TNPSC Thervupettagam

தூய்மைப் பணியாளர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு இப்போதாவது வழி பிறக்குமா?

April 24 , 2020 1727 days 791 0
  • கரோனாவுக்கு எதிரான போரில் அரசுத் துறை நிறுவனங்களின் தேவைகளையும் சேவைகளையும் சமூகம் உணரத் தொடங்கியுள்ளது. மருத்துவம், வருவாய், காவல், உள்ளாட்சித் துறைகள் பாராட்டப்படுகின்றன.
  • தூய்மைப் பணியாளர்களின் சவால் நிறைந்த பணியையும் சமூகம் உணரத் தலைப்படுகிறது என்றாலும் மற்ற துறைகளுக்கு இருக்கும் அதிகாரமோ, கிடைக்கும் மரியாதையோ, மற்றவர்கள் பெறும் உரிமைகளோ எதுவும் என்றைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கிடைக்காது என்பதே நிதர்சனமான உண்மை.
  • தொற்றுக்கான ஆபத்துள்ள பல்வேறு பகுதிகளிலும் பணியைத் தொடரும் தூய்மைப் பணியாளர்களின் சிரமத்தையும், அவர்களது குடும்பச் சூழலையும், பொருளாதார நெருக்கடி களையும் பொதுமக்கள் முதன்முறையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு நேர்முரணாக இந்தச் சூழலிலும் சாதிய மேலாதிக்கத்துடன் வக்கிரத்தின் உச்சத்தில் ஒருவர் ஒரு தூய்மைப் பணியாளரை வசைமாரி தூற்றும் காட்சி அமைந்திருக்கிறது. இந்த நூற்றாண்டிலாவது சாதிய வக்கிரமங்கள் குறைந்து இல்லாமலாகிவிட வழியுண்டா?

குரல் கொடுக்க யாருமில்லை

  • சமீப காலமாக, பொறியியல் படித்தவர்களும், முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து ஊடகங்கள் ஆச்சரியத்துடன் செய்தி வெளியிடுகின்றன.
  • அவையெல்லாம் நிரந்தரப் பணி, தடையில்லா ஊதியம் ஆகியவற்றுக்கான விருப்பங்களாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில், இந்தியச் சமூகத்தின் சாதி-வர்க்கக் கட்டமைப்பின் வலுவான அடித்தளத்தைக் கொண்டது தூய்மைப் பணியாளர்களின் அடையாளம். சுத்தம்-அசுத்தம் என்னும் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சாதிய சமூகத்தில் நிரந்தர வாழ்வாதாரம் இல்லாமல் தூய்மைப் பணியைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் அவர்கள்.
  • குப்பையில்லா மாநகரம், பசுமை நகர்ப்புறங்கள், சுற்றுசூழல் பாதுகாப்புத் திட்டங்களுடன் கூடிய புதிய நகரங்கள் என்ற முழக்கங்கள் எல்லாம் இவர்கள் இல்லாமல் சாத்தியமே இல்லை.
  • மரங்களை, காடுகளைப் பாதுகாக்கச் சொல்லி அடுத்த தலைமுறைக்குச் சுற்றுச்சூழல் பிரச்சினைதான் பெரிய அச்சுறுத்தல் என விழிப்புணர்வூட்டும் அமைப்புகளும்கூட ஒட்டுமொத்த சமூக சுகாதாரச் சூழலை மேம்படுத்தும் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளைத் தனிமைப்படுத்தியே பார்க்கின்றன.
  • தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்காகப் பொதுவெளியில் யாருமே குரல் கொடுப்பதில்லை. ஒருங்கிணைந்த தொழிற்சங்க அமைப்புகளோ, அது சார்ந்த அரசியல் வலிமையோ அவர்களுக்குக் கிடையாது.

அபாயம் நிறைந்த பணிச்சூழல்

  • வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படும் ஆலைகளின் கழிவு முதல் மக்கள் அடர்த்தி நிறைந்த ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், இறைச்சி, காய்கறி மற்றும் மீன் சந்தைகள், பொதுக் கழிப்பறைகள், மருத்துவமனைகள், குடியிருப்புப் பகுதிகள் வரையில் கொட்டப்படும் நச்சு கலந்த பல டன் கழிவுகளை அகற்றும் பணியைத் தினமும் அவர்கள் செய்தாக வேண்டும் என்பது உத்தரவு.
  • அதுவும் திருவிழா, பண்டிகைக் காலங்களில் இவர்களின் பணிச்சுமை பன்மடங்காகிறது.
  • இந்தியாவைப் பொறுத்தவரை பொதுச் சமூகத்தைவிட இந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும்தான் நாட்டைச் சுத்தம் செய்யும் பொறுப்பும் கடமையும் மீற முடியாத சட்டமாகவே இருக்கிறது.
  • கிராமங்கள் முதல் தலைநகரங்கள் வரை தெருக்களைச் சுத்தப்படுத்திப் பராமரிக்கும் பொது சுகாதாரத்தின் உயிர்த்துடிப்புகள் இவர்கள்தான்.
  • தூய்மைப் பணியாளர்களின் சேவைகள், செயல்பாடுகள், பொறுப்புகள்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சிறப்பு அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் சர்வதேச விருதுகளையும் பெரும் நிதியுடன் பெற்றுத்தருகின்றன. ஆனால், அரசியல்-சமூகச் செயல்பாட்டாளர்கள், அறிவியல்-தொழில்நுட்ப ஆய்வாளர்கள், கட்டிடவியல் நிபுணர்கள் உட்பட அனைத்து சமூகங்களாலும் நவீன மாற்றங்களால் புறக்கணிக்கப்பட்ட ஓர் விளிம்புநிலை சமூகம் இது.

துணைக்கு வராத அறிவியல்

  • பாதாளச் சாக்கடையில் இறங்கும் மனிதர்களுக்கு உயிருக்கு உத்தரவாதமளிக்கும் கவச உடைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் வடிவமைப்பதில் இன்று வரை ஆர்வம் காட்டப்படவில்லை.
  • அத்துடன் கையுறை, முகக்கவசம், செருப்பு எதுவுமில்லாமல் பூமிக்கு மேலும் கீழும் பெருக்கெடுத்து ஓடும் மனித-உயிரினக் கழிவுகளை கையால் அள்ளும் அவலநிலை அவர்களது பணி.
  • உலகம் முழுவதும் சமூக, பொருளாதார, கலாச்சாரத்தால் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களால் செய்யப்படும் பணி என்பதால் அதை நவீன இயந்திரமயமாக்குவதில் தொழில்நுட்பச் சமூகம் போதிய அக்கறை செலுத்தவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.
  • ஆனாலும், அனைத்துப் பேரிடர்களின்போதும் அவர்கள்தான் துயரங்களை மனவலிமையோடு தூக்கிச் சுமந்து களத்தில் நிற்கிறார்கள்.
  • இதுபோன்ற ஆபத்து நிறைந்த பணியில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாகப் பணிபுரிகிறார்கள். விளிம்புநிலைச் சமூகத்தில் பெண்களின் நிலையை இதைவிடவும் விரிவாக விளக்கத் தேவையில்லை. தூய்மைப் பணியாளர்களில் நிரந்தரப் பணியிலிருந்து உயிருடன் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அரிது. அப்படியே வாய்த்தாலும் அவர்களின் எஞ்சிய நாட்கள் மருத்துவச் சிகிச்சைகளுக்கான போராட்டமாகவேதான் இருக்கும். துர்நாற்றத்தைச் சகிப்பதற்காகப் போதைக்குள் தங்களை ஆழ்த்திக்கொள்பவர்களில் சிலரும் அதன் காரணமாகவே நோய்களுக்கும் எளிய இலக்காகிறார்கள்.
  • உடலும் மனமும் மோசமான நிலையில், உயர் சிகிச்சைக்குக் காப்பீட்டுத் திட்டங்கள் இருந்தாலும் அதனால் என்ன பயன்? இந்நிலையில், அடுத்த தலைமுறையின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக முன்னேற்றம் குறித்து சிந்திப்பதற்கு நேரம் ஏது? விளைவாய், அடுத்த தலைமுறைக்கும் தொடரும் சாதிய இழிவு.
  • குறைந்த கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுகிறார்கள்.
  • எனவே, ஆபத்தான பணிகளில் ஈடுபட்டாலும்கூட ஆபத்தான நச்சுப் பொருட்களைக் கையாளும் பணிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை எதுவுமில்லை.
  • ஏதாவது ஒரு விபத்தில் இறக்க நேரிட்டால், அவர்கள் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அந்தப் பணி ஒதுக்கப்படுகிறது. இப்படியே காலங்காலமாகக் கழிவுகளை அகற்றி நாட்டின் சுகாதார, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணியாளர்களுக்குக் கண்ணியத்துடன் கூடிய வாழ்வாதாரத்தை உறுதிசெய்வது குறித்து இப்போதாவது நாம் சிந்திக்க வேண்டாமா?

நன்றி: தி இந்து (24-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்