- தேசத் துரோகச் சட்டம் என்று அறியப்படும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124அ, அரசமைப்புச் சட்டத்தின்படி சரியானதா என்பதைத் தீர்மானிக்கும் விவகாரம், ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வின் விசாரணைக்குச் சென்றிருப்பது வரவேற்கத் தக்கது.
- பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட குற்றவியல் சட்டத்தில், தேசத் துரோகச் சட்டம் 1860இல் இணைக்கப்பட்டது. இச்சட்டப் பிரிவில் தேசத் துரோகம் என்பதற்கான வரையறையில் அரசுக்கு எதிரான அதிருப்தியைத் தூண்டுவதும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் அரசை விமர்சிப்பவர்களைத் தண்டிப்பதற்கே அது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இச்சட்டப் பிரிவு நீண்ட காலமாகப் பல்வேறு தரப்பினரால் எதிர்க்கப் பட்டு வருகிறது.
- 1962இல், ‘கேதார்நாத் சிங் எதிர் பிஹார் அரசு’ வழக்கில், அரசமைப்புச் சட்டப்படி தேசத் துரோகச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தீர்ப்பளித்தது. தற்போது மீண்டும் தேசத் துரோகச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரிக்க ஏற்றுக் கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம், இது குறித்த தீர்ப்பு வரும்வரை தேசத் துரோகச் சட்டத்தின்கீழ் புதிய வழக்குகள் பதியக் கூடாது என்றும் ஏற்கெனவே பதியப்பட்ட வழக்குகளில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு மே 2022இல் உத்தரவிட்டிருந்தது.
- இந்நிலையில், ஜூன் 2023இல் வெளியான சட்ட ஆணையத்தின் 279ஆம் அறிக்கையில், தேசத் துரோகச் சட்டப் பிரிவு நீக்கப்படக் கூடாது என்று கூறியிருந்தது. அதே நேரம், அது தவறாகப் பயன்படுவதைத் தடுப்பதற்கான நடைமுறைரீதியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.
- இந்நிலையில், மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டத்துக்குப் பதிலாக ‘பாரதிய நியாய சன்ஹிதா’ என்னும் புதிய குற்றவியல் சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இருப்பதால், தேசத் துரோகச் சட்டம் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் இதை ஏற்க மறுத்துவிட்டது. தற்போது நாடாளுமன்ற நிலைக் குழுவின் விவாதத்துக்கு விடப்பட்டிருக்கும் பாரதிய நியாய சன்ஹிதா அமல்படுத்தப்பட்டாலும், அது அமல்படுத்தப்படும் காலம்வரை பதியப்பட்ட தேசத் துரோக வழக்குகள் அப்படியே தொடரும்.
- எந்த ஒரு குற்றவியல் சட்டமும் அது அமல்படுத்தப்படுவதற்கு முந்தையகாலத்துக்குப் பொருந்தாது. எனவே, தேசத் துரோகச் சட்டம் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கான தேவை நீங்கிவிடவில்லை என்னும்நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளது. தேசத் துரோக வழக்குகளில்,குற்றம்சாட்டப்பட்டவர் தண்டிக்கப்படும் விகிதம் மாறிக் கொண்டே இருந்தாலும் அதிகபட்சமாக 33.3% ஆக இருப்பது கவனிக்கத்தக்கது. இதை முன் வைத்து, இந்தச் சட்டம் தேவையா என்னும் விவாதமும் நடைபெற்றுவருகிறது.
- இந்த விஷயத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு எத்தகைய தீர்ப்பை வேண்டுமானாலும் வழங்கலாம்; அல்லது ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு ஒப்படைக்கலாம். எப்படி இருந்தாலும் தேசத் துரோக வழக்கை எதிர்கொண்டிருக்கும் பலரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கப்போகும் இந்த விவகாரத்தில் யாரும் தவறாகத் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் உச்ச நீதிமன்றம் காட்டிவரும் அக்கறை பாராட்டுக்குரியது. தேசத் துரோகச் சட்டம் உள்பட, எந்த ஒரு சட்டமும் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 09 – 2023)