TNPSC Thervupettagam

தென்னிந்திய மாநிலங்கள்

February 7 , 2020 1613 days 849 0
  • என்.கே.சிங் தலைமையிலான 15-வது நிதிக் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது; 2020 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையிலான அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நிதி ஒதுக்கீடு எப்படியிருக்கும் என்பதைச் சொல்லும் இந்த அறிக்கை வழக்கம்போலவே மக்கள்தொகை அடிப்படையில் நிதி வருவாய் ஒதுக்கப்படுவதில் தென்னிந்திய மாநிலங்கள் பாதிப்புக்குள்ளாவது தொடர்வதை வெளிப்படுத்துகிறது.
  • இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தென்னிந்திய மாநிலங்கள் பாரம் சுமப்பது என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒருமுறை டெல்லியில் கேட்ட கேள்வி நினைவுக்குவருவது தவிர்க்க முடியாததாகிறது.

மாநிலங்களின் செயல்பாடுகள்

  • மாநிலங்களின் மொத்த உற்பத்தி மதிப்பு (ஜிஎஸ்டிபி) சராசரி, மகளிர் சராசரி கருத்தரிப்பு, வரி வசூல் அளவு, நபர்வாரி வளர்ச்சி வீதம் போன்றவை அடிப்படைகளில் ஒன்றாக்கப்பட்டிருக்கின்றன; மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதுடன் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் மாநிலங்களின் செயல்பாடுகளுக்கு 12.5% கூடுதல் புள்ளிமதிப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், மக்கள்தொகை அடிப்படையே பிரதானமாக இந்த ஒதுக்கீட்டில் கொள்ளப்படுகையில், பெரிய மாநிலங்களே அதிக ஒதுக்கீடு பெறுவது இயல்பானதாக இருக்கிறது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைச் சிறப்பாக முன்னெடுத்த மாநிலங்கள் பாதிப்புக்குள்ளாவது தொடர்வது நியாயமானதல்ல.
  • மக்கள்தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களில் தமிழகம் நீங்கலாக, ஏனையவை அனைத்தும் குறைந்த நிதியையே இப்போது பெறும் சூழல் உருவாகியிருக்கிறது. கர்நாடகம் மட்டுமே ரூ.9,000 கோடி – ரூ.11,000 கோடி வரை இழக்கும் என்று தெரிகிறது. இது சரியல்ல.

மத்திய நிதியின் பங்கு

  • அதேபோல, தமிழ்நாடு மத்திய நிதியில் 4.189% பெறுகிறது என்றால், உத்தர பிரதேசம் 17.931% பெறுகிறது; வரி வருவாய் கொடுப்பதில் இரு மாநிலங்களும் எவ்வளவு தருகின்றன என்பதோடு இதை ஒப்பிட்டால், பாதிப்பு எப்படியானது என்பதை உணர முடியும். வரி வருவாயில் அதிகம் தரும் மாநிலங்கள் அதற்குரிய பலன்களை ஒதுக்கீட்டிலும் பெற வேண்டும். இதற்கேற்ப ஒதுக்கீட்டுக்கான அளவீடுகள் முழுமையாகச் சீரமைக்கப்பட வேண்டும்.

பின்தங்கிய மாநிலங்கள்

  • மக்கள்தொகை அதிகம் கொண்ட மாநிலங்களோ, வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களோ, நிச்சயமாக அரசின் சிறப்புக் கவனத்தைப் பெற வேண்டும்; அதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. அதேசமயம், பின்தங்கிய மாநிலங்கள் அந்த இருளிலிருந்து வெளியே வர முன்னேறிய மாநிலங்களைப் பின்பற்றத்தக்க நிதி ஒதுக்கீட்டு முறை உருவாக்கப்பட வேண்டும்.
  • இந்த நிதிக் குழு, உள்ளாட்சி மன்றங்களுக்குக் கூடுதல் நிதியளிக்கக் கொண்டிருக்கும் அக்கறை வரவேற்புக்குரியதாகிறது. பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு நிதிக் குழு கூறியிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிறையவே அதிகாரங்களை நம்முடைய அரசு பகிர்ந்தளிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான தொடக்கமாக நிதி ஒதுக்கீடு அமைய வேண்டும். எதிர்வரும் காலத்தில் இக்கால அனுபவங்கள் புதிய வரையறைகளுக்கு வழிவகுக்கட்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (07-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்