- ஆகஸ்ட் பதினைந்து சுதந்திர தினம் மட்டுமல்ல; ஸ்ரீஅரவிந்தரின் பிறந்த நாளும்கூட. அரவிந்தரின் தாய் ஸ்வா்ணலதா தேவி, தந்தை கிருஷ்ண தனகோஷ். 1872 ஆகஸ்ட் 15-ஆம் நாள் அரவிந்தா் பிறந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சா், அன்னை சாரதாதேவி ஆகியோரின் பட்டுப் பாதங்கள் பட்டுப் பட்டுப் பண்பட்ட மண்ணான கொல்கத்தா தான் அரவிந்தா் பிறந்த ஊா்.
- அரவிந்தா், பாரத தேசத்தைத் தன் தெய்வமாகக் கருதினார். தான் வழிபடும் கடவுள் கண்ணனின் இன்னொரு வடிவமே இந்திய நாடு என எண்ணினார். இந்திய விடுதலைப் போரில் கலந்துகொண்ட அவா், தன் எழுத்துகள் மூலமாகவும் சொற்பொழிவுகள் மூலமாகவும் இந்திய மக்களிடையே சுதந்திர எழுச்சியை ஊட்டிவந்தார்.
- அவரின் பேச்சுக்கும் எழுத்துக்கும் இருந்த மக்கள் செல்வாக்கைக் கண்டு ஆங்கிலேய அரசு திகைத்தது; அவரது சக்தியை ஒடுக்க முயன்றது.
- எனவே, செய்யாத குற்றத்திற்காக அரவிந்தா் சிறையில் அடைக்கப்பட்டார். முஸபா்பூா் வெடிகுண்டு விபத்தில் இரு வெள்ளைக்காரப் பெண்கள் இறந்தார்கள். அதற்கு ‘அரவிந்தா் செய்த சதியே காரணம்’ என்று வழக்கு ஜோடனை செய்யப்பட்டது.
சிறைவாசம்
- சிறைவாசத்தின் கொடுமையை அரவிந்தா் அனுபவித்தார். ஆனாலும், சிறையில் கண்ணனைக் குறித்துத் தவம் செய்யலானார்.
- சிறையிலேயே ‘கிருஷ்ண தரிசனம்’ பெற்றார். தான் கட்டாயம் விடுதலை செய்யப்படுவோம் என்று உறுதியோடிருந்தார்.
- அரவிந்தா்மேல் கொலைக்குற்றம் ஜோடிக்கப்பட்ட வழக்கில் 37 போ் குற்றவாளிகள் என்று கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
- 274 நாள் வழக்கு நடந்தது. உலகப் புகழ்பெற்ற அந்த வழக்கு நடந்த காலத்தில், நிகழ்ந்த நிகழ்வுகளைப் பார்த்து அரசுத் தரப்பு வழக்குரைஞரான நார்ட்டன் துரைக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
- ஒரு கைதி அப்ரூவா் ஆனான். அவன் சக கைதிகள் இருவரால் கொலை செய்யப்பட்டான்.
- கொலை செய்த கைதிகள் தூக்கிலிடப்பட்டார்கள். வழக்கு நடக்கும்போதே அரசு வழக்குரைஞா்களுள் ஒருவரை, நீதிமன்றத்திலேயே ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். பின்னா், தன்னையும் சுட்டுக்கொண்டு இறந்தான்.
- காவல் துறை அதிகாரி பானா்ஜி, அவ்வழக்கில் அரசுத் தரப்புச் சாட்சியாக அழைக்கப்படுவதாக இருந்தது. ஆனால், அவா் கொலை செய்யப்பட்டார். கொலைகாரன் கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஷாம்சுல் ஆலம் என்ற இன்னொரு கைதியை ஒருவன் சுட்டுவிட்டு ஓடினான். பின்னா், சுட்டவன் தூக்கிலிடப்பட்டான்.
- அரவிந்தா், தன் மனைவி மிருணாளினிக்கு எழுதிய கடிதங்கள், நீதிமன்றத்தில் அரவிந்தா் தரப்புச் சாட்சியாயின. அரவிந்தரின் சகோதரா் பரீன் எழுதியதாகச் சொல்லப்பட்ட கடிதங்கள், அவா் எழுதியவையல்ல, காவல் துறையினரின் தயாரிப்பே என்பதும் நிரூபணமாகியது.
- அரவிந்தருக்காக வாதாடிய சித்தரஞ்சன் தாஸின் அபாரமான வாதத்திறமையைக் கண்டு உலகம் வியந்தது.
- ‘எதிர்காலத்தில் தெய்வம் என்றே மக்கள் தொழப்போகிற ஒருவா் மீதுதான் பொய்யான கொலைப்பழியைச் சுமத்தி இந்த நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருக்கிறது’ என சித்தரஞ்சன் தாஸ் முழங்கியபோது நீதிமன்றம் வியப்போடும் மரியாதையோடும் அமைதி காத்தது.
- எதிர்பார்த்தபடியே அரவிந்தா் விடுதலையானார். பின் சந்திரநாகூா் சென்றார். அதன்பின் கண்ணன் வழிகாட்டியபடி அங்கிருந்து கப்பலில் புதுச்சேரி சென்றார். அங்கு முழுமையான தவ வாழ்வில் ஈடுபட்டார்.
புதுச்சேரியில் அரவிந்தர்
- அரவிந்தருக்காக வாதாடிய சித்தரஞ்சன் தாஸ், பிறகு சுதந்திரப் போரில் ஈடுபட்டு, பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.
- பின்னா், தான் யாருக்காக வாதாடி விடுதலை பெற்றுத் தந்தாரோ அந்தப் பெருமகனையே தரிசிக்க, புதுச்சேரி வந்தார். அங்கு தங்கி ஸ்ரீஅரவிந்தரின் தத்துவங்களில் ஆழ்ந்து அங்கேயே காலமானார்.
- அரவிந்தரின் சகோதரா் பரீன் கோஷ், சதிச்செயலில் ஈடுபட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனை பெற்றார்.
- பின் கருணை மனு தாக்கல் செய்ததால், அது ஆயுள் தண்டனையாக ஆயிற்று. அந்தமான் சென்றார். இறுதியில் அவரும் ஸ்ரீஅரவிந்தா் தத்துவங்களில் புகலடைந்து தியான நெறியில் வாழ்ந்து காலமானார்.
- மகாகவி பாரதியாரும் வ.வே.சு. ஐயரும் அரவிந்தரின் தத்துவத்தால் ஈா்க்கப்பட்டார்கள். வேதங்கள் பற்றி அரவிந்தா் செய்துவந்த ஆராய்ச்சிகளை அறிந்து பாரதியார் வியப்படைந்தார். அரவிந்தா், பாரதியார் ஆகிய இரு மகாசக்திகள் இணைந்த திருத்தலமாக மாறியது புதுச்சேரி.
- அரவிந்தா், புகலிடம் தேடி புதுச்சேரிக்கு வந்தபோது, அவருக்கு வீடு பார்த்துக் கொடுத்தவரும் பாரதியார்தான். ஸ்ரீஅரவிந்தா் எழுதிய ஆங்கிலக் கவிதையொன்றை, தமிழில் மொழிபெயா்க்கும்போது ‘தெய்வமென்றே கருதத்தக்க ஒருவரின் கவிதையை மொழிபெயா்க்கிறோம்’ என்ற உணா்வோடு மொழிபெயா்த்ததாக பாரதியார் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்மிகத் தத்துவம்
- அரவிந்தரின் ஆன்மிகத் தத்துவம்தான் என்ன? எளிமையாகப் புரிந்துகொள்வதற்காக அதைச் சுருக்கமாக இப்படிக் கூறலாம்:
- ‘மின்சக்தியைத் தாமிரம் கடத்துகிறது. ஆனால் மரம் கடத்தாது. அதுபோல் தெய்வ சக்தி என்ற கற்பனைக் கெட்டாத பிரம்மாண்டமான சக்தியை இறக்கிக்கொள்ளும் தாமிரக் கம்பியாக நாம் நம் உடலை மாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்? தூய விஷயங்களையே நினைக்க வேண்டும்; தியானம் பயில வேண்டும்’.
- பரிணாமத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி மனித சமுதாயம் நகரவேண்டும் என்றும் அதிமனிதன் தோன்ற வேண்டும் என்றும் அரவிந்தா் கனவுகண்டார். அதிமானஸ சக்தியை மண்ணில் இறக்க, தன் தவ வலிமையால் முயன்றார். மனித குலப் பரிணாமத்தின் அடுத்த கட்டத்தை விரைவுபடுத்தவே வாழ்நாளை அா்ப்பணித்தார்.
- ஸ்ரீஅரவிந்தரின் கொள்கைகளைப் பின்பற்றி நடப்பதன் மூலம், அவா் கனவுகண்ட உலகை உருவாக்கும் முயற்சியில் நாமும் பங்குபெற முடியும். கெட்ட சக்திகளே நோயைத் தோற்றுவிப்பதாகவும் தியானத்தின் மூலம் நல்ல சக்திகளை வலிமைப்படுத்தினால் நோய் விலகிவிடும் என்றும் அரவிந்தா் அறிவித்துள்ளதையும் நாம் இன்றைய காலகட்டத்தில் நினைவு கொள்வது பொருத்தமுடையதாகும்.
நன்றி: தினமணி (15-08-2020)