TNPSC Thervupettagam

தேசத்துரோகச் சட்டத்துக்கு எப்போது முடிவு?

December 20 , 2019 1850 days 868 0
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹுன்டி மாவட்டத்தில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது காவல் துறையால் தேசத்துரோக வழக்குக்காகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைக் கடந்த மாதத்தில் ‘ஸ்க்ரால்’ வலைதளம் வெளியுலகின் கவனத்துக்குக் கொண்டுவந்தது.
  • குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடியினர். 2012-ல் பாதுகாப்புப் படையினரால் மாவோயிஸ்ட்டுகள் மீது நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட என்கவுன்டர் தாக்குதல்கள் போலி தாக்குதல்களே என்று ஏழு ஆண்டுகளாக நீடித்துவந்த நீதித் துறை விசாரணை, டிசம்பர் தொடக்கத்தில் முடிவுக்குவந்துள்ளது. போலி தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் மாவோயிஸ்ட்டுகள் அல்ல, அப்பாவி கிராம மக்கள்தான்.

இரண்டு நிகழ்வுகள்

  • மத்திய இந்தியாவில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே ஒற்றுமை உண்டு. இந்தியாவில் பின்பற்றப்படும் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாட்டிலும், அழகாக நெய்யப்பட்ட அரசமைப்பிலும் ஏற்பட்டிருக்கும் ஓட்டைகளையே இவை எடுத்துக்காட்டுகின்றன.
  • எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், சுதந்திரம் கிடைத்து எழுபதாண்டுகள் ஆன பிறகும், தனிநபர்களுக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் அதிகாரச் சமநிலையில்லை என்பதையே இந்நிகழ்வுகள் விரிவான முறையிலும் ஆழமான வகையிலும் எடுத்துக்காட்டுகின்றன.
  • இந்திய அரசு கையாளும் வழிமுறைகளைப் பார்க்கும்போது, அது தனது காலனியாதிக்க முன்னோடியைப் போலவே, சட்ட வரம்புகளுக்கு உட்பட்டும் அப்பாற்பட்டும் ஆயுதங்களைக் கையாளுவதாகத் தோன்றுகிறது. அவை, கண்காணிப்பிலும் பொறுப்பிலும் குறைவுபட்டு, தனது மக்களுக்கே எதிராக அமைந்துவிடக்கூடும். நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இந்த ஆயுதங்கள் உறைகளுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும்போது நிலவுரிமை, இயற்கை வளங்களின் பாதுகாப்புக்காகத் தீவிரப் போராட்டங்கள் நிலவுகிற ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற பகுதிகளில் அரசின் சட்டபூர்வமான தன்மைக்குக் கடும் சவால்கள் எழுகின்றன.

தேசத்துரோகம் என்ற இருள் சூழ்ந்த பகுதி

  • ஹுன்டி மாவட்டத்தில் பதியப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகளுக்கான பின்னணி 2017-ல் தொடங்குகிறது, அப்போதுதான் பதல்காடி இயக்கம் தொடங்கப்பட்டது. பெருநிறுவனங்கள் தங்கள் நிலங்களை அபகரிப்பதால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர், புது முறையிலான போராட்டத்தைக் கையிலெடுத்தார்கள். பழங்குடியினரின் தன்னாட்சியை உறுதிப்படுத்தும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையை ஒவ்வொரு கிராமத்தின் எல்லையிலும் கற்பலகைகளில் செதுக்கிவைத்தார்கள்.
  • பழங்குடியினருடனான பிரச்சினையில் தடிகள், பாரம்பரிய ஆயுதங்களைக் கொண்டு காவல் துறையினர் தாக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கைகள் குற்றஞ்சாட்டுகின்றன. மேலும், பழங்குடியினர் இயக்கத்தின் தலைவர்கள், அட்டவணைப் பகுதிகள் என்ற பெயரால், அப்பாவி மக்களைத் தவறாக வழிநடத்தியதாகவும், அரசமைப்புச் சட்டத்துக்குத் தவறான பொருள்விளக்கம் அளிக்கும்வகையில் கற்பலகைகளை நிறுவியதாகவும் கூறுகின்றன. இந்த முதல் தகவல் அறிக்கைகளின் காரணமாக, சிலர் மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
  • ஹுன்டி மாவட்டத்தில் நடந்துவரும் நிகழ்வுகள், சட்ட அமைப்பு முறையிலும் அதை நடைமுறைப் படுத்துபவர்களிடமும் உள்ள பல்வேறு விதமான தவறுகளை வெளிப்படுத்துகின்றன. காலனிய ஆட்சிக் காலத்தில் முதன்முறையாக இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆன பிறகும்கூட, தேசத்துரோகத்தைப் பற்றிய பிரிவுகள் தவறாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையிலேயே தெளிவற்றதாகவும் குழப்பமான தாகவும் தொடர்கின்றன. அரசுக்கு எதிராக அதிருப்தி கொண்டிருப்பதும் அதற்கு எதிராக வெறுப்பை அல்லது எதிர்ப்பைக் காட்டுவதும் தேசத்துரோகம் என்று வரையறுக்கப்படுகிறது.
    இத்தகைய வார்த்தைகள் எல்லையற்ற வகைகளில் அதைக் கையாளுவதற்கு வாய்ப்பாக இருக்கின்றன என்பது வெளிப்படையானது.
  • 1962-ல் தேசத்துரோகச் சட்டத்தின் செல்லும்தன்மை குறித்து வழக்கிடப்பட்டபோது, அதைத் தொடர்வதற்கு அனுமதியளித்த உச்ச நீதிமன்றம், அதன் விரிவான அளாவுகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறியது. பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்ட செயல்கள் மட்டுமே இப்பிரிவின் கீழ் வரும் என்றும் குறிப்பிட்டது.
    ஒடுக்குமுறையின் கருவி
  • இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட இத்தனை ஆண்டுகளில், நீதிபதிகள் சுட்டிக்காட்டிய கருத்துகள் தேசத்துரோகச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதில் எந்த விளைவுகளையுமே ஏற்படுத்தவில்லை. ‘பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்ட’ என்று தொடங்கும் வாசகங்களும் ஏறக்குறைய தேசத் துரோக சட்டப் பிரிவைப் போல தெளிவற்றதாகவே இருக்கிறது. இரண்டாவதாக, இந்தச் சட்டப் பிரிவு எப்போதும்போலவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் நிலை குலையச் செய்யும்வகையில் காவல் துறையால் தொடர்ந்து கையாளப்பட்டுவருகிறது. சிறையில் அடைக்கப்பட்டவர்களைப் பிணையில் விடுவிக்க விசாரணை நீதிமன்றங்கள் மறுப்பதும் தொடர்கிறது.
  • நீதியின் இந்தப் படுதோல்வி அரசின் ஒவ்வொரு அங்கத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. சட்டப் புத்தகங்களில் இந்தச் சட்டப் பிரிவு தொடர்வதற்கு நாடாளுமன்றம் அனுமதிக்கிறது; அதைச் செல்லாதது என்று அறிவிப்பதற்கான வாய்ப்பு அமைந்தபோதும் உச்ச நீதிமன்றமும் அவ்வாறு செய்யவில்லை; ஒடுக்குமுறைக்கான உடனடிக் கருவியாக இந்தச் சட்டப் பிரிவுகளை மாநில அரசுகளும் காவல் துறையும் கையாளுகின்றன. இச்சட்டப் பிரிவின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் நீண்ட காலத்துக்குச் சிறைவைக்கப்படுவதற்கு விசாரணை நீதிமன்றங்களும் வாய்ப்பளிக்கின்றன.

தேசத்துரோகச் சட்டங்கள்

  • தேசத்துரோகச் சட்டங்களின் இந்த குயுக்திகள், காலனியாதிக்கத்துக்குப் பிறகான சட்டங்களிலும் நகலெடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டத்தில், பயங்கரவாதக் குழுக்கள் அல்லது சட்டவிரோத அமைப்புகளில் உறுப்பினராக இருப்பதைக் குற்றச்செயலாக்கும் வாசகங்கள் தெளிவற்ற வகையிலேயே இடம்பெற்றுள்ளன. உறுப்பினர் என்பதற்கான பொருள் என்ன என்பதை விவரிக்கும் விளக்கங்கள் எதுவும் அச்சட்டத்தில் இல்லை.
  • இந்த சட்டப் பிரிவுகளின் கீழ் பத்திரிகையாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், மனித உரிமை வழக்கறிஞர்கள் 2018-ல் நடந்த பீமா கோரேகான் சம்பவங்களில் தவறாகத் தொடர்புபடுத்தப்பட்டு கைதாகி இதுவரையில் விசாரணையின்றிச் சிறையிலேயே இருந்துவருகின்றனர். விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் இரண்டிலுமே அவர்களுக்குப் பிணை மறுக்கப்பட்டிருக்கிறது. குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கான எந்த சாட்சியமும் இல்லாமலேயே ஆண்டுக்கணக்கில் சிறைப்படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று மீண்டும் குரல்கள் எழுந்துள்ளன.

எப்படி வைப்பது முற்றுப்புள்ளி

  • ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் சம்பவங்கள், சட்டத்தின் ஆட்சியும் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பும் யாருக்கு, எங்கு அதிகமாகத் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு அங்கெல்லாம் அதை அளிப்பதில் தொடர்ந்து தவறுகின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றன. தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ள சட்டங்களை இயற்றுகிற நாடாளுமன்றம், அதை உறுதிப்படுத்துகிற நீதிமன்றங்கள், அதைத் தவறாகக் கையாளும் காவல் துறை, அதற்கு உடந்தையாக இருக்கும் விசாரணை நீதிமன்றங்கள் என்று சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டியவர்கள் என்று யாரையெல்லாம் நாம் எதிர்பார்க்கிறோமோ அவர்களே உடந்தையாக இருப்பதுதான் இந்தத் தோல்விக்கான அடிப்படைக் காரணம்.
  • வெளிப்படையான இந்த முடிவில்லாத சுழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், அதற்கான அடிப்படையான காரணங்கள் தேசத்துரோகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் அது போன்ற சட்டப் பிரிவுகளில் அடங்கியுள்ளன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். அதிகாரங்கள் அனைத்தும் அரசு அமைப்புகளின் கைகளிலேயே அளிக்கப்பட்டுள்ளன. அதைப் போல, சட்டமுறைப்படி தங்களைப் பாதுகாக்கும் வாய்ப்புகள் தனிநபர்களிடமிருந்தும் சமூகங்களிடமிருந்தும் பிடுங்கப்பட்டுள்ளன.
    நமது சமீப கால வரலாற்றில், இன்னொருபக்கம் இதற்கு முற்றிலும் எதிரான திசையில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் நம்மிடம் உதாரணங்கள் உண்டு. வன உரிமைச் சட்டம், தகவல்பெறும் உரிமைச் சட்டம் ஆகிய இரண்டும் முக்கியமான களங்களில் அரசுக்கும் மக்களுக்கும் இடையே உறவைச் சமநிலைப்படுத்துகின்றன.
  • இந்திய அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் அங்கீகரித்துள்ளபடி சுதந்திர, சமத்துவ உறுதிமொழிகளை நாம் நிறைவேற்றியாக வேண்டும் என்றால், தகவல்பெறும் உரிமைச் சட்டம், வன உரிமைச் சட்டம் ஆகியவை பிறப்பெடுப்பதற்குக் காரணமாக இருந்த சமூக இயக்கங்களிலிருந்தே நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தேசத்துரோகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களுக்கு எதிராகவும் அதே வழியில்தான் அணிதிரள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (20-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்