TNPSC Thervupettagam

தூத்துக்குடி துறைமுகம் புத்துயிர்ப்பு பெறட்டும்

March 16 , 2021 1409 days 664 0
  • சமீபத்தில் கோவையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் பன்னாட்டுச் சரக்குப் பெட்டக மாற்றுமுனையமாக மாற்றப்படும் என்று அறிவித்தார்.
  • தூத்துக்குடி துறைமுகத்தின் சரக்கு உருவாக்குத் தளமாக இருக்கும் கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, சிவகாசிப் பகுதி ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கும், பெயர்ச்சிமைசார் (logistics) தொழில்முனைவோருக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய திட்டம் என்பதால் மனமுவந்து அறிவிப்பை வரவேற்கலாம்.
  • ஆனால், இத்திட்ட அறிவிப்பும் எப்போது செயலாக்கத்துக்கு வரும் என்ற கேள்வி இயல்பாக எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
  • திட்டச் செயலாக்கத்துக்கான நிதி ஒதுக்கீடு நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இல்லாத நிலையில் இதுவும் வெறும் அறிவிப்பாகவே தொடர்ந்துவிடுமோ என்று துறைமுகம்சார் தொழில்முனைவோர் அச்சப்படுகிறார்கள்.
  • 2017-ல் தூத்துக்குடியில் நடந்த ஏற்றுமதி தொழில்முனைவோர் கருத்தரங்கம் ஒன்றில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தூத்துக்குடி துறைமுகத்தின் வெளிப்புறத் துறைமுகத் திட்டத்தின் இன்றியமையாத் தேவையைத் தெரிவித்தார்கள்.
  • வருடத்துக்கு ரூ.42,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் தங்களுடைய ஏற்றுமதி வியாபாரம் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான அத்தியாவசியத் தேவை தூத்துக்குடியின் வெளிப்புறத் துறைமுகத் திட்டமும், அதற்கான துரித சாலை மற்றும் ரயில் வசதியும் என்பதை வலியுறுத்திச் சொன்னார்கள்.
  • ஆனால், துறைமுகம்சார் அதிகார வர்க்கமோ தூத்துக்குடி துறைமுக மேம்பாட்டுத் திட்டங்களைக் கிடப்பில் போட்டுவிட்டு, இணையம் பன்னாட்டுச் சரக்குப் பெட்டக மாற்று முனையத் திட்டத்தைக் கொண்டுவருவதிலேயே முனைப்போடு செயல்பட்டது.
  • எந்த வகையிலும் சாதகமில்லாத, தேவையற்ற இணையம் சரக்குப் பெட்டக மாற்று முனையத் திட்டம், அரசியல் காரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்டிருந்தால், தூத்துக்குடி துறை முகத்தின் வளர்ச்சி பின்னுக்குப் போயிருக்கும்.

சாதகமான அம்சங்கள்

  • புவியியல் அமைப்பில் இந்தியாவின் தெற்கு முனையில் சர்வதேசக் கடல்வழிச் சாலையை ஒட்டி அமைந்துள்ள தூத்துக்குடி செயற்கையான துறைமுகமாக இருந்தாலும் ஆண்டு முழுவதும் தொழில் நடத்துவதற்குச் சாதகமான தட்பவெப்ப நிலை உடையது.
  • இலங்கை நிலப்பரப்பின் பாதுகாப்பான அமைப்பால் புயல், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிப்படைவது குறைவு. துறைமுக அமைவு, சென்னைத் துறைமுகத்தைப் போல் நகருக்குள் அமையாமல், மக்கள் வாழ்விடம் தவிர்த்த கடல் சூழ்ந்த வெளிப் பகுதியாதலால், எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏதுவானது.
  • துறைமுகத்துக்கும் அதன் சரக்கு உருவாக்குத் தளத்துக்கும் இடையிலான பரந்த நிலப் பரப்பும், அங்கு தொடர்ச்சியாக உருவாகும் பலவகைப்பட்ட சரக்குக் கிட்டங்கி வசதிகளும், நாங்குனேரி, கங்கைகொண்டான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், அதற்காகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ரயில் மற்றும் துரித சாலை இணைப்புகளும் அதன் சாதகமான அம்சங்கள்.
  • அருகிலேயே அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையமான தூத்துக்குடி, மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களான மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் போன்றவையும், பிராந்தியத்தின் திறமையான, அக்கறையான தொழிலாளர் இருப்பும் தூத்துக்குடி சரக்குப் பெட்டக மாற்று முனைய அமைவுக்குக் கூடுதல் வலு சேர்க்கின்றன.
  • 2020 அக்டோபர், நவம்பர் மாதங்களில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்புத் துறைமுகத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் திசைதிருப்பப்பட்ட 11 பிரதான சரக்குப் பெட்டகக் கப்பல்களில் ஒன்றுகூட அருகிலேயே இருக்கும் தூத்துக்குடி பக்கம் வரவில்லை.
  • 9 கப்பல்கள் கொச்சின் வல்லார்பாடத்துக்கும், இரண்டு கப்பல்கள் எண்ணூருக்கும் சென்றிருக்கின்றன. கப்பல் தளங்களில் போதுமான நீளமில்லாமையும் ஆழமில்லாமையும் மட்டுமல்லாமல், துறைமுகக் கடல்வழி வாசலில் இருக்கும் ஆழக் குறைவான பகுதிகளும் பிரதான சரக்குப் பெட்டக கப்பல்களின் அத்தியாவசியத் தேவையான ‘ஆன் அரைவல் பெர்த்திங்’கை இல்லாமலாக்கியிருக்கிறது.
  • சூரிய வெளிச்சம் இருக்கும் பகல் பொழுதில் மட்டுமே, கப்பல்களைக் கப்பல் தளத்துக்குக் கொண்டுவர முடியும் என்ற நிலை இருக்கிறது. அது உடனடியாகக் களையப்பட வேண்டிய அம்சம்.
  • துறைமுகத்துக்குள் முனையங்களுக்கிடையே நடக்கும் சரக்குப் பெட்டக நகர்வுகளுக்குத் துறைமுக நிர்வாகம் இதுவரை கட்டணம் நிர்ணயிக்கவில்லை.
  • மேலும், மதுரை புறவழிச் சாலையில் கைவிடப்பட்ட நிலையிலேயே தொடரும் ரயில்வே மேம்பாலம், அன்றாட வாகன விபத்துகளுக்குக் காரணமாவதோடு, துறைமுகத்துக்கான போக்குவரத்தில் பெரும் நெரிசலையும் தாமதத்தையும் ஏற்படுத்துகிறது.

துறைமுகம் தரும் வேலைவாய்ப்புகள்

  • எளிதில், ஒப்பீட்டளவில் குறைவான முதலீட்டில், நிர்வாகச் சீரமைப்பில் சரிசெய்யக் கூடிய பிரச்சினைகள் உடனடியாக ஆய்வுசெய்யப்பட்டு, சரிசெய்யப்பட்டு, துறைமுகத்தின் கனவுத் திட்டமான ஆழக் குறைபாடற்ற வெளிப்புறத் துறைமுகத் திட்டமும் அமைந்தால், இந்திய தீபகற்பத்தின் தென்பகுதியின் சர்வதேசச் சரக்குப் பெட்டக மாற்றுக் குவிமுனை மையமாக தூத்துக்குடி மாறும்.
  • நாட்டின் 60% சரக்குப் பெட்டகங்கள் பன்னாட்டுப் பயணத்துக்காக இலங்கையின் கொழும்புத் துறைமுகத்துக்கே அனுப்பப்படுகின்றன; அதனால் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் தவிர்க்க முடியாத தாமதங்கள் ஏற்பட்டுச் செலவும் கூடுகிறது.
  • இச்சூழலில், தூத்துக்குடி சரக்குப் பெட்டக மாற்று முனையம் தேவைக்கேற்பச் சீக்கிரமே அமைந்தால், அது தென்பிராந்தியத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி, படித்த, திறமையான இளைஞர்கள் பலருக்கும் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை அளிக்கும்.
  • 2004-ல் தூத்துக்குடி துறைமுகத்தைச் சரக்குப் பெட்டகச் சர்வதேசக் குவிமுனை மையமாக மாற்ற அனைத்துத் தொழில் வர்த்தக சபைகளின் சார்பில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், ஒன்றிய அரசுத் தரப்பிலிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கவில்லை.
  • இந்தப் பின்னணியில், பிரதமர் மோடியின் அறிவிப்பானது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது. பாராட்டுக்குரியது.

நன்றி: இந்து தமிழ் திசை (16 - 03 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்