- திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இறங்கியதுமே சுமைதூக்கிகள் சூழ்ந்துகொண்டார்கள். “நீங்களே பெட்டிகளைத் தூக்கினால் எங்களுக்கு ஏதய்யா பிழைப்பு?” என்று பெட்டியை வாங்கிய பெரியவரைப் பின்தொடர்ந்து தொழிலாளர்கள் காத்திருக்குமிடம் நோக்கிச் சென்றேன். “ஊர் வளருதய்யா. பிழைப்பு வளரலை. நாங்க 48 பேர். வேலை இல்லாம ஒரு நாள் மாத்தி ஒரு நாள்னு நடை வெச்சி தொழிலுக்கு வர்றோம். ஆட்சிக்கு யார் வந்தா என்ன? நம்ம பொருளாதாரம் வளரணுமா, இல்லையா?”
- தென் இந்தியாவின் மைய கவனத்தை அவர்கள் பிரதிபலிப்பது போன்றே பல ஊர்களையும் சுற்றிய பிறகு தோன்றியது. இந்தியாவின் ஆறு பிராந்தியங்களில் வரலாறு, புவியியல், பண்பாடு சார்ந்து தீர்க்கமான தனித்துவத்தைக் கொண்டது என்றால், அது தென்னகம். சமூக நீதி, சமூக நலத் திட்டங்கள், நல்லிணக்கச் சூழல், தாராளவாதம், எல்லோருக்குமான வளர்ச்சி என்று முன்னோக்கிய பயணத்துக்குப் பேர் போனது. நாட்டின் 19.3% நிலப்பரப்பையும் 20% மக்கள்தொகையையும் பிரதிபலிக்கும் இந்தியாவின் தென் மாநிலங்கள் இந்தத் தேர்தலைக் கொஞ்சம் பதற்றத்தோடுதான் அணுகுகின்றன.
கேள்விக்குறியாகும் பிரதிநிதித்துவம்
- சுதந்திரம் அடையும்போது தென்னகத்தின் மக்கள்தொகை 26.2% ஆக இருந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாடு கொள்கையை டெல்லி கையில் எடுத்தபோது உறுதியாக அது பின்பற்றியது. விளைவாக ஐந்தில் ஒரு பங்குக்கும் மேலாக தென்னகத்தில் மக்களுடைய எண்ணிக்கை குறைந்திருக்கிறது; நாட்டின் ஏனைய பகுதிகள் இப்படி இல்லை; குறிப்பாக இந்தி பெரும்பான்மை பிராந்தியத்தில் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டுக்கு சமப் பங்காக இருந்த பிஹாரின் மக்கள்தொகை இன்று ஒன்றரை மடங்காக கூடிவிட்டிருக்கிறது.
- கூட குறைந்திருக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற குரல் இப்போது வடக்கே ஒலிக்கிறது. அப்படி மாற்றியமைத்தால், மக்களவையில் ஏற்கெனவே 24.3% ஆகவிருக்கும் தென்னகத்தின் பிரதிநிதித்துவமும் முக்கியத்துவமும் மேலும் குறையும்; 41% ஆகவிருக்கும் இந்தி மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் முக்கியத்துவமும் மேலும் அதிகரிக்கும்.
- நாட்டின் பொருளாதாரத்தில் 30% தென்னகம் பங்களிக்கிறது. ஆனால், வரிப் பகிர்வு அதற்கு நியாயமாகக் கிடைக்கவில்லை. தென்னகத்தின் எல்லா மாநிலங்களிலுமே குமுறலைக் கேட்க முடிந்தது. “உத்தர பிரதேசம் ஒரு மாநிலத்துக்கு மட்டும் ரூ.2.18 லட்சம் கோடி நிதிப் பகிர்வு தந்திருக்கும் மோடி அரசு தென்னகத்தின் ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1.92 லட்சம் கோடியையே தந்திருக்கிறது. இது நியாயமா?”
- வெறும் அரசியல் காரணங்கள் மட்டுமே இதில் இல்லை. ஓரளவுக்கு வளர்ந்துவிட்ட தென்னக மாநிலங்களின் கடந்த கால வளர்ச்சி வேகத்துக்கு அவற்றின் சமகால ஓட்டம் ஈடு கொடுக்கவில்லை. ஓட்ட வேகத்தை அதிகரிக்க வேண்டிய சவாலை எல்லா மாநில அரசுகளும் எதிர்கொள்கின்றன.
- கேரளத்தை எடுத்துக்கொண்டால், "கனவுகளோடு படித்துவிட்டு வரும் இளைஞர்களுக்கு கேரளத்தில் பெரிய வேலைவாய்ப்புகள் இல்லை. வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா, கொஞ்சம்போல தகவல் தொழில்நுட்பத் துறை இவை மூன்றுமே கேரளப் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கின்றன. மாநில அரசு பெரும் கடன் சுமையில் உள்ளது. அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தையே இந்த மாதம் தவணையில்தான் அரசு வழங்கிற்று" என்றார் கோழிக்கோடு தனியார் நிறுவன ஊழியரான கோபால மேனன்.
- முன்பு ஒரே மாநிலமாக இருந்து இப்போது பிரிந்துவிட்டிருக்கும் ஆந்திரம் - தெலங்கானாவில் பிரச்சினை வெவ்வேறு வடிவில் இருக்கிறது. “தெலங்கானா பிரிந்தபோது ஹைதராபாத் எங்களைவிட்டுச் சென்றது. அதோடு ஆந்திராவின் எல்லாச் செழிப்பும் போயிற்று. இன்னொரு ஹைதராபாத்தை யார் உருவாக்குவார்கள்?” என்று கேட்டார் விஜயவாடாவின் முந்திரி வியாபாரியான சாந்தி.
- தெலங்கானா மாநிலமாக உருவெடுத்த பிறகான பத்தாண்டுகளில் முன்னைக் காட்டிலும் நல்ல வளர்ச்சி என்றாலும், இப்போது அடுத்தடுத்த கட்டங்களுக்கு அது நகர முடியாமல் தடுமாறுவதாகப் புலம்புகிறார்கள். கர்நாடகமும், தமிழ்நாடும் தொழில் துறையை இதற்கு மேல் எப்படிப் பாதுகாப்பாக விஸ்தரிப்பது என்று யோசிக்கின்றன. சென்னை சில மாதங்களுக்கு முன் பெருவெள்ளத்தில் சிக்கியது. பெங்களூரு இப்போது தண்ணீர் தட்டுப்பாட்டில் வதைபடுகிறது. சூழலோடு வளர்ந்த வளர்ச்சியை இனியேனும் சிந்திக்க வேண்டும் என்றார் பெங்களூரு பொறியாளரான செந்தில்.
பொருளாதார வளர்ச்சிதான் பிரதானம்
- தென்னகத்தில் மக்கள் நலத் திட்ட அரசியலுக்கு முக்கியமான இடம் உண்டு என்றாலும், அது மட்டுமே போதாது என்றும் தோன்றியது. “நலத் திட்ட உதவிகளைக் காட்டிலும் வேலைவாய்ப்புகள்தான் முக்கியம்” என்ற குரலை ஆந்திரத்திலும் “பெண்களுக்கு மாதம் ரெண்டாயிரம் தருகிறேன் என்ற பெயரில் ரோடு போட காசில்லாமல் தடுமாறுவது என்ன வகையான நிர்வாகம்?” என்ற குரலைக் கர்நாடகத்திலும் கேட்க முடிந்தது.
- ஆந்திரத்தில், "ஜெகன் நலத்திட்ட உதவிகளை மட்டுமே கொடுத்து சமூகத்தை இரண்டாக்கிவிட்டார்; கீழேயுள்ளவர்களை நலத்திட்டங்கள் மூலம் திருப்திப்படுத்தலாம்; வளர்ந்த மாநிலத்தின் நடுத்தர வர்க்கத்தைத் திருப்திப்படுத்த அவர் ஒன்றுமே செய்யவில்லை" என்றார்கள்.
- தமிழ்நாடும் அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
தேசிய கட்சிகளின் வேட்கை
- தேசிய அரசியலில் மையம் கொண்டுள்ள மூன்று சக்திகளுமே தென்னகத்தை முக்கியமாகப் பார்க்கின்றன.
- மூத்த கட்சியான காங்கிரஸுக்கு வலுவான களம் தென்னகம். கேரளத்திலும் கர்நாடகத்திலும் தெலங்கானாவிலும் ஆட்சி அமைக்கும் சக்தி அதற்கு இருக்கிறது. தமிழகத்தில் பேர வலு கொண்ட கூட்டணி சக்தி. ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பறிகொடுத்த இடத்தைத் தேடுகிறது.
- கர்நாடகத்தில் ஆழ வேரூன்றிவிட்டிருப்பதோடு தெலங்கானாவிலும் வலுவாகக் கால் பதித்திருக்கும் பாஜக ஏனைய மூன்று மாநிலங்களிலும் தனக்கென்று ஓரிடத்தை உருவாக்க இந்த முறை பல்வேறு காய்களையும் பயன்படுத்துகிறது. 'தெற்கைப் பார்ப்போம்' என்று ஓர் உத்தியையும் உருவாக்கியுள்ளது.
- நாட்டிலேயே கேரளத்தில் மட்டும்தான் இன்று சொல்லிக்கொள்ளும் வலுவோடு இருப்பதால், தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள கம்யூனிஸ்ட்டுகள் போராடுகிறார்கள். தவிர, தென்னகத்துக்கே உரிய பிராந்திய அரசியல் சக்திகள். தமிழ்நாட்டில் திமுக - அதிமுக, ஆந்திரத்தில் தெலுங்கு தேசம், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமீதி… மூர்க்கமான மோதல்தான்!
பாஜகவின் நகர்வுகள்
- தென்னக மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகள், பிரதான எதிர்க்கட்சிகள் எல்லாமே பாஜகவை 2024 தேர்தலில் ஒரு சவாலாக எதிர்கொள்கின்றன. தமிழ்நாட்டில் கூட்டணிக்காக அதிமுகவின் கையை பாஜக முறுக்குகிறது. கேரளத்திலும் கர்நாடகத்திலும் தெலங்கானாவிலும் காங்கிரஸிலிருந்து அது ஆட்களைத் தூக்குகிறது. கர்நாடகம், தெலங்கானா இரு மாநிலங்களிலும் அதிகாரிகள் மத்தியில், மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஆட்சி மாறும் என்ற பேச்சை பாஜக உருவாக்கிவிட்டிருக்கிறது. ஆந்திரத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், எதிரேயுள்ள தெலுங்கு தேசம் இரண்டும் வழக்குகள் சார்ந்து பாஜகவுக்கு அஞ்சுகின்றன; இரண்டு கட்சிகளுமே பாஜக கூட்டணிக்காக மறுங்குகின்றன; இத்தனை மாநிலத்தில் 1% வாக்கு வங்கியே பாஜகவுக்கு உள்ளது.
- தென்னகத்தைப் பொறுத்தளவில் கேரளத்தை விசேஷமாக அணுக வேண்டும்.
- மக்கள்தொகையில் இந்துக்களுக்குக் கிட்டத்தட்ட இணையாக சிறுபான்மை சமூகத்தினரையும் கொண்டிருக்கும் கேரள அரசியலில் சாதியின் தாக்கத்தைக் காட்டிலும் மதத்தின் தாக்கம் அதிகம். இங்கே திருவனந்தபுரம், திருச்சூர், பாலக்காடு, பத்தினம்திட்டா, அட்டிங்கல் பிராந்தியங்களில் இந்துக்கள் இடையே கணிசமான ஆதரவுத் தளத்தை உருவாக்கியிருக்கும் பாஜக அடுத்தகட்டமாக சிறுபான்மைச் சமூகத்தினரையும் கட்சிக்குள் அணைத்தால்தான் கேரள அரசியலில் வெற்றியைப் பார்க்க முடியும் என்ற வியூகத்தைக் கையில் எடுத்திருக்கிறது. கேரளத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரும் சோனியாவின் நெருங்கிய விசுவாசிகளில் ஒருவருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆன்டனி உள்ளிட்ட மூன்று முக்கியமான கிறிஸ்தவ முகங்களைக் கட்சிக்குள் அது கொண்டுவந்திருப்பது சிறுபான்மைச் சமூகங்களிடமும் அது நுழைய விரும்புவதற்கான முக்கியமான சமிக்ஞை.
- தமிழ்நாட்டில் திமுக - அதிமுகவுக்கு வெளியே உள்ள மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்களையும், பலவீனப்பட்டிருக்கும் அதிமுகவின் தளத்தை உட்செரிப்பதையும் கணக்கிட்டு இயங்குகிறது; ஆந்திரத்தில் அந்த இடத்தில் தெலுங்கு தேசம் கட்சியைப் பார்க்கிறது. இரு கட்சிகளுமே பாஜக நெருக்க வட்டத்துக்குள்தான் இருக்கின்றன. கர்நாடகத்தில் பெரும்பான்மைச் சாதிகளான லிங்காயத்து, ஒக்கலிகாக்களை அணைத்தபடியான இந்துத்துவத்தையும், தெலங்கானாவில் முன்னாள், இன்னாள் முதல்வர்களின் சாதிகளான ரெட்டி, வெலமாக்களுக்கு வெளியேவுள்ளோருக்கான அதிகாரத்தைப் பேசியபடியான இந்துத்துவத்தையும் அது கையாளுகிறது.
- கம்யூனிஸ்ட்டுகளுக்கு இது சரிவுக் காலம்போலத் தோன்றுகிறது. நாட்டிலேயே அவர்கள் இதுவரை இல்லாத வரலாறாக மாநிலத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆளும் வாய்ப்பை பினரயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசிடம் 2021 சட்டமன்றத் தேர்தலில் கேரளியர்கள் தந்தார்கள். இந்த மூன்றாண்டுகளில் அந்த நம்பிக்கையை வெகுவாக விஜயன் இழந்திருப்பது மக்களிடம் பேசுகையில் வெளிப்படுகிறது. “மகளுக்காக ஊழல் பண்ணிட்டார்”, “கட்சியையும் நாசமாக்கிட்டார்!” என்று பரவலாகப் பேசுகிறார்கள். “புதிய பொருளாதாரப் போக்கைக் கொண்டுவர விஜயன் முயற்சிக்கிறார். அது பெரிய பலன் தரலை” என்கிறார்கள்.
- இளைய தலைமுறையிடம் உருவாகியுள்ள வளர்ச்சித் தேட்டத்தையும் சமூகத்தில் உருவாகிவரும் பொருளாதாரத் தேக்கத்தையும் தனதாக்க பாஜக முற்படுகிறது. “கேரளத்தில் தொழில் துறை தலையெடுக்காமல் போக கம்யூனிஸ்ட்டுகள் உருவாக்கிய நோக்குக் கலாச்சாரமே காரணம்” என்கிறது.
- காங்கிரஸ் பிராந்திய அடையாள அரசியலைப் பதிலுக்குக் கையாளுகிறது.
- கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா வலுவான முகம்; துணை முதல்வர் சிவக்குமார் ஹொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதோடு பாஜகவைத் திறம்பட கையாளத் தெரிந்தவர். இருவருக்கும் இடையில் பனிப்போர் உண்டு என்றாலும், பாஜகவை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். ஆனால், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின் லிங்காயத்துகளோடான பிணக்கை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள பாஜக மிகக் குறுகிய காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான ஓர் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. மக்களவையில் 28 இடங்களைக் கொண்டிருக்கும் கர்நாடகத்தில் பாதிக்குப் பாதி இடங்களை காங்கிரஸ் வென்றாலே பெரிய விஷயம்தான். முந்தைய தேர்தலில் 25 இடங்களை பாஜக வென்றிருந்தது.
- கேரளத்தில் கோஷ்டி சண்டைகள் அதிகம் என்றாலும், இடதுசாரி அரசின் மீதான அதிருப்தியைத் தனக்கு சாதகமாகத் திருப்ப காங்கிரஸால் முடிகிறது. 20 இடங்களைக் கொண்ட கேரளத்தில் சென்ற முறையைப் போன்றே இப்போதும் காங்கிரஸ் அதிகமான இடங்களை வெல்லக்கூடிய சூழல் உள்ளது. சென்ற முறை 18 இடங்களை காங்கிரஸ் வென்றது.
- ஆந்திரத்தில் ஜெகனுக்கு எதிராக அவருடைய தங்கை சர்மிளாவையே கட்சியின் மாநிலத் தலைவராக முன்னிறுத்தியிருக்கிறது - இங்கே காங்கிரஸுக்கு எந்த பலமும் இல்லாத நிலையில், சர்மிளா கவனம் ஈர்ப்பவராக இருக்கிறார். தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து பாஜக களம் காண்கிறது. ஜெகன் ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவினாலும், சந்திரபாபுவால் அதைத் தனதாக்கிக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.
- தெலங்கானாவில் மிகச் சமீபத்தில் ஆட்சிக்கு வந்த ரேவந்த் ரெட்டி காங்கிரஸின் பிடியை மேலும் இறுக்கியிருக்கிறார். அங்கே பிரதான எதிர்க்கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமீதியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ் பலவீனப்பட்டிருக்கிறார். மத்திய விசாரணை அமைப்பால் அவருடைய மகள் கவிதா தேர்தல் சமயத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பது மூலம் மேலும் பின்னடைவு. இதைத் தனக்கு சாதகமாக பாஜக பயன்படுத்திக்கொள்ள முற்பட்டாலும் 17 இடங்களைக் கொண்டிருக்கும் தெலங்கானாவில் குறைந்தது பாதி இடங்களேனும் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
- தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் அமைத்துள்ள வலுவான கூட்டணி இம்முறையும் தொடர்கிறது. மாநிலத்தில் ஏராளமான நலத் திட்டங்களைத் திமுக கொண்டுவந்திருந்தாலும், அதன் அமைச்சர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கி கைதானதும், முதல்வர் ஸ்டாலினுடைய மகன் உதயநிதி கட்சியில் முதல்வருக்கு அடுத்த இடத்துக்கு முன்னகர்த்தப்படுவதும் மக்களிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளன. திமுக நிர்வாகி ஒருவர் போதைக் கடத்தலில் ஈடுபட்டு கைதானது கட்சிக்குக் கெட்ட பெயர். புதுவையையும் சேர்த்து 40 தொகுதிகள் தமிழகத்தில் உள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக பலவீனப்பட்டிருப்பதும், பாஜகவுக்கு எதிரான தமிழகத்தின் இயல்பான அலையும் கடந்த முறை போன்றே இம்முறையும் பெரும் வெற்றியை திமுக கூட்டணிக்குத் தரும் என்று எதிர்பார்க்கிறார்கள். பாஜக தன்னுடைய வாக்குவீதத்தை உயர்த்திக்கொள்ளவும், அதிமுக தன்னுடைய இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் போராடுகின்றன.
மாநிலக் கட்சிகள் எதிர்கொள்ளும் புழுதி
- தென்னகத்தின் சிறப்பம்சம், கூட்டாட்சிக்காகப் பேசும் மாநிலக் கட்சிகள். நிர்வாகத் தளத்திலும் தேசிய அளவில் குறிப்பிடத்தக்க பணிகளை முன்னெடுத்தவை இவை. துரதிருஷ்டவசமாக எல்லா இடங்களிலுமே குடும்ப அரசியல் - ஊழல் முறைகேடு - குற்றச்சாட்டு புழுதி இவற்றைச் சூழ்ந்திருக்கிறது.
- திமுக, அதிமுக, தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமீதி யாவும் இந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றன. “ஆனாலும் மக்கள் இவங்களைத் தேர்ந்தெடுக்க காரணம் எங்களுக்காகப் பேசுறாங்கங்கிறதால; அதைத் தங்களுடைய தவறுகளுக்கான அனுமதியா எடுத்துக்கக் கூடாது” என்றார் திருப்பூரைச் சேர்ந்த தாமஸ்.
இந்துத்துவத்துக்குப் பதில் என்ன
- கர்நாடகத்திலும், தெலங்கானாவிலும், தமிழ்நாட்டிலும் எல்லாவற்றைவிடவும் கேரளத்திலும் நல்ல நம்பிக்கை இருப்பதால் தென்னகத்தில் மட்டுமே இம்முறை 50 தொகுதிகளை வென்றிட முடியும் என்று நம்புகின்றனர் காங்கிரஸார். ஆனால், அரசியலதிகாரத் தளத்தில் மட்டுமே மாற்றம் நிகழ்ந்து பிரயோஜனம் இல்லை என்பதை கர்நாடகச் சூழல் உணர்த்துகிறது. இந்துத்துவத்தை எதிர்கொள்ளும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் அங்கே மறுங்குகிறது; மாநிலக் கட்சிகளின் நிலையும் அதுதான்.
- அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிருஷ்டை அன்று கேரளத்தின் பெரும்பான்மை இந்துக்கள் வீடுகளில் விளக்கு ஏற்றப்பட்டதாக அங்குள்ளோர் தெரிவித்தனர். ஆந்திரம் - தெலங்கானாவிலும் இதுவே நிலை. கர்நாடகத்தில் இதை விசாரிக்க வேண்டிய தேவையே இல்லை. வீதிகளில் நான்கில் ஒரு கடையில் காவிக் கொடி பறந்தது.
- நாட்டிலேயே மாறுபட்ட அரசியல் சூழல் கொண்டதான தமிழகத்திலும் மெல்ல காட்சிகள் மாறுகின்றன. “கோயில்கள் எல்லாத்துலேயும் இப்போ சங்க பரிவாரம் வெவ்வேறு அமைப்புகள் பேருல உள்ளே நுழையறாங்க. இங்கே தேவாலயங்கள்லேயும் மசூதிகள்லேயும் அரசியல் முடிவு தீர்மானிக்கப்படுறதை இந்துக்கள்கிட்ட அவங்க திரும்பத் திரும்ப பேசுறாங்க. ரெண்டு தரப்புமே இதை நிறுத்தணும். பெருமளவு மக்கள் இன்னைக்கும் மதத்தையும் அரசியலையும் மக்கள் தனிச்சுப் பார்க்குறதால நமக்கு சிக்கல் இல்லைன்னாலும், இது இப்படியே நீடிக்குமா? அது தெரியலை! காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக யாருக்கும் இதை முறையா எதிர்கொள்ற வழி தெரியலை. சஷி தரூர் ‘நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?’ அப்படின்னுத்தானே புத்தகம் எழுதுறார்? சித்தாந்த வலு இல்லாம இனி அரசியல்ல நீடிக்க முடியாதுன்னு தோணுது” என்றார் நாகர்கோவிலைச் சேர்ந்த பத்திரிகையாளரான சுவாமிநாதன்.
- சமூகத்தின் அந்தந்தக் காலகட்ட பிரச்சினைகள்தானே புதிய கருத்தியல்களையும் ஆட்டக்காரர்களையும் உருவாக்குகின்றன?
நன்றி: அருஞ்சொல் (19 – 03 – 2024)