தெரு நாய் பிரச்சினைக்குத் தீர்வு எப்போது?
- தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் நாய்க்கடிப் பிரச்சினை கவலை அளிக்கிறது. தெரு நாய்களின் இயல்புக்கு மீறிய இனப்பெருக்கம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தலைநகர் சென்னையும் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிவிடவில்லை. சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கை குறித்து உலகளாவிய கால்நடை சேவை என்கிற தன்னார்வ அமைப்பு நடத்தியிருக்கும் கணக்கெடுப்பின் முடிவுகள், தெரு நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உடனடியாகவும் தீவிரமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
- சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும், இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021இல் 57,366 ஆக இருந்த நாய்களின் எண்ணிக்கை, 2024 இல் 1,80,000 ஆக அதிகரித்துள்ள விவரம் இதில் தெரியவந்துள்ளது. தவிர, சென்னையில் 27 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தக் கருத்தடை முக்கியமான வழிமுறையாகப் பரிந்துரைக்கப்படும் நிலையில், அந்த நடவடிக்கையில் சென்னை இவ்வளவு பின்தங்கியிருப்பது வருத்தத்துக்கு உரியது.
- 95 சதவீத நாய்களின் உடல்நலக் கோளாறுகள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. மீதமுள்ள 5 சதவீத நாய்கள் பொதுச் சுகாதாரத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான தீவிர உடல்நலக் குறைபாடுகளுடன் காணப்படுகின்றன. 66 சதவீத நாய்களுக்குப் புண் போன்ற பிரச்சினைகள் உள்ளன. 6 சதவீத நாய்கள் புற்றுநோய் வகைக் கட்டியால் துன்புறுகின்றன.
- சுவாச மண்டலத்தைத் தாக்கி மரணத்தை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் நோயாலும் பல நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, ரேபிஸ் மூலம் நாய்களும் மனிதர்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.
- 80 சதவீதப் பெட்டை நாய்கள் பாலூட்டும் நிலையில் இல்லை என்பது இதில் ஆறுதலுக்குரிய செய்தி. இவை குட்டிகளுக்குப் பாலூட்டும் நிலையில் இருந்தால், கருத்தடைக்கு உட்படுத்துவது கடினமான செயலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இத்தகைய கூறுகளை மாநகராட்சி நிர்வாகம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
- கருத்தடைக்கு ஆகும் செலவும் ஒரு தடையாக இருக்கிறது. நாய்க்கடி சிகிச்சை சார்ந்த மருத்துவச் செலவுகளுக்கு ஒதுக்கும் தொகையைவிட, இது குறைவாக இருக்கும் என்பதால், வருமுன் காப்பதே சிறந்தது என்கிற அடிப்படையில் சென்னை மாநகராட்சி இப்பிரச்சினைக்குப் போதுமான நிதி ஒதுக்குவது நல்லது.
- பெரும்பாலான நாய்கள் உடல்நலக் கோளாறுகளைப் பெறுவதற்கான காரணிகளைக் கண்டறிந்து சரிசெய்வது, அந்த வாயில்லா ஜீவன்களுக்கு ஒரு சமூகமாக நாம் காட்டும் அன்பு மட்டுமல்ல; பொது மக்களுக்கு அரசு அளிக்கும் பாதுகாப்பும்கூட.
- இந்நிலையில் தமிழ்நாடு அரசு நாய் வளர்ப்புக்கான மாநிலக் கொள்கையை வெளியிட்டுள்ளது. இதில் நாய் வளர்ப்போரும் வளர்க்க விரும்புவோரும் நாட்டு நாய்களுக்கு ரூ.2,500, பிற நாய்களுக்கு ரூ.5,000 பதிவுக் கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும் என்றும் உரிமத்தைப் புதுப்பிக்கத் தவறினால் நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
- நாய் வளர்த்துவரும் ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் இவ்வளவு கட்டணச் சுமையைத் தாங்கிக்கொள்ள முடியாது. இதனால் பலர் தமது நாய்களைத் தெருக்களில் விட்டுவிடும் ஆபத்து உள்ளதை அரசு உணர வேண்டும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்போருக்கும் வருமான வரி செலுத்தாதவர்களுக்கும் வளர்ப்பு நாய்ப் பதிவுக்கான கட்டணத்தையும் புதுப்பிக்கத் தவறுதலுக்கான அபராதத்தையும் கணிசமாகக் குறைக்க வேண்டும்.
- சிறாருக்கும், பாதசாரிகளுக்கும் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கும், வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்புவோருக்கும் தெருநாய்கள் ஓர் அச்சுறுத்தலாகவே உள்ளன. அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது மக்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவதாக இருக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 09 – 2024)