TNPSC Thervupettagam

துக்கச் செய்தி மரண அறிவிப்பு

November 6 , 2023 386 days 317 0
  • அண்மையில் ஓர் ஆன்மிகப் பீடாதிபதி காலமானார். அவரது மறைவை, ‘மாரடைப்பால் இறந்தார்’ எனச் சில ஊடகங்கள் குறிப்பிட்டன. இதைப் பலர் விமர்சித்தனர். அதன் பின்னால் உள்ள அரசியலைப் போலவே அவர்களைக் கவலைக்குள்ளாக்கிய பண்பாட்டு அம்சமும் முக்கியம் அல்லவா?

மரணம் பற்றிய குறிப்புகள்

  • ஆதீனங்களின் மறைவை, முக்தி அடைந்தார், சமாதியானார் என்று குறிப்பது வழமை. அப்படி மரியாதை தொனிக்க இம்மறைவைக் குறிக்க வில்லை என்பதுதான் இணையவாசிகளின் குற்றச்சாட்டு. முக்தியிலும் பரமுக்தி, பதமுக்தி என்று இருப்பதுபோல, சமாதியிலும் ஜல சமாதி, ஜீவ சமாதி எனப் பல வகை உண்டு.
  • சாதாரண மனிதர்களின் இறப்புகளும் பொருள் நிறை சொற்களாலேயே விளக்கப்பட்டன. ‘இங்கிலாந்தில், சென்ற வியாழக்கிழமை அன்று டாக்டர் மாதவன் நாயர் காலகதி அடைந்து விட்டதாகக் கேட்டு மிகவும் விசனப்படுகிறோம்’ (சுதேசமித்திரன், 22 ஜூலை 1919). இதில் இடம்பெறும் காலகதி என்ற சொல், காலமானார் என்பதன் முந்தைய வடிவம்; ‘காலத்தினிடை’ என்று பொருள்படுவது.
  • வ.வே.சு. ஐயர் 1925 ஜூன் 3ஆம் தேதி பாபநாசம் அருவியில் தவறி விழுந்து மாண்டுபோன இறப்புச் செய்தியை, ‘வ.வே.சு ஐயர் தேக வியோகம் ஆனார்’ என்று ‘சுதேசமித்திரன்’ (6 ஜூன் 1925) எழுதியது. தேகத்தைத் துறந்தார் என்பதுதான் அந்த வரி வெளிப்படுத்தும் பொருள். வியோகம் என்பது பிரிதல், விடுதல் என்று பொருள்படும் சம்ஸ்கிருதச் சொல். வ.வே.சு. ஐயரின் உயிர், இந்தத் தேகத்தை விட்டுப் பிரிந்தது.
  • மலையாளத்தில் இவர் என்று சொல்ல இத்தேகம் என்பர். சைவர், இறந்தோருக்கு, ‘சிவலோகப் பதவி’ தந்தனர்; வைணவரோ ‘வைகுந்தப் பதவி’ பெறவைத்தனர். கர்த்தருக்குள் நித்திரை அடையச்செய்வது கிறித்துவ மரபு. இறைவனடி சேர்ந்தார் என்ற வழக்கும் உண்டு. இறந்த உடலைக் கடவுளின் திருஅடியிலும், நீழலிலும் கிடத்துவதைவிட ஒப்புக்கொடுத்துவிடுவது சுருக்கமான வழிதானே!

அகாலமும் அமரத்துவமும்

  • புதுமைப்பித்தன் 1948இல் அகால மரணம் அடைந்தபோது, ‘புதுமைப்பித்தன் சிவசாயுஜ்யம் அடைந்தார்’ என்று எழுதினார் மஞ்சேரி ஈச்வரன். இறைவனது உலகத்தில் இருத்தல் சாலோகம், அவனது அருகில் உறைதல் சாமீபம் (இதுதான் சமீபம் என்று இப்பொழுது வழங்குகிறது), அவனது உருவத்தைப் பெறுதல் சாரூபம், அவனோடு இரண்டறக் கலந்துவிடுதல் சாயுஜ்யம். தெலுங்கில் இன்றும் சிவசாயுஜ்யம் பெருவழக்காக இருக்கிறது. இதை விளக்கும் திருமந்திரப் பாடல் (1509) ஒன்று உண்டு. புதுமைப்பித்தன் மறைவை, “கற்பனைக்கு அடங்காத அநியாயம்” என்று வ.ரா. குறிப்பிட்டார். பாரதி, புதுமைப்பித்தன் போன்ற மேதைகள் அகாலத்தில் மறைவது, கற்பனைக்கு அடங்காத அநியாயம்தானே!
  • 1969இல் அண்ணா காலமானபோது, ‘அமரரானார்’ என்ற சொல் பத்திரிகைகளுக்கு வந்துவிட்டது. அதன் முதற்பொருள் மேல் உலகவாசியானார் என்பதுதான். இன்னும் விரிவாக்கிச் சொன்னால் ‘சாகாதவர்’. ஆனால், அமரர் என்ற சொல்லுக்கு இன்று இறந்தவர் என்று பொருள். அமரர் ஊர்தியிலும் அது ஏறிவிட்டது. மரியாதையாகவும் அச்சொல் தொனிக்கிறது.
  • ‘டால்ஸ்டாய் அஸ்டா போவா ரயில் நிலையத்தில் மரணமடைந்தார்’ என்ற வரியை மெய்ப்பு பார்த்த நண்பர் மரணமடைந்தார் என்பதை அடித்துவிட்டு, காலமானார் என்று செம்மை செய்திருந்தார். அவரே வேறொரு இடத்தில் ‘விஷம் குடித்துச் செத்தார்’ என்ற வரியிலிருந்த ‘செத்தார்’ என்பதை இறைவனடி சேர்ந்தார் என்று மாற்றினார்.
  • அன்பும் பண்பும் உடையது அவரது பேனா. ‘திருமலம் செற்றார்’ (திருமந்திரம், 1907) என்ற தொடரை, ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அழித்தார் என்று விளக்குவர் உரையாசிரியர். செற்றார் என்ற உயர் வழக்கின் பிந்தைய வடிவமே செத்தார் என்பது. ஆனால், இன்று செத்தார் என்பது கேவல வழக்கு.

இறப்பதும் கடப்பதும்

  • பழந்தமிழில், இறந்தார் என்ற சொல்லுக்குக் கடந்தார் என்பதுதான் முதற்பொருள். இறப்பை passed away என்று ஆங்கிலத்தில் சொல்வதையும் இவ்விடத்தில் நினைத்துப் பார்க்கலாம். இலங்கையில் ஓர் இடத்துக்கு ஆனை இறவு என்று பெயர். அது யானைகள் கடந்துபோகும் ஒரு பகுதி. அந்த இடத்துக்கு ஆங்கிலத்தில் எலிபன்ட் பாஸ் (Elephant Pass) என்றுதான் பெயர். இறவு என்பது கடத்தல். அதிலிருந்து இறந்தார் என்ற சொல் பிறந்தது. பூ உலகைக் கடந்து சென்றது அவ்வுயிர் என்பது நுவலாப் பொருள்.
  • காலமாவதும் ஒரு நம்பிக்கை தொடர்பானதுதான். ஒரு ரிக் வேத சுலோகத்தை விளக்கும் சித்பவானந்தர் இப்படிச் சொல்கிறார். கடவுளே கால சொரூபமாய் இருக்கிறான் (ப.793, திருவாசகம் உரை). கால சொரூபியாக இருக்கும் கடவுளை அடைந்தார் என்பதை, ‘காலமாக ஆனார்’ என்று நாம் சொல்லுகிறோம். காலமானார் என்ற சொல்லாட்சி பெருவழக்காகவும் இன்று ஆகிவிட்டது.
  • ‘துஞ்சல் பிறப்பு அறுப்பான்’ (திருப்பொன்னூசல், திருவாசகம்) என்ற வரிக்கு இறைவன் இறப்பையும் பிறப்பையும் அறுப்பவன் என்று பொருள். இலக்கியத்தில் இறப்பைக் குறித்தது துஞ்சல். கிள்ளிவளவனைக் குளமுற்றத் துஞ்சியவன் என்று தமிழ் படித்தவர்கள் நினைவுகூருவர். கண் மூடினார் என்ற இலக்கிய வழக்கும் இப்போது அருகிவிட்டது.
  • பெரிய காரியம் என்ற மங்கல வழக்கும் தமிழில் உண்டு. பூமி லாபம் என்ற சொல்கூடப் பழந்தமிழில் உண்டு. மடிந்தார், மாண்டார், பலி, மாய்ந்தார், அகஸ்மாத்து மரணம், உதிர்ந்தார் என்பனவும் மரணத்தைக் குறிக்கும் பல்வேறு சொற்கள்.
  • இந்த எல்லாச் சொல்லும் ஆழ்ந்த பொருள் குறித்தனவே. ஏறக்குறைய இந்தச் சொற்கள் எல்லாமே சமயப் பண்பாட்டில் பிறந்த சொற்கள். சமயச் சொற்களைத் தவிர்த்த பெரியார், உயிர் நீத்தார், பிரிந்துவிட்டார், மறைந்துவிட்டார், முடிவெய்தினார், இயற்கை எய்தினார் என்பது போன்ற மதச்சார்பற்ற சொற்களை மரணத்தைக் குறிக்கப் பயன்படுத்தினார். ஓர்மையோடுதான் பெரியார் இதைச் செய்தார் என்பதைத் தமிழ்நாட்டினர்க்குச் சொல்லத் தேவையில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்