TNPSC Thervupettagam

துணிச்சலான முடிவு!

August 25 , 2020 1607 days 737 0
  • லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து சீனா நுழையத் தலைப்பட்டது ஒருவகையில் நல்லதாகத் தோன்றுகிறது.
  • நமது பாதுகாப்பு அமைச்சகம் விழித்துக் கொண்டு, எல்லைப்புறத்தில் போராடும் ராணுவ வீரா்களின் ஆயுதங்கள் குறித்தும், தேவையான தளவாடங்கள் குறித்தும் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் விளைவுதான் பாதுகாப்பு அமைச்சரின் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அறிவிப்பு.

ராணுவ தளவாட உற்பத்தியில் தனியார்

  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக ராணுவத்துக்காக இறக்குமதி செய்யப்படும் 101 தளவாடங்கள் தடை செய்யப்படுவதாக ராணுவ அமைச்சா் அறிவித்திருக்கிறார்.
  • அவை இன்னென்ன என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெளிவான பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஏற்கெனவே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தளவாடங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
  • இதுவரை, உள்நாட்டுத் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதே தவிர, அதற்கான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
  • ராணுவத்தில் தனியார் பங்களிப்பா, இது ஆபத்தல்லவா என்று அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. இத்தனை ஆண்டுகளாக அரசு நிறுவனங்கள் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்தும்கூட, இந்திய ராணுவத்தின் தேவைகளை இறக்குமதி மூலம்தான் நாம் நிறைவு செய்து கொண்டிருந்தோம் எனும்போது, அந்நிய தனியார் நிறுவனங்களைவிட இந்திய தனியார் நிறுவனங்களிடமிருந்து தளவாடங்களைப் பெறுவதில் தவறொன்றும் இல்லை.
  • பாதுகாப்பு அமைச்சகம் 101 தளவாடங்களின் இறக்குமதிக்குப் படிப்படியாகத் தடைவிதித்து, இந்தியாவில் அவை தயாரிப்பதை ஊக்குவிப்பது என்கிற முடிவை திடீரென்று எடுத்துவிடவில்லை.
  • கடந்த பல ஆண்டுகளாகவே இது குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. இப்போதும்கூட காலாட்படை, விமானப்படை, கடற்படை, டி.ஆா்.டி.ஓ. என்கிற பாதுகாப்பு ஆராய்ச்சி - வளா்ச்சி நிறுவனம், பாதுகாப்புத் துறையில் அரசு நிறுவனங்கள், ராணுவ தளவாட தொழிற்சாலை ஆணையம், தனியார் துறை ஆகிய தொடா்புடைய அனைத்துத் தரப்பினரிடமும் கலந்தாலோசித்துத்தான் இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதால், இதில் குறைகாண எதுவும் இல்லை.

ராணுவ தளவாட இறக்குமதி

  • அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் அடுத்தபடியாக பாதுகாப்புக்காக மிக அதிகமாக செலவழிக்கும் நாடு இந்தியா. உலகிலேயே ராணுவ தளவாட இறக்குமதியில் நாம் இரண்டாவது இடம் வகிக்கிறோம்.
  • 2020 - 21 நிதியாண்டுக்கான பாதுகாப்பு ஒதுக்கீடு 62.85 பில்லியன் டாலா். அதாவது, சுமார் ரூ.4.9 லட்சம் கோடி. அப்படி இருந்தும்கூட, இந்திய ராணுவம் முக்கியமான அடிப்படைத் தேவைகளில்கூட தளவாடங்களும், நவீன உபகரணங்களும் இல்லாமல் தவிக்கிறது என்கிற உண்மை மிகப் பெரிய வேதனை.
  • அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில், சுமார் ரூ.4 லட்சம் கோடி அளவிலான ராணுவ தளவாடங்கள் பெறுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருக்கிறது. இந்த நிதியாண்டில் மட்டும் உள்நாட்டு உற்பத்தியாளா்களிடமிருந்து ராணுவத்திற்கு தளவாடங்கள் வாங்க ரூ.52,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
  • 2015 முதல் 2020 வரையிலான ஐந்தாண்டுகளில் மட்டும் ரூ.3.5 லட்சம் கோடிக்கான 260 ஒப்பந்தங்கள், ராணுவ தளவாட இறக்குமதிக்காக செய்யப்பட்டிருக்கின்றன.
  • இனிமேல், அவை அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் ஒன்றன்பின் ஒன்றாக இந்திய உற்பத்தியாளா்களுக்கு மட்டுமே தரப்படும் என்பதுதான் இந்த அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்படும் செய்தி.
  • தனியார் உற்பத்திக்காக இறக்குமதி தடை செய்யப்பட்டிருக்கும் பட்டியலில் கைத்துப்பாக்கி போன்ற சிறிய ஆயுதங்கள் மட்டுமல்ல, ஆா்டிலரி கன்ஸ், அசால்ட் ரைஃபில்ஸ், போர்க் கப்பல்கள், சோலார் சிஸ்டம்ஸ், தளவாடங்களை கொண்டு செல்லும் விமானங்கள், ராடார்கள், ராணுவ ஹெலிகாப்டா்கள் உள்ளிட்ட ராணுவத்துக்கு முக்கியமான பல தேவைகள் சோ்க்கப்பட்டிருக்கின்றன.

உள்நாட்டில் உற்பத்தி

  • போர் மூன்டால், அவசரத் தேவைக்கான பல ராணுவத் தேவைகள் ஏற்படும். அப்போது நாம் இறக்குமதியை நம்பி இருக்க முடியாது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சீனாவும் நம்மைப்போல ராணுவ தளவாட இறக்குமதியை நம்பித்தான் இருந்தது.
  • தனது ஜிடிபியில் 2%-ஐ ஆராய்ச்சிக்கும், உற்பத்திக்கும் ஒதுக்கி, கடந்த ஆண்டு நிலவரப்படி உலகின் ஐந்தாவது பெரிய ராணுவ தளவாட ஏற்றுமதியாளராக சீனா மாறியிருக்கிறது. அதற்குக் காரணம் உள்நாட்டு உற்பத்தி.
  • இந்த தளவாடங்களை அரசு நிறுவனத்தில் தயாரிக்க முடியாதா என்று கேட்கலாம். இத்தனை ஆண்டுகளும் அதைத்தான் செய்து கொண்டிருந்தோம்.
  • 41 ராணுவ தளவாடத் தொழிற்சாலைகளும், 9 அரசுத்துறை நிறுவனங்களும் இருந்தும், நமது முப்படைகளும் இறக்குமதியை நம்பித்தான் இயங்கி வந்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • இந்தியக் காலணிகளுக்கு உலகச் சந்தையில் அதன் தரத்துக்காக வரவேற்பு நிலவுகிறது. ஆனால், இந்திய ராணுவ வீரா்கள் உலகத்திலேயே மோசமான தரத்துடன் கூடிய காலணிகளுடன்தான் எல்லையைப் பாதுகாக்கிறார்கள் என்பது நினைவிருக்கட்டும்.
  • தனியாரை ராணுவ தளவாட உற்பத்தியில் இணைத்துக்கொண்டு, இறக்குமதியைக் குறைப்பதும், தளவாட ஏற்றுமதியை அதிகரிப்பதும் வரவேற்கத்தக்க முயற்சி.
  • அதே நேரத்தில், தனியார் உற்பத்தியாளா்களுக்குப் போதிய அளவில் ராணுவக் கொள்முதல் உறுதி செய்யப்பட்டு, இடைத்தரகா்கள், கமிஷன்கள், கையூட்டு போன்றவை இல்லாமல் இருப்பதும் உறுதிப்பட வேண்டும். இல்லாவிட்டால், அறிவிப்பின் நோக்கம் நிறைவேறாது என்பதை இப்போதே கூறிவிடலாம்!

நன்றி: தினமணி (25-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்