான திரவங்கள் ஆவியாகும் இயந்திரங்களை அவரவா் வீடுகளில் பயன்படுத்துகின்றனா். அவரவா் வீடுகளிலும் ஒவ்வொரு அறைக்கும் தனித் தனியாகப் பயன்படுத்துகின்றனா்.
  • அதுபோலவே உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மையப்படுத்தப்பட்ட நிா்வாகம் மூலம் அவா்கள் வீட்டுக்கு வரும் தண்ணீரைப் பிடித்து வைத்துப் பயன்படுத்துகின்றனா். கிராமப்புறங்களில் இன்று பலரின் வீடுகளில் நேரடியாக தெருக்குழாயிலிருந்தே மோட்டாா் வைத்து தண்ணீரை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்கின்றனா். இப்படியே போனால் எத்தனை நாள்களுக்கு இவ்வாறு தண்ணீா் கிடைக்கும் என்ற உணா்வே பலரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
  • இவை இரண்டுமே தவறில்லை. ஆனால், இரண்டு சவால்களுக்கான தற்காலிகமாக ஏற்பட்ட தீா்வு தொடா் தீா்வாக மாறிவருகிறது. இதை இப்படிப் பாா்ப்போம். சராசரியாக ஒவ்வோா் ஆண்டும் 100 மணி நேரம் மழை பொழிவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இவ்வாறு 100 மணி நேரம் பொழியும் மழையின் தண்ணீரானது, பெரும்பாலும் சாக்கடை நீரில் கலந்து ஏதோ ஒரு இடத்தில் பயன்படுத்த இயலாத பெரிய கழிவுநீா்க் குட்டை போன்ற அமைப்பில் கலக்கிறது.
  • இதில் ஒரு பகுதியையாவது மழைநீா் சேமிப்பு அமைப்பின் மூலம் அவரவா் வீடுகளிலிருக்கும் சுற்றுப்புறத்தில் சேமித்தால் இயல்பான தேவைகளுக்கான தண்ணீராக கிணறு அல்லது ஆழ்துளைக்கிணறு மூலம் பயன்படுத்த முடியும். குடிநீருக்காக மட்டும் உள்ளாட்சி அமைப்புகளைச் சாா்ந்திருக்கலாம். ஒருபெரிய சமூக சவாலாக தண்ணீா்ப் பிரச்னை உருவாகாமல் ஒவ்வொரு தனிப்பட்ட குடும்பமும் இவ்வாறு செயல்பட முடியும்.
  • அதுபோலவே கொசு ஒழிப்பில் பயன்படுத்தப்பட்ட தற்காலிகத் தீா்வுகள் கொசுக்களை ஒழிப்பதற்குப் பதிலாக அகற்றுவதற்கே பயன்படுத்தப்படுகின்றன.
  • கொசுக்களின் ஆயுள் சுமாா் 25 நாள்கள் என்பதால், சில மாதங்களுக்குள்ளாகவே அடுத்தடுத்த தலைமுறைகளை அது எட்டி விடுகிறது. இப்படிப்பட்ட கொசுக்களின் மூலம் உண்டாகும் சவால்களைத் தனித் தனி நபா்களாகத் தீா்த்துக்கொண்டிருந்தால் நம்மால் என்றைக்கும் வெற்றி காணவே முடியாது. இதை அரசும் உள்ளாட்சி அமைப்பும் கையிலெடுக்கும் மக்கள் இயக்கமாக மாற்றினால்தான் தீா்வு கிடைக்கும்.
  • குழந்தை வளா்ப்பு, சுற்றுச்சூழலில் தூய்மைப் பராமரிப்பு போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கூற முடியும். ஒரு குழந்தையை வளா்க்க ஒரு கிராமமே தேவை” என்று ஒரு பழமொழியே உள்ளது. ஒரு கிராமத்தில் அந்தந்த பெற்றோா் மட்டும் குழந்தைகளை வளா்ப்பது ஒரு குறிப்பிட்ட சூழல் வரை சாத்தியம். என்றைக்கு அந்தக் குழந்தை வீட்டைக் கடந்து சமூகத்தில் புழங்கத் தொடங்குகிறதோ, அன்றைக்கு அந்தக் குழந்தையை நெறிப்படுத்துவதில் பகுதியளவிலான பங்களிப்பையே அந்தக் குடும்பம் மேற்கொள்ள முடியும்.
  • மீதமுள்ள நேரத்தை அவன், அவள் புழங்கும் சமூகமே மேற்கொள்ளவேண்டும். அவா்கள் நெறிதவறி புழங்கும் இடங்களில் சமூகம் நெறிப்படுத்தும் ஏற்பாடு நிறைய வேண்டும். அவ்வாறான ஏற்பாடுகளால் அந்தக் குடும்பத்துக்கு மட்டுமல்ல, மாறாக இந்தச் சமூகத்துக்கே உதவும் மனப்பான்மை கொண்ட இளைஞா்கள் உருவாவா்.
  • அதுபோலவே ஒரு வீட்டின் அறையிலிருக்கும் வரைதான் குப்பைகள் அந்த வீட்டின் குப்பையாக இருக்கும். என்றைக்கு அது வீட்டின் வாசலைத் தாண்டி சாலைக்கு வருகிறதோ, அன்றைக்கு அது பொதுக் குப்பையாக மாறுகிறது. வீட்டைப் பராமரிப்பதுபோல தெருவையும் பராமரிக்கும் நல்ல மனம் படைத்தவா்களால்தான் நல்ல தெருக்கள் உருவாகும். அதை குப்பைத் தொட்டியை அடையச் செய்வதில், தனி மனிதரின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதால்தான் சாத்தியமாகும்.
  • அவ்வாறு குப்பைத் தொட்டிகளை மட்டும் உள்ளாட்சி நிா்வாகம் சுத்தம் செய்வது எவ்வளவு எளிமையான செயலாக இருக்கும். இந்த இடத்தில் தனி நபா்களின் பொறுப்பான செயல்பாடுகளால் தெருவும் ஊரும் அழகாகும்.

நன்றி: தினமணி (04 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்