TNPSC Thervupettagam

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நியாயமற்ற பதவி உயர்வு

January 4 , 2024 372 days 299 0
  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவராகக் குற்றம்சாட்டப்பட்ட அன்றைய தென் மண்டல .ஜி.சைலேஷ்குமார் யாதவுக்குத் தமிழ்நாடு அரசு டிஜிபியாகப் பதவி உயர்வு வழங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, 2018இல் உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவல் துறை துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
  • இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அன்றைய அதிமுக அரசு அமைத்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின், 2022 மே மாதம் ஆணையம் தனது அறிக்கையை முதலமைச்சர் மு..ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடங்கி, துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுவரை பல பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன. அந்தப் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்கிற புகார் எழுந்தது.
  • இந்நிலையில், ஆணையத்தால் குற்றம்சாட்டப்பட்டிருந்த டிஜிபி சைலேஷ்குமாருக்கு டிஜிபியாகப் பதவி உயர்வு வழங்கியிருப்பதன் மூலம் திமுக அரசு விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
  • சைலேஷ்குமாருக்குப் பதவி உயர்வு வழங்கியிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
  • விமர்சனங்களை அடுத்து, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் குற்றம்சாட்டப்பட்ட சைலேஷ்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
  • மேலும், 1992 ஐபிஎஸ் பேட்ச் அதிகாரிகளைத் தொடர்ந்து 1993 பேட்சைச் சார்ந்த சைலேஷ்குமாருக்குப் பணி மூப்பு அடிப்படையில் டிஜிபியாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பதாகவும் காவல் துறை தரப்பு கூறுகிறது.
  • சைலேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டதாக அரசு கூறியிருந்தாலும், அது வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்கிற விமர்சனத்தைப் புறந்தள்ள முடியாது. மேலும், துப்பாக்கிச்சூடு தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதியவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டில் தர்க்கம் இருக்கிறது.
  • துறைரீதியான நடவடிக்கை என்ன என்று தெரியாத நிலையில், தற்போது பதவி உயர்வு வழங்கியிருப்பதால் எழும் விமர்சனங்களை அரசு தவிர்க்க முடியாது. துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானவர்களின் குடும்பத்துக்கு இது நியாயம் சேர்க்காது. எதிர்க்கட்சியாக இருந்தபோது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கடுமையாக எதிர்த்த திமுக, ஆட்சிக்குவந்த பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதா என்னும் கேள்வியும் எழுகிறது.
  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் பதவி உயர்வு விஷயத்தில் அவசரம் காட்டுவது நியாயமா என்று அரசு சிந்திக்க வேண்டும். அரசுக்கு ஏற்படும் சங்கடங்களைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும். காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், ஆட்சிக்கு எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுத் தரும் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்ப்பதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்