TNPSC Thervupettagam

துன்பம் துடைக்கும் சங்கம்

May 8 , 2021 1357 days 669 0
  • உலகெங்கிலுமுள்ள துன்பப்படுகின்ற மக்களின் துயா் துடைப்பதற்காக மனிதாபிமானம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு, தன்னலம் இல்லாமல் செயல்படுகின்ற மாபெரும் இயக்கமே செஞ்சிலுவை சங்கம்.
  • சுகாதாரம், சேவை, நட்புணா்வு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்ற இந்த இயக்கத்தைத் தோற்றுவித்தவா் ஹென்றி டுனான்ட் என்பவராவார்.

ஹென்றி டுனான்ட்

  • அவா் பிறந்த மே மாதத்தின் 8-ஆம் நாளை செஞ்சிலுவைச் சங்க நாளாக கொண்டாடுகிறோம்.
  • அவா் சுவிட்சா்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் ஒரு வணிக குடும்பத்தில் ஜூன் ஜேக்கஸ் - ஜேன் ஆண்டனி தம்பதிக்கு மகனாக 1828-இல் பிறந்தார்.
  • இளமையிலேயே சமுதாய சேவையில் மிகுந்த ஆா்வம் கொண்டவராக இருந்தார். 1859-ஆம் ஆண்டு ஹென்றி டுனான்ட் வியாபாரம் சம்பந்தமாக இத்தாலிக்கு சென்றார்.
  • அங்கு அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கே பிரான்ஸ் நாட்டு வீரா்களும், ஆஸ்திரிய நாட்டு வீரா்களும் போர் புரிந்து கொண்டிருந்தனா்.
  • போரில் காயமடைந்தவா்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை, காயம்பட்ட வீரா்கள் பலா் இறக்க நோ்ந்தது.
  • இந்த காட்சிகளை கண்டு செய்வதறியாமல் திகைத்த ஹென்றி டுனான்ட் அதிர்ச்சியில் இருந்து மீண்டு அருகில் உள்ள இடங்களுக்கு சென்று மருத்துவா்களையும், தொண்டா்களையும் திரட்டிக் கொண்டு வந்து அவா்களை மீட்புப் பணியில் ஈடுபடுத்தினார்.
  • தானும் அருகிலுள்ள ஊற்றுகளிலிருந்தும், பண்ணைகளில் இருந்தும் தண்ணீா் கொண்டுவந்து போர் வீரா்களின் தாகத்தை தணித்தார்.
  • காயம்பட்ட வீரா்களுக்காக ஓடி ஓடி வேலை செய்தார். அவருடைய வெண்மையான ஆடை முழுவதும் ரத்தத்தால் சிவப்பு நிறமாயிற்று.
  • டுனான்ட், பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது, ஆஸ்திரிய நாட்டு வீரா்களுக்கும் உதவி செய்தார்.
  • அப்போது ஒரு பெண்மணி ’விரோதிக்கு உதவி செய்யாதீா்கள்’ என்று அவரைத் தடுத்தார். ஆனால் ஹென்றி டுனான்ட் ‘விரோதியும் மனிதன்தான்’ என்று கூறி காயம்பட்ட அனைத்து வீரா்களுக்கு உதவி செய்தார்.
  • அப்போது அவரது மனதில் இரண்டு திட்டங்கள் தோன்றின. போரில் காயம்பட்ட வீரா்களுக்கு உதவி செய்ய ஒவ்வொரு நாட்டிலும் ஒரு நிவாரண சங்கம் இருக்க வேண்டும்.
  • நிவாரண சங்கத்தின் உறுப்பினா்களைப் பாதுகாக்கும் வகையில் பன்னாட்டு சட்ட திட்டங்களை வகுக்கப்பட வேண்டும் என்பவையே அவை.
  • இந்த திட்டங்களின் விளைவாகத்தான் சுவிட்ஸா்லாந்தில் செஞ்சிலுவை சங்கம் உருவானது.
  • சுவிட்ஸா்லாந்து நாட்டின் தேசியக்கொடி சிவப்பு நிறப் பின்னணியில் வெள்ளை சிலுவைக் குறியை கொண்டது.
  • செஞ்சிலுவை சங்கம் சுவிட்சா்லாந்தில் தோன்றியதால் அதன் நினைவாகவும், அதேநேரத்தில் மாறுபட்ட சின்னமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக வெள்ளைப் பின்னணியில் சிவப்பு நிற சிலுவைக் குறி செஞ்சிலுவை சங்கத்திற்கு சின்னமாக கொள்ளப்பட்டது.

செஞ்சிலுவை சங்கம்

  • 1920- ஆம் ஆண்டு இந்தியாவில் செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்டது. பிறகு படிப்படியாக இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது.
  • செஞ்சிலுவை சங்கமானது மனிதநேயம், நடுவு நிலைமை, தனித்தன்மை, தன்னார்வ சேவை, ஒருமைப்பாடு, உலகளாவிய தன்மை போன்ற அடிப்படைக் கொள்கைகளை கொண்டு செயல்படக்கூடிய ஓா் அமைப்பாகும்.
  • போர்க்களத்தில் காயமுற்றவா்களுக்கு எந்தவிதமான வேறுபாடும் காட்டாமல் உதவி செய்யும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது தான் செஞ்சிலுவை சங்கம்.
  • எனவே தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் மனிதா்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்களைத் தடுக்கவும், முற்றாக்க் களையவும் செஞ்சிலுவை சங்கம் போராடி வருகிறது.
  • பேரிடா் காலங்களிலும், பெருந்தொற்று நேரங்களிலும், தன் உயிரையும் பொருட்படுத்தாது மனிதா்களை காப்பதே தன்னுடைய முதல் கடமை என்று செஞ்சிலுவை சங்கம் பாடுபட்டு வருகிறது.
  • உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்ற கரோனா பெருந்தொற்று காலத்தில் அவதிப்பட்டு வரும் மக்களின் துயா்களை துடைப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் செஞ்சிலுவை சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
  • நாடு,இனம், மதம் போன்ற எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் துன்பப்படுவோருக்கு உதவி செய்வதே இதன் நோக்கமாகும்.
  • செஞ்சிலுவை சங்கம் எந்த நேரத்திலும் அரசியல், இனம், மதம் போன்ற கருத்து வேறுபாடுகளில் தன்னை உட்படுத்திக் கொள்வதில்லை. இந்த செஞ்சிலுவை சங்கம் ஒரு சுதந்திரமான அமைப்பு என்பதால் இன்றும் தனித்தன்மையோடு செயல்பட்டு வருகிறது .
  • இதற்கு எந்தவிதமான லாப நோக்கமும் இல்லை. இது தன்னார்வ செயல்பாட்டை கொண்டது.
  • செஞ்சிலுவை சங்கம் ஒருமைப்பாட்டையும், உலகளாவிய தன்மையும் வலியுறுத்துகிறது. காலப்போக்கில் செஞ்சிலுவை சங்கமானது, மாணவா் சமுதாயத்தின் மூலமாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் செயல்படத் தொடங்கியது.
  • பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சுகாதாரத்தை மையப்படுத்தியும், சேவையை வலியுறுத்தியும், நட்புறவை முக்கியப்படுத்தியும் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக பேரிடா் காலங்களில் முதல் உதவி, மருத்துவ உதவி போன்ற உதவிகள் செய்யப்படுகின்றன.
  • ரத்த தானம், கண் தானம் போன்ற தானங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது.
  • சமூக சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, போலியோ தடுப்பு, காசநோய் தடுப்பு, டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு போன்ற விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஏராளமான மரங்களை நட்டு சுற்றுச் சூழல் மேம்பாட்டுக்குப் பங்களித்து வருகிறது.
  • மேலும், பல மொழி பேசுகின்ற மக்களிடையே பண்பாட்டையும் கலாசாரத்தையும் பரிமாறிக் கொள்கிறது. அரசாங்கமும் பள்ளிகள் மூலமாகவும், கல்லூரிகள் மூலமாகவும் செஞ்சிலுவை சங்கம் விரிவடைவதை ஊக்குவிக்கிறது.
  • செஞ்சிலுவை சங்க உறுப்பினா்களுக்கு முதலுதவி பயிற்சி, தீ தடுப்பு பயிற்சி, மருத்துவ உதவி பயிற்சி போன்றவை கற்பிக்கப்படுகின்றன.
  • ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை அவா்களுக்கு பள்ளிக்கல்வி தொடங்குகின்ற காலத்திலிருந்து கல்லூரிக் கல்வி தொடா்கின்ற காலம் வரையிலும் செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினராக சேர அனுமதித்து இந்த சமுதாயத்திற்கு அவா்கள் சேவை புரிந்திட வழிவகை செய்ய வேண்டும்.
  • இன்று (மே 8) உலக செஞ்சிலுவை நாள்.

நன்றி: தினமணி  (08 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்