TNPSC Thervupettagam

தெற்காசியாவில் ஜனநாயக அழுகல்!

August 18 , 2024 148 days 123 0

தெற்காசியாவில் ஜனநாயக அழுகல்!

  • வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா வாஜித், ஜனநாயகத்தைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க அவசியமான மூன்று அம்சங்களின் கழுத்தை கடந்த பத்தாண்டுகளில் திட்டமிட்ட முறையில் தொடர்ந்து நெரித்து நாசப்படுத்தினார்.
  • சட்டப்படியான ஆட்சியை நடத்தும் ஜனநாயக அரசு என்ற அந்தஸ்தை அரசு இழந்ததால், மக்களுடைய எதிர்விளைவாக மூண்ட கோபம் மாணவர்களின் பெருங்கிளர்ச்சியால் பொங்கி – பெரிதாகி ஆட்சியையே இழக்கும் அளவுக்கு வெடித்துவிட்டது. 1. குறிப்பிட்ட கால இடைவெளியில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் பொதுத் தேர்தல்களை நடத்துவது, 2. பல கட்சி ஆட்சி முறைக்கான சூழலைக் காப்பது, 3. மக்களுடைய அடிப்படை உரிமைகளைக் குலைக்காமல் இருப்பது ஆகியவற்றில் அவர் சர்வாதிகாரத்துடன் நடந்துகொண்டார்.
  • இதுதான் அவருடைய ஆட்சியிழப்புக்குக் காரணம் என்றால் இந்த எதிர்ப்பு ஏன் அரசியல் கட்சிகளிடமிருந்து வராமல், மாணவர்களுடைய போராட்டம் மூலம் வந்தது என்ற கேள்வி எழுகிறது.

ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்

  • வங்கதேச அரசியல் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து எழுதிவரும் டேவிட் ஜேக்மேன் என்ற அரசியல் அறிஞர் 2019இல் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டார். “வங்கதேசத்தில் மாணவர்கள் கிளர்ச்சியால் விளையக்கூடிய ஆபத்து: அநீதி, ஊடுருவல் – ஆட்சி மாற்றம்” என்று அந்த ஆய்வறிக்கைக்கு தலைப்பிட்டார். வங்கதேச அரசுக்குப் பிற அரசியல் கட்சிகளாலோ, மக்கள் அமைப்புகளாலோ ஏற்படக்கூடிய ஆபத்து பெரிதாக இருக்காது என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
  • அரசை எதிர்த்துக் குரல் கொடுக்கவோ, வேலைநிறுத்தம் நடத்தவோ வலிமையின்றி எதிர்க்கட்சிகள் மக்களிடையே செல்வாக்கிழந்துவிட்டன என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். ‘மக்கள் அமைப்புகள்’ என்று கருதக்கூடிய செய்தித்தாள்கள் (ஊடகங்கள்), தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை அரசு தன்னுடைய செயல்களில் ‘பங்காளி’யாகச் சேர்த்து கொண்டுவிட்டது, எனவே ஆளுங்கட்சியிடம் - குறிப்பாகத் தலைமையிடம் - அதிகாரம் குவிவதைக் குறித்து கவலையுடன் குரல் எழுப்ப அவற்றால் முடியவில்லை. அதனால்தான், எதிர்க்கட்சிகள் ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை மாணவர் இயக்கம் பெரிய போராட்டம் மூலம் நடத்தி, நியாயம் கேட்க முடிந்தது.

இடஒதுக்கீடு விவகாரம்

  • படிப்புக்கேற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை, அரசின் வேலைவாய்ப்புகள் வேண்டியவர்களுக்கே செல்கின்றன என்ற எதிர்ப்புணர்வு, இளைஞர்களிடையே கடந்த சில ஆண்டுகளாகவே கனலாக வீசத் தொடங்கியது. வங்கதேசப் போரில் ஈடுபட்டவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% ஒதுக்கலாம் என்ற சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மாணவர்களுடைய போராட்டம் உச்சம் பெற்றது, இது ஒரே நாளில் நிகழ்ந்த நிகழ்வு அல்ல.
  • கோபம் வெடிக்க அது ஒரு அடையாள நிகழ்வு மட்டுமே. ‘படித்த, நகர்ப்புற, நடுத்தர வர்க்க குடும்பத்து இளைஞர்களிடையே படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பது கடினமாகிவருகிறது என்ற கோபமும் விரக்தியும் படிப்படியாக வளர்ந்துகொண்டேவருகின்றன’ என்று 2019லேயே ஜேக்சன் சுட்டிக்காட்டியிருந்தார்.

வங்கதேச மாணவர் இயக்கம்

  • வங்கதேசத்தில் மாணவர்கள் பங்கேற்ற அரசியல் இயக்கத்தால்தான் ‘கிழக்கு பாகிஸ்தான்’ என்று இருந்த நாடு, ‘வங்கதேசம்’ என்ற நாடாக உருவானது. பாகிஸ்தானின் ஆதிக்கத்தில் இருந்தபோது ‘வங்க மொழிதான் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை 1950களில் டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் உருவானது. அந்த வங்காள மொழிப் போராட்டமே ‘வங்கதேசம்’ என்ற தனிநாடு இயக்கமாக மாறியது.
  • 1969இல் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக உருவான எழுச்சியை, இடதுசாரி மாணவர் அமைப்புகள்தான் முன்னெடுத்தன. மக்களிடையே தங்களுடைய கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்ட 11 அம்ச கோரிக்கைகளையும் மாணவர்கள் தயாரித்தனர். (வங்கதேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரெஹ்மான் அந்தக் கோரிக்கைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, ஆறு அம்சங்களை மட்டும் வலியுறுத்தச் செய்தார். அவை வங்கதேசம் என்ற தனிநாட்டுக்கு உரிமை கோரும் அம்சங்களாகும்).
  • வங்கதேசம் தனிநாடான பிறகு அரசியல் கட்சிகளின் தலைமையிலான மக்கள் ஆட்சியும், ராணுவம் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியும் மாறி மாறி வந்தன. 1980களின் பிற்பகுதிகளில் அவாமி லீக், வங்கதேச தேசியக் கட்சி ஆகிய இருபெரும் அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகளும் இணைந்து மீண்டும் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் அமர வழிசெய்தன.
  • இருபத்தோராவது நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் வங்கதேசத்தில் மட்டுமல்ல முழு தெற்காசிய நாடுகளிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் போக்கு ஏற்பட்டது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அனைத்திலும் இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் தலைமையிலான அரசியல் கூட்டணிகளின் ஆட்சி ஏற்படத் தொடங்கியது. அந்த இரண்டு கட்சிகளுமே மத்தியவாதம் – இடதுசாரி சார்பு அல்லது மத்தியவாதம் - வலதுசாரி சார்பு என்ற கொள்கைகள் அடிப்படையில் இருந்தன. அவை: இந்தியாவில் காங்கிரஸ் – பாஜக, இலங்கையில் இலங்கை சுதந்திர கட்சி – ஐக்கிய தேசிய கட்சி, பாகிஸ்தானில் பாகிஸ்தான் மக்கள் கட்சி – பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), வங்கதேசத்தில் அவாமி லீக் – வங்கதேச தேசியக் கட்சி.

தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரம்

  • அரசு நிர்வாகத்தை அரசியல் கட்சிகள் நடத்தும் நடைமுறை, அதிக பெரும்பான்மையுடன் தேர்தெடுக்கப்பட்ட ஆளுங்கட்சியின் சர்வாதிகார ஆட்சிமுறைக்கு நடைமுறையில் மாறியது. சட்டப்படி உருவாக்கப்பட்ட பல்வேறு அரசு அமைப்புகளின் அதிகாரங்களைச் செல்லாததாக்கி, அனைத்தையும் ஆளுங்கட்சியின் கட்டளைக்கேற்ப செயல்பட வைக்கும் சர்வாதிகாரம் தலைதூக்கியது.
  • நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, இலங்கையில் மகிந்த ராஜபட்ச தலைமையிலான கட்சி, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி இதில் அடங்கும். இவை அனைத்துமே அரசின் புலனாய்வுப் பிரிவுகளை அரசியல் உள்நோக்கத்துக்குப் பயன்படுத்தின, மக்களிடையே செல்வாக்குப் பெற்ற ஊடகங்களைத் தங்களுடைய ஊதுகுழல்களாக்கின, ஒட்டுண்ணி முதலாளியத்தையும் குடும்ப நிர்வாக தொழில் குழுமங்களின் ஆதிக்கத்தையும் ஊக்குவித்தன.
  • பாகிஸ்தான் மட்டும், பலமுறை பயன்படுத்திய ராணுவம் – அரசியல் கட்சிகளின் கலப்பு ஆட்சிமுறைக்கு மீண்டும் மாறிக்கொண்டது.

தெற்காசிய நெருக்கடி

  • மக்களுடைய எதிர்ப்பும் கிளர்ச்சியும் இலங்கையிலும் வங்கதேசத்திலும் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இரு நாடுகளிலும் முழுமையான ஜனநாயக ஆட்சி ஏற்பட்டுவிடவில்லை. தெற்காசிய நாடுகளில் அமைப்புரீதியாகவே ஜனநாயகம் வலுப்பெற முடியாதபடிக்குக் கட்டமைப்பிலேயே நெருக்கடி நிலவுகிறது. இதை ‘தெற்காசிய ஜனநாயக அழுகல் நோய்க்கான அறிகுறி’ என்று அழைக்கலாம்.
  • மக்களிடையே செல்வம் – வருமானத்தில் கடுமையான ஏற்றத்தாழ்வுகள், கட்சி என்பதே ஜனநாயக முறைமையிலிருந்து மாறுவது, அரசின் நிர்வாக ஆற்றலைக் குலைப்பது இதன் அடையாளங்கள். இந்த அம்சங்கள் அனைத்துமே ஒன்றொடொன்று நெருக்கமான தொடர்புகளைக் கொண்டவை. ஜனநாயக குலைவுக்கு தொடர் விளைவாக (டூம் லூப்) இவை செயல்படுகின்றன. இதில் உள்ள அம்சங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
  • முதலாவது, அதிகரித்துக்கொண்டேவரும் ஏற்றத்தாழ்வுகள். இளங்கலை பொருளாதார மாணவர்களுக்கு ‘குஸ்நெட் வளைவு’ என்ற பாடம் கற்றுத்தரப்படும். அது, தலைகீழாக கவிழ்க்கப்பட்ட ‘யு’ வடிவ வளைவுக்கோடாகும். ஐரோப்பியப் பொருளாதாரங்களை ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் சைமன் குஸ்நெட் (Kusnet Curve) 1995இல் இந்த வளைவைப் பற்றி விளக்கினார்.
  • வளர்ந்துகொண்டிருந்த ஐரோப்பிய நாடுகளில் வருவாய் – செல்வம் ஆகியவற்றில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் உச்சத்துக்குப் போய் பிறகு கிட்டத்தட்ட சமநிலைக்குத் திரும்பின. அதாவது, ஏற்றத்தாழ்வுகள் குறைந்துவிட்டன. ஆனால், பிறகு பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் ‘குஸ்நெட் வளைவு’ ஏற்படவில்லை என்பதை டேரன் ஆமோக்லு, ஜேம்ஸ் ராபின்சன் என்ற பொருளாதார அறிஞர்கள் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அறிவித்தனர்.
  • ஐரோப்பாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறைய எந்த பொருளாதாரக் காரணங்களும் உதவவில்லை, ஜனநாயகத்தை முழுமையாக அமல்படுத்தும் நடைமுறைகளாலேயே சாத்தியமானது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஆளும் வர்க்கம் மீதும் பெரும் பணக்காரர்கள் மீதும் செலுத்திய செல்வாக்குக் காரணமாக ஏற்றத்தாழ்வுகள் குறைந்தன. ஜனநாயகப்படுத்தலால் அரசு அமைப்புகள் வலுப்பெற்று, நாட்டின் செல்வமும் வருமானமும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டதால் ஏற்றத்தாழ்வுகள் குறைந்தன.
  • வருவாயையும் செல்வத்தையும் அனைவருக்கும் சமமாகப் பங்கிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆளும் வர்க்கமும் மற்றவர்களும் ஏன் காதுகொடுக்க மறுக்கின்றனர் அல்லது அலட்சியம் செய்கின்றனர்? ஏழைகளுக்கும் தேவைப்படுவோருக்கும் அரசு அளிக்கும் உதவிகளைக்கூட ‘இலவசங்கள்’ என்றே முத்திரை குத்தி கண்டிப்பதும் நடக்கிறது.
  • அடுத்தது, இரண்டாவது அம்சம்; தெற்காசிய நாடுகளின் ஜனநாயக நோய் அழுகலுக்குக் காரணம் அரசியல் கட்சிகள், அரசியல் கட்சிகளுக்குரிய தன்மையை அவை இழந்து – தனிமனித வழிபாட்டுக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடம் கொடுப்பதுதான் இதற்குக் காரணம். அரசியல் கட்சிகளின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றால், மக்களை வாட்டும் பிரச்சினைகள் என்ன, மக்களுடைய தேவைகள் என்ன என்று அறிந்து அவற்றையே கோரிக்கைகளாகவும் திட்டங்களாகவும் தயாரித்து அவற்றை மக்களிடத்தும் அரசாங்கத்திடமும் எடுத்துச் சென்று தேர்தலில் பிரச்சாரம் செய்து, வாக்குகளைப் பெற்ற பிறகு அமல்செய்வதுதான்.
  • கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு இருக்க வேண்டும், நல்ல கொள்கையை வகுக்கும் அமைப்புகள் கட்சியில் இருக்க வேண்டும், மக்களுக்கும் கட்சிக்கும் வலுவான பாலமாகச் செயல்பட தொண்டர்கள் அமைப்பு இருக்க வேண்டும். ஐரோப்பிய அரசியல் கட்சிகள் அப்படிப்பட்டவை. பிரிட்டனில் தொழிலாளர் கட்சியும், ஜெர்மனியில் சமூக ஜனநாயக கட்சியும் ஆண்டுக்கணக்காக மக்களுடன் தொடர்பில் இருப்பவை, அவர்களை ஒன்றுதிரட்டி, கோரிக்கைகளுக்காகப் போராடி, ஆளும் வர்க்கத்தைப் புரட்சிகரமான சமூக - பொருளாதார சீர்திருத்தங்களை அமல்செய்ய வைக்கின்றன, அல்லது தங்களுடைய ஆட்சிக் காலத்தில் அவற்றைச் செய்கின்றன.

தலைவர்களின் கட்டுப்பாட்டில் கட்சிகள்

  • தெற்காசியாவில் பெரும்பாலான கட்சிகள் செல்வாக்குமிக்க தலைவர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுவதற்குப் பதிலாக, அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுவிடுகின்றன. வங்கதேச அரசியல் களம் குறித்த ஆய்வுகள் அவாமி லீக், வங்கதேச தேசியக் கட்சி, ஜாதீய கட்சி (பழமைவாதம்) ஆகியவற்றிடையே கட்சிக் கொள்கைகளிலும் கட்சியை வழிநடத்தும் வர்க்கத்திலும் வித்தியாசம் ஏதுமின்றி இருப்பதைத் தெரிவிக்கின்றன.
  • கட்சியில் முக்கியக் கொள்கைகளை வகுப்பது, முடிவுகளை எடுப்பது, அவற்றுக்கான குழுக்களைக் கட்சிக்குள் அமைப்பது ஆகிய அனைத்துமே கட்சியின் வழிபாட்டுக்குரிய தலைவரின் கண்ணசைவு அல்லது விரல் அசைவுக்கேற்பவே இருக்கின்றன.
  • வங்கதேசத்தில் காணப்பட்ட இதே நிலைமைதான் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலும் நிலவியது. கொள்கைகள் – திட்டங்கள் அடிப்படையிலான இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் என்ற இடதுசாரி கட்சி, வலுவான தொண்டர் அமைப்பையும் கட்சிக் கிளைகளையும் கொண்டு மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்த அரசியல் இயக்கமாகத் திகழ்ந்தது. பிறகு உடல் வலிமையைப் பிரதானமாக பயன்படுத்தும் அடியாட்களும், உள்ளூர் அளவில் பணம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்டவர்களும் கட்சியில் செல்வாக்குப் பெறத் தொடங்கினர்.
  • இதுவே கட்சியின் செல்வாக்கு இழப்புக்குக் காரணமானது. மார்க்சிஸ்டுகளைத் தீவிரமாக எதிர்த்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகத்தான் தோன்றியது என்றாலும் அதிலும் இதே ஆதிக்க வர்க்கங்களும் பண நோக்கம் கொண்ட இடைநிலை நிர்வாகிகளும் அதிகரித்துவிட்டனர்.

ஏன்? ஏன்? ஏன்?

  • வலுவான கட்சி அமைப்பு, துடிப்பான தொண்டர் படை, மக்களுடைய நலன் அடிப்படையிலான கொள்கைகள் – திட்டங்கள் கொண்ட அரசியல் கட்சிகள் ஏன் மையத்தில் குவிக்கப்பட்ட அதிகாரமுள்ள நிர்வாக முறை, மக்களிடையே செல்வாக்கு பெற்ற தலைவரை வழிபாட்டுக்குரியவராகவே துதிக்கும் நிலைக்கு மாறின?
  • மக்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்யும் ஆற்றல் அற்ற மாநில அரசு நிர்வாகங்களும், பொருளாதாரக் கட்டமைப்பில் நவபொருளாதாரக் கொள்கைக்கு மாறும் நிலைமையும்தான் அரசியல் கட்சிகளின் செயல்பாட்டிலும் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன. வங்கதேசத்தில் கட்டுப்பாடுகளற்ற பொருளாதாரச் சந்தை கொள்கையை முதலில் ராணுவம் தலைமையிலான சர்வாதிகார அரசுதான் கொண்டுவந்தது. பிறகு எல்லா அரசியல் கட்சிகளுமே அதை ஏற்றுக்கொண்டுவிட்டன.
  • முன்னதாக சுகாதாரம், கல்வி, தொழில் திட்டமிடல், பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவது ஆகியவற்றை அரசுதான் செய்துவந்தது அவையெல்லாம் இப்போது தனியார் துறையிடமும் உலக அளவில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும் விடப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சில துறைகளில் மட்டுமே ஓரளவுக்கு வெற்றிபெற்றுள்ளன. ஆனால் இந்த வெற்றிகள், அரசின் நிர்வாக அமைப்பை மேலும் வலிமையற்றதாக்கிவிட்டது.

அரசு இயந்திரம் முக்கியம்

  • அரசியல் கட்சிகளின் வலிமையைவிட அரசுகளின் நிர்வாக இயந்திரங்கள் வலிமையாக இருப்பது அவசியம். நீண்ட கால நலனைக் கருத்தில் கொண்டு பொருளாதாரத் திட்டங்களைத் தீட்டுவதும் அவற்றை வெவ்வேறு துறைகளின் ஒத்துழைப்போடு நிறைவேற்றுவதும்தான் தெற்காசிய நாடுகளின் அடிப்படை கட்டமைப்பையே வளர்ந்த நாடுகளாக்க உதவும். தென்கிழக்கு ஆசிய நாடுகளும் கிழக்கு ஆசிய நாடுகளான கொரியா, ஜப்பான், தைவான் போல முன்னேற அரசு இயந்திரம் வலிமையானதாகவும் நவீனமானதாகவும் இருக்க வேண்டும்.
  • தெற்காசிய நாடுகளின் அரசுகள் நிர்வாக தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவை, அவற்றால் பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க முடியும். ஆனால் அனைவருக்கும் கல்வி, படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு, பெருகிவரும் நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வது, கல்வி – சுகாதாரம் ஆகிய அடிப்டைத் தேவைகளை அனைவருக்கும் நிறைவாக அளிப்பது ஆகியவற்றைச் செய்துதர முடியாது.
  • எனவே, மத – இன அடிப்படையிலான அரசியல் வேறுபாடுகளை முதன்மைப்படுத்தி ஆதரவாளர்களை ஈர்க்கவும் அடிப்படையை வலுப்படுத்தவும் அரசியல் கட்சிகள் முற்படுவதால் அரசியல் கட்சிகளுக்குள்ளேயே ஜனநாயகத்தன்மை, தலைமையைத் துதிப்பதாக மாறிவிடுகிறது.
  • இதனால் அரசியல் கலாச்சாரமே தேசியவாத, மதவாத எண்ணங்களின் அடிப்படையில் வலுவடைகிறது. சிறுபான்மையினர் குறி வைக்கப்படுகின்றனர். வங்கதேசத்திலேயே கடந்த சில வாரங்களாக சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருவது இதையே காட்டுகிறது. அவர்கள் பலிகடாக்களாக ஆக்கப்படுகின்றனர்.

நன்றி: அருஞ்சொல் (18 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்