TNPSC Thervupettagam

தென்கடல் மீன்பிடியின் அபாயச் சூழல்

April 6 , 2021 1388 days 630 0
  • விசைப் படகுத் தொழில் 1960-களில் ஆரம்பித்த காலம்தொட்டே, பாரம்பரிய நாட்டுப் படகு மீனவருக்கும், விசைப் படகு மீனவருக்கும் தொழில்சார் பிரச்சினைகள் வருவது வாடிக்கை.
  • அரசுத் தரப்பில் பாரம்பரிய மீனவர்களைப் பாதுகாப்பதற்காகச் சட்டங்கள் இயற்றப் பட்டாலும் அவை அதிகாரவர்க்கத்தால் முறையாகக் கண்காணிக்கப்படாததாலும், நுகர்வுக் கலாச்சாரத்தில் ஊறித் திளைக்கும் பெரும்பாலான விசைப் படகு மீனவர்களால் தொடர்ச்சியாக மீறப்படுவதாலும், கடலுக்குள் தொழில் சார்ந்த பிரச்சினைகள் நடப்பது தொடர்கதையாகிவிட்டது.
  • கரையிலிருந்து 6 கடல் மைல்கள் வரை பாரம்பரிய மீனவர்களுக்கான கரைக்கடல் பகுதி, 6-லிருந்து 12 கடல் மைல்கள் வரை அண்மைக் கடல் பகுதி, 12 கடல் மைல்களுக்கு மேலான பகுதியே ஆழ்கடல் பகுதியாக இருந்தாலும், தமிழக அரசின் 1983 கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டப்படி, கரையிலிருந்து 3 கடல் மைல்களே பாரம்பரிய மீனவரின் தொழில் தளமாக வரையறை செய்யப்பட்டு, அந்தப் பகுதியில் விசைப் படகுகளின் வரத்து தடைசெய்யப்பட்டது.
  • உச்ச நீதிமன்ற வழிகாட்டலும் ஒரு காரணம். காலப்போக்கில் தேவையின் அடிப்படையில் எழுந்த தொடர்ச்சியான போராட்டங்களுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் பின், 2002-ல் அந்த எல்லை 5 கடல் மைல்கள் ஆனது. இந்த எல்லை போதாது என்பதையே களநிலவரம், வலிந்து வலியுறுத்துகிறது.

மீன்பிடி நகர்வு

  • 1980-களிலேயே தொழில்நுட்பம் சார்ந்து கட்டுமர, நாட்டுப் படகுகளும் இயந்திரமயமாகி, அவை மீன்பிடித் தளங்களுக்குச் சென்று திரும்பும் கால அளவும் குறைந்திருக்கிறது. சரக்குப் போக்குவரத்துக்கான கரைக் கட்டமைப்புகள், தூண்டில் வளைவுக் கரைப் பாதுகாப்பு அமைப்புகள், கடலோரச் சுற்றுலா விடுதிகள், ஆலைக் கழிவுகள் போன்றவற்றால் ஏற்படும் மாசுபாட்டால், மீன் தங்கும் கடல்மடைகள் ஆழ்கடல் நோக்கி நகர்ந்திருக்கின்றன.
  • 2004 சுனாமியிலும் பல கடலடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கரையிலிருந்து 6 கடல் மைல் அளவுக்குள் இருக்கும் கரைக்கடலில் மீன்வளமே இல்லை. பாரம்பரிய மீனவரின் மீன்பிடித் தளங்கள் ஆழ்கடல் நோக்கி நகர்ந்துவிட்டதால், அவர்களுக்கான மீன்பிடி எல்லையும் கரையிலிருந்து 5 கடல் மைல்களையும் தாண்டிய பகுதிகளாக மாறியிருக்கிறது.
  • இதன் காரணமாகப் பாரம்பரிய மீனவரின் இயல்பான மீன்பிடி நகர்வே, 6 கடல் மைல்களிலிருந்து 12 கடல் மைல்கள் வரையிலான அண்மைக் கடலை நோக்கியதாகத்தான் இருக்கும்.
  • இந்த எதார்த்தம்தான் ஆட்சியாளர்களுக்குப் புரிய வேண்டும். பாரம்பரிய மீனவர்களுக்கான மீன்பிடி எல்லையைக் கள ஆய்வுசெய்து, 12 கடல் மைல்கள் வரை அதை உடனடியாக நீட்டித்துக் கொடுத்து, அந்தப் பகுதியில் விசைப் படகுகளின் வரத்து தடை செய்யப்பட வேண்டியது தமிழக மீன்வளத் துறையின் கடமை.
  • மார்ச் 8-ம் தேதி மாலை 7 மணி அளவில், பெரியதாழையிலிருந்து கடலுக்குள் 9 கடல் மைல் தூரத்தில், செக்கல் மீன்பிடித் தொழில் செய்துகொண்டிருந்த பாரம்பரிய மீனவரின் நாரிழைப் படகு, கன்னியாகுமரியைச் சேர்ந்த விசைப் படகால் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
  • சமயோசிதமாகச் செயல்பட்டதால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டாலும் ரூ.1,00,000 மதிப்பிலான செவுள் வலைகள் முற்றிலுமாகச் சேதமடைந்திருக்கின்றன.
  • மாற்றுத் தொழில் ஆதாரமின்றி நிர்க்கதியில் தவிக்கிறது அந்தக் குடும்பம். விசைப் படகுகளின் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நேரத்தில், இருட்டில் விளக்கை அணைத்துவிட்டு வருவதால், அவர்களது வரத்தை எங்களால் காண முடியவில்லை என பாதிக்கப்பட்ட பாரம்பரிய மீனவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
  • பதிவுசெய்யப்பட்ட விசைப் படகுகளின் அத்துமீறல் ஒருபுறமென்றால், பதிவுசெய்யப்படாத விசைப் படகுகளின் தொந்தரவும் கடுமையாக இருக்கிறது என்று குமுறுகிறார்.
  • விசைப் படகுகளின் இயக்கமானது, அதிகாலை 5 மணிக்கு சம்பந்தப்பட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கிளம்பி, தொழில் முடித்து அதே நாள் இரவு 9 மணிக்குள்ளாகவே தங்குதளம் வந்து சேர வேண்டும் என்கிறது சட்டம்.
  • அனுமதிக்கப்பட்ட 240 குதிரைத்திறனுக்கு அதிகமாகவே இயந்திரத்திறன் உள்ள விசைப் படகுகளாய் இருந்தாலும், மீன்துறை அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு இல்லாத காரணத்தால், நேர ஒழுங்கு முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை, பெரும்பாலான விசைப் படகுகள் பதிவுசெய்யப்படாமலும் இயக்கப்படுகின்றன.
  • தமிழக மீன்துறை கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கள உண்மை இது.

பாரம்பரிய மீனவர்களின் அமைதி

  • பல்வேறு தொந்தரவுகளுக்கும் இழப்புகளுக்கும் மத்தியிலும் பாரம்பரிய மீனவர்கள் அமைதி காக்கிறார்கள் என்றால், அது தென்கடலில் கொழுந்துவிட்டு எரிந்த பிரச்சினையால் பரம்பரிய மீனவர்கள் வெகுண்டெழுந்து, 1974-ல் வீரபாண்டியன் பட்டணத்தில் 190 விசைப் படகுகளைத் தீக்கிரையாக்கியது போல் ஒரு நிகழ்வு திரும்பவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
  • அரசும் தொழில்முறைச் சிக்கல்களைத் தவிர்க்க, சட்டங்கள் இயற்றுவதோடு நின்றுவிடாமல், அதன் நடைமுறைச் செயல்பாடுகளையும் அக்கறையோடு கண்காணிக்க முன்வர வேண்டும்.
  • இதற்கிடையில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தைத் தங்குதளமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இழுவைவலை விசைப் படகு உரிமையாளர்கள், தங்களுக்கான தங்குதளத்தை, தூத்துக்குடியின் வடக்கில் இருக்கும் தருவைக்குளத்துக்கு மாற்றிக் கேட்டிருக்கிறார்கள்.
  • ஆரம்பித்த காலம்தொட்டே அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அக்கறையோடு இயங்கி, ஆழ்கடல் மீன்பிடிப்பின் முன்னுதாரணமாய் விளங்கி, தூண்டில் மற்றும் செவுள் வலைகளையே பயன்படுத்தித் தொழில் செய்யும் தருவைக்குளம் விசைப் படகு மீனவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
  • காரணம், மீன்வளத்தையே இல்லாமலாக்கும் இழுவைவலை விசைப் படகுகள் தருவைக்குளம் வந்தால், அது தாங்கள் இதுகாறும் பாதுகாத்த சுற்றுச்சூழலுக்கு இயைந்த தொழில்முறையை இல்லாமலாக்குவதோடு, கடல்வளமும் பாழ்படும் என்பது அவர்களது உறுதியான நிலைப்பாடு.
  • சமூக விரோதக் கும்பல்களின் உதவியோடு, மீன்வளத் துறையின் மேல்மட்ட அதிகார வர்க்கத்தை, தங்களுக்குச் சாதகமாய் வளைக்கும் சூழ்ச்சி நடப்பதாய்த் தகவல்கள் கசிகின்றன.
  • தொடர் மிரட்டல்களுக்குப் பயந்து, தங்களுடைய தங்குதளத்தை தருவைக்குளத்துக்கு மாற்ற அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அது குறுகிய கால லாபத்தைக் கருதி தருவைக்குளத்தின் மற்ற மீனவர்களும் கடல் வளத்தைப் பாழ்படுத்தும் இழுவைவலைப் பிடிப்புக்கு மாறுவதற்கான சூழலை ஏற்படுத்தும்.
  • இது ஒன்றிய மற்றும் மாநில அரசின் இழுவைவலைத் தொழில் தவிர்த்த ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டத்துக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி, தென்கடல் மீன்பிடிப்பில் தொடரும் அபாயச் சூழலை மேலும் சிக்கலானதாய் மாற்றும். இப்படி நடந்துவிடாமல் தடுப்பது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை.

நன்றி: இந்து தமிழ் திசை (06 - 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்