- துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000-ஐ கடந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் வரும் தகவல்கள் துயரத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன. அண்மைக்காலமாக அதிக அளவில் உயிர்ச் சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்திய நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது.
- மத்திய கிழக்கு நாடான துருக்கியின் தென்பகுதியில் உள்ள காக்ரமன்மராஸ் மாகாணத்தில் பஸார்சிக் என்ற நகரத்தை மையமாகக் கொண்டு நிலத்துக்கு அடியில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவான நிலநடுக்கம், துருக்கியின் 10 மாகாணங்களிலும், அண்டை நாடான சிரியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வுகளும் பலமுறை ஏற்பட்டன.
- நிலநடுக்கம் அதிகாலையில் ஏற்பட்டதால் பெரும்பாலான மக்கள் தூக்கத்திலேயே உயிரை இழந்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சில விநாடிகளிலேயே ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சீட்டுக்கட்டுபோல சரிந்து தரைமட்டமாகிவிட்டன. அதிர்வை உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்குக்கூட நேரமின்றி கட்டட இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கிக்கொண்டனர்.
- நிலநடுக்கத்தால் துருக்கியில் மட்டும் 8,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 2.3 கோடி பேர் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. துருக்கி பேரிடர் மேலாண்மைத் துறையுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்களும் மீட்புப் பணியில் இணைந்துள்ளன. இருப்பினும், மின்சாரம் துண்டிப்பு, உறைநிலைக்கும் கீழான கடும் குளிர் போன்றவை மீட்புப் பணிக்கு சவாலாக அமைந்துள்ளன. "பசியாலோ, நிலநடுக்கத்தாலோ நாங்கள் சாகமாட்டோம்; கடுங்குளிர் எங்களைக் கொன்றுவிடும்' என நிலநடுக்கத்தில் குடியிருப்புகளை இழந்த மக்கள் கதறுவது பெரும் சோகம்.
- துருக்கி - சிரியா எல்லையையொட்டி ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இரு நாடுகளுக்கும் பெரும் சோதனையை ஏற்படுத்தியிருக்கிறது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியாவை சேர்ந்த சுமார் 30 லட்சம் அகதிகளுக்கு துருக்கி புகலிடம் அளித்துள்ளது. சிரியாவைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான அகதிகளுக்கு அடைக்கலம் அளித்திருக்கும் நாடு துருக்கிதான். அத்துடன் இப்போதைய நிலநடுக்கத்தால் சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பது வேதனையிலும் வேதனை.
- சுமார் 12 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள சிரியாவில் நிலைமை இன்னும் மோசம். சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 1,250 பேரும், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு பகுதியில் 1,250-க்கு மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.
- துருக்கியில் 60,000 மீட்புப் பணியாளர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், போர்ப் பதற்றம் நிலவும் சிரியாவில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு போதுமான ஆள்கள் இல்லை. ரஷிய ஆதரவு படையினரால் சூழப்பட்டுள்ள கிளர்ச்சியாளர்களின் பகுதிகளுக்கு சர்வதேச உதவிகள் சென்றடைவதிலும் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.
- புவித்தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் பகுதியில் துருக்கி பிராந்தியம் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது புதிதல்ல. ஆனால், தொழில்நுட்பமும் அறிவியலும் அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ள இந்தக் காலத்தில், நிலநடுக்கங்களுக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இருப்பினும் துருக்கியில் இப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் "பான்கேக் சரிவு' என்றழைக்கப்படும் முறையில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- 7.8 ரிக்டர் அலகுகள் பதிவான நிலநடுக்கம் சக்திவாய்ந்ததுதான் என்றாலும், இந்த அளவுக்கு அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்டதற்கு மோசமான கட்டடங்கள்தான் காரணம் என்றும், இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டுவது கொலைக் குற்றத்துக்கு சமம் என்றும் அதிபர் எர்டோகன் குற்றம்சாட்டியுள்ளார். பெரும்பாலான கட்டடங்களின் அடிப்பகுதி வலுவிழந்து நொறுங்கியதால் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்ததுபோல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன.
- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் நாடுகள் உறுதியளித்து மீட்புக் குழுக்களையும் அனுப்பியுள்ளன. இந்தியா, விமானப் படையைச் சேர்ந்த இரு போக்குவரத்து விமானங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர், மீட்பு உபகரணங்கள், மருந்துப் பொருள்களை உடனடியாக அனுப்பிவைத்துள்ளது. துருக்கிக்கு அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 102 டன் நிவாரண பொருள்களையும், சிரியாவுக்கு 6 டன் நிவாரண பொருள்களையும் அனுப்பிவைத்து உலக நாடுகளுக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்தியா.
- சிரியாவின் உள்நாட்டுப் போரில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளும் உதவ முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் தங்களது மீட்புக் குழுவினரையும், நிவாரணப் பொருள்களையும் துருக்கிக்கு அனுப்பி வைத்துள்ளன.
- நிலநடுக்கத்தின் பாதிப்புகளிலிருந்து துருக்கி மீண்டெழும் என அதிபர் எர்டோகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வதேச உதவி அந்த நம்பிக்கையை வென்றெடுக்கும் என்கிற உறுதியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: தினமணி (09 – 02 – 2023)