தூய்மையான எரிசக்திக்கு முதலீடு செய்ய அரசு தயங்கக் கூடாது!
February 25 , 2019 2099 days 1242 0
அனல் மின்நிலையங்களிலிருந்து வெளியேறும் கரிப் புகையில் உள்ள கரித் துகள்கள், சல்பர் ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, பாதரசத் துகள்கள் போன்றவை மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் 2015 டிசம்பரில் சுற்றறிக்கைகளை வெளியிட்டது.
அனல் மின்நிலையங்களிலிருந்து வெளியேறும் நச்சுக் காற்றால் ஆண்டுக்கு 76,000 பேர் வரை நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் அற்ப ஆயுளில் மரணமடைவதாக ‘கிரீன்பீஸ் இந்தியா’ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
2025-க்குள் எல்லா அனல் மின்நிலையங்களிலும் மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகளை முழு அளவில் செயல்படுத்தினால், 3.2 லட்சம் பேர் இறப்பதைத் தடுத்துவிடலாம் என்றும், சுவாசக் கோளாறுகள், நோய்களுக்காக 2 கோடிப் பேர் மருத்துவமனைகளில் சேராமல் தடுத்துவிடலாம் என்றும் ‘அறிவியல் ஆய்வுக்கான மையம்’ சுட்டிக்காட்டுகிறது.
தற்போது இயங்கிவரும் அனல் மின்நிலையங்கள் மூலம் மட்டுமல்ல, புதிதாக உருவாகிவரும் அனல் மின்நிலையங்கள் மூலமும் மாசுபட்ட காற்று வெளியேறாமல் தடுக்க வேண்டும்.
கரிப்புகை வெளியீட்டை 2017-க்குள் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று முதலில் அறிவுறுத்தப்பட்டது. அந்தக் கெடு தற்போது 2022 வரை நீட்டிக்கப்பட்டிருப்பது ஏன் என்றும் கேள்விகள் எழுகின்றன.
நாட்டின் மொத்த மின்உற்பத்தியில் அனல் மின்நிலையங்களின் பங்களிப்பு 54%. இது கணிசமாகக் குறைய வேண்டும்.
வீட்டுக் கூரைகளில் சூரியஒளி மின்உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
அனல் மின்நிலையங்கள் வெளியேற்றும் கரிப் புகையில் சல்பர் (கந்தகம்) கலக்காமல் தடுக்கும்போது, செயற்கையான முறையில் ஜிப்சம் தயாரிக்க முடியும்.
இந்த உப பொருள், உற்பத்திச் செலவில் ஒரு பகுதியை ஈடுகட்ட உதவும். அனல் மின்நிலையங்களிலிருந்து நச்சுக் காற்று வெளியேறாமல் தடுக்கும் திட்டமானது, பொது சுகாதாரத்தையும் மேம்படுத்தும் என்பதால் ‘ஒரே செலவில் இரட்டைப் பலன்’ என்றே அரசு இதைக் கருத வேண்டும்.
இந்நிலையில், வெறும் சுற்றறிக்கையோடு நிறுத்தாமல், மாசு ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்திருக்க வேண்டும்.
அனல் மின்நிலையங்களில் கரிப் புகையுடன் கந்தகம் சேர்ந்து வெளியேறுவதைத் தடுக்க ரூ.88,000 கோடியை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது சுற்றுச்சூழல் அமைச்சகம். அந்தத் தொகையை விரைவில் வழங்க அரசு முன்வர வேண்டும்.
எதிர்காலத் தலைமுறையின் ஆரோக்கியத்தைக் காக்கும் நடவடிக்கைகளுக்குப் போதிய நிதியளிக்க அரசு தயங்கக் கூடாது.