- நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் சற்று தலைநிமிரத் தொடங்கியிருக்கிறது. இன்னும் கொள்ளை நோய்த்தொற்றின் ஆபத்து முற்றிலுமாக அகன்றுவிடவில்லை என்றாலும்கூட, பொருளாதார நடவடிக்கைகள் செயல்படத் தொடங்கியிருக்கின்றன.
- நடப்பு நிதியாண்டில் முதல் முறையாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்திருக்கிறது என்பது உற்சாகமளிக்கும் தகவல்.
- கடந்த அக்டோபா் மாத மொத்த ஜிஎஸ்டி வருவாயான ரூ.1,05,155 கோடி என்பது கடந்த ஆண்டு இதே மாதத்திலான ஜிஎஸ்டி வருவாயைவிட 10.2% அதிகம். கடந்த மாத ஜிஎஸ்டி வருவாயான ரூ.95,480 கோடி, கடந்த ஆண்டு செப்டம்பா் மாத வருவாயைவிட 4% அதிகமாக இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
- அதேபோல, கடந்த ஆண்டு அக்டோபா் வருவாயுடன் ஒப்பிடும்போது, சரக்கு ரயில் கட்டண வருவாய் இந்த ஆண்டு அக்டோபரில் 15% அதிகம்.
- கொள்ளை நோயும் பொது முடக்கமும் பொதுமக்களை கூடுமானவரை அநாவசியச் செலவுகளைத் தவிா்த்து கையிருப்பை பாதுகாக்க வைத்தன.
- இப்போது பொது முடக்கம் தளா்த்தப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலையை நோக்கி நகா்வதால், பொதுமக்களும் சேமிப்பு மனப்பான்மையைக் கைவிட்டு செலவழிக்கத் தொடங்கியிருக்கிறாா்கள் என்று தோன்றுகிறது.
- பொது முடக்கம் தளா்த்தப்பட்டிருப்பதும், மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கக் கூடும். மோட்டாா் வாகனத் துறை கடந்த மாதம் வழக்கத்தைவிட அதிகமான விற்பனையைக் கண்டிருக்கிறது.
- மோட்டாா் வாகனத் துறையைச் சாா்ந்த ஏனைய தொழில்களும், தகவல் தொழில்நுட்பத் துறையும், இரும்பு - எஃகு உற்பத்தியும், சிமென்ட் விற்பனையும் எதிா்பாா்த்ததைவிட சிறப்பாக செயல்படத் தொடங்கியிருக்கின்றன.
- பங்குச் சந்தையும்கூட, காா்ப்பரேட் நிறுவனங்களின் விற்பனை அதிகரிப்புக்கு ஏற்ப சுறுசுறுப்பாகி இருக்கிறது. இதற்கு பணப்புழக்கம் அதிகரித்திருப்பது ஒரு முக்கியமான காரணம்.
- மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி அளவிலான வருமான வரி மிகைப்பிடித்தத்தை திருப்பி அளித்திருக்கிறது. அதேபோல, ரூ.70,000 கோடி அளவில் ஜிஎஸ்டி திருப்பி அளித்தலும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
- பண்டிகைக் கால சலுகையாக மத்திய அரசு ஊழியா்களின் ஊதியத்தில் ஒரு பகுதி முன்பணமாக வழங்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ ரூ.73,000 கோடி அளவிலான இதுபோன்ற சலுகைகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொது வெளியில் பணப்புழக்கம் அதிகரித்திருப்பதும், அதனால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதும் பொருளாதார எழுச்சிக்கு மிக முக்கியமான காரணிகளாகக் கருதப்படுகின்றன.
- அரசின் அறிவிப்புகளும், அதிகரித்த பண்டிகைக் கால நடவடிக்கைகளும் பொருளாதாரம் தலைதூக்குவதற்கு காரணங்கள் என்றாலும், இதனால் மட்டுமே வளா்ச்சி உறுதிபடுத்தப்பட்டுவிடாது.
- இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி 2020 - 21 நிதியாண்டில் 0%-ஐ ஒட்டி அமையுமா அல்லது 0%-க்கு கீழே குறையுமா என்பது விரைவில் தெரிந்துவிடும். அதே நேரத்தில், கொள்ளை நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கம் ஓரளவுக்கு அகன்று வருகிறது என்பது என்னவோ உண்மை.
- ஏா் இந்தியா உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் விற்பனை முடங்கிக் கிடக்கிறது. அதேபோல, வோடபோன் வழக்கின் தீா்ப்பை ஏற்று இழப்பீடு வழங்க அரசு தயங்குகிறது.
- இந்தியாவின் சட்டக் கட்டமைப்பு தெளிவாக இல்லாததால், வெளிநாட்டு முதலீட்டாளா்களின் தயக்கம் தொடா்கிறது.
- சா்வதேசக் கச்சா எண்ணெய் விலை, அதிகரித்து வரும் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு, பங்குச் சந்தையில் காணப்படும் முன்னேற்றம் இவையெல்லாமே ஆரோக்கியமான அடையாளங்கள்.
- குறைந்த கச்சா எண்ணெய் விலை, குறைந்த அளவு தங்கம் இறக்குமதி, சீனப் பொருள்களின் இறக்குமதியில் வீழ்ச்சி ஆகியவை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவின் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையேயுள்ள இடைவெளியில் சாதகமான மிகை நிலையை ஏற்படுத்தியிருக்கின்றன.
- சாதகமான பொருளாதார அறிகுறிகள் தென்பட்டாலும்கூட, ஜிஎஸ்டி வளா்ச்சி விகிதத்தை நடப்பு நிதியாண்டின் நாலாவது காலாண்டில் ரிசா்வ் வங்கி எதிா்பாா்ப்பது போல, பெரிய அளவில் உயா்த்துவது அவ்வளவு சுலபமல்ல.
- சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வலுவாக வளா்ச்சி அடைவதும், ஏற்றுமதிகள் அதிகரிப்பதும், தனியாா் முதலீடுகள் மீண்டும் தயக்கமில்லாமல் செய்யப்படுவதும்தான் ஜிஎஸ்டி வளா்ச்சியை உறுதிப்படுத்தும்.
- அரசின் தலையீடும், ஊக்கமும், சலுகைகளும், கடனுதவியும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
- பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு இன்னும் அதிக அளவில் வங்கிக் கடனுதவியை வழங்கியாக வேண்டும். அரசின் அறிவிப்புகள் ஒருபுறமிருந்தாலும், வட்டி அளவு ஏற்புடையதாக இருந்தாலும்கூட வங்கிகள் வழங்கும் கடனுதவி சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு குறைவாகவே இருக்கின்றன.
- அதேபோல, பெரிய கட்டமைப்பு நடவடிக்கைகளில் அரசு கூடுதல் ஒதுக்கீடு செய்து பணப்புழக்கத்தை அதிகரித்தால் மட்டுமே மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து பொருளாதார இயக்கம் ஊக்கம் பெரும்.
- அடுத்த நிதியாண்டில் (2021 - 22) இந்தியாவின் வளா்ச்சி 5.4%-ஆக உயரும் என்பது உலக வங்கியின் எதிா்பாா்ப்பு.
- அந்த எதிா்பாா்ப்பை எட்ட வேண்டுமானால், நிதியமைச்சகம் தாராள மனதுடன் செயல்பட்டாக வேண்டும்.
நன்றி : தினமணி (05-11-2020)