- உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளர், நாவலாசிரியர் குஷ்வந்த் சிங் (Khushwant Singh) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
- பாகிஸ்தானில் பிறந்தவர். டெல்லி, லாகூரில் கல்லூரிப் படிப்பை முடித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
- லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1947-ல் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றினார். மத்திய திட்டக்குழுவுக்காக 1957-ல் ‘யோஜனா’ மாத இதழைத் தொடங்கினார்.
- அகில இந்திய வானொலியில் சிறிது காலம் பணியாற்றினார். தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி, இந்துஸ்தான் டைம்ஸ், நேஷனல் ஹெரால்டு ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் இவரது ‘வித் மாலிஸ் டுவார்ட்ஸ் ஒன் அண்ட் ஆல்’ கட்டுரை மிகவும் பிரபலம். மாநிலங்களவை உறுப்பினராக (1980-1986) இருந்தார். தன் படைப்புகள் மூலம் சமூகம், மதம், அரசியல் என அனைத்து விஷயங்களிலும் வெளிப்படையான கருத்துகளைத் தெரிவித்தவர்.
- கவிதைகள் இவருக்கு மிகவும் பிடிக்கும். பஞ்சாபி, உருதுக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். நையாண்டித்தனமான, சமரசம் செய்துகொள்ளாத, துணிச்சலான எழுத்துக்குப் பெயர்பெற்றவர். அமிர்தசரஸ் பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து, தனக்கு அளிக்கப்பட்ட பத்மபூஷன் விருதை அரசிடம் திருப்பித் தந்தார்.
- முற்போக்குச் சிந்தனையாளர், மனிதநேயம் மிக்கவர். இவரது ‘டிரெய்ன் டு பாகிஸ்தான்’ என்ற முதல் நாவல், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை மையக் கருவாகக் கொண்ட வரலாற்று நாவல். பல நாவல்கள், சிறுகதைகள், நகைச்சுவைப் புத்தகங்கள் எழுதியுள்ளார். ‘ட்ரூத் லவ் அண்ட் எ லிட்டில் மாலிஸ்’ என்பது இவரது சுயசரிதை நூல். ஆங்கிலம் மட்டுமின்றி, பஞ்சாபி, உருது, இந்தியிலும் எழுதியுள்ளார்.
- உலகம் முழுவதும் இவருக்கு வாசகர்கள், ரசிகர்கள் உள்ளனர். இவரது புத்தகங்கள் தொடர்ந்து பல பதிப்புகள் வெளியாயின. இறுதிவரை எழுதிக்கொண்டே இருந்தார்.
- கடவுள் நம்பிக்கை இல்லாதவர். 2011-ல்‘அகானிஸ்ட் குஷ்வந்த் சிங்: தேர் ஈஸ் நோ காட்’ என்றே ஒரு புத்தகம் எழுதியுள்ளார். ‘கடவுள் நம்பிக்கை இல்லாமலேயே ஒருவர் புனிதமாக இருக்க முடியும். மறு பிறவி, இறுதித் தீர்ப்பு, சொர்க்கம், நரகம் ஆகியவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை’ என்பது அவரது கொள்கை. பாராட்டுகளைப் பெறுவதோடு சர்ச்சைகளையும் கிளப்பிவிடுவது அவரது எழுத்தின் தனியம்சம்.
- வாழ்க்கையை முழுவதுமாக ரசித்து, அனுபவித்து வாழ்ந்த மனிதர். இலக்கியச் சேவைக்காக இவருக்கு 2007-ல் பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது.
- பஞ்சாப் டாடா ரத்தன் விருது, சாகித்ய அகாடமி ஃபெலோஷிப் விருதுகள் தவிர, பல நாடுகளில் இவருக்கு கவுரவப் பட்டங்கள், விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மிகச் சிறந்த எழுத்தாளர், துணிச்சலான பத்திரிகையாளர் என தனிமுத்திரை பதித்தகுஷ்வந்த் சிங் 99-வது வயதில் மறைந்தார்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 02 – 2024)