TNPSC Thervupettagam

தேசத் துரோகம் என்னும் காலனிய எச்சம்

May 15 , 2022 1038 days 897 0
  • தேசத் துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124(அ) குறித்து தேசிய அளவில் தீவிர விவாதம் எழுந்துள்ளது. மூன்றாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலும் நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க இப்பிரிவு வகைசெய்கிறது. இப்பிரிவின் செல்லும் தன்மையைக் கேள்விக்குட்படுத்திப் பத்திரிகையாளர்களால் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றம், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இவ்வழக்குகளை மாற்ற முடிவெடுத்துள்ளது.
  • மத்திய அரசின் பார்வையோ நடைமுறையில் இருந்துவரும் இந்தச் சட்டப்பிரிவு மேலும் தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இச்சட்டப்பிரிவு செல்லும் என்று 1962-ல் அளிக்கப்பட்ட கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பின்பற்ற வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
  • கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பில் தேசத் துரோகச் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும்கூட, அப்பிரிவு தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்தது. வன்முறையைத் தூண்டிவிடவோ அல்லது அதற்கு அழைப்புவிடுக்கவோ செய்யாதபட்சத்தில், அரசின் மீது கூறப்படும் விமர்சனங்கள் தேசத் துரோகம் ஆகாது என்று அத்தீர்ப்பு வரையறுத்தது. தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு எதிர்கொண்ட விதத்தை விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேச விரோதக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்ததாகும். வினோத் துவா மீதான இக்குற்றச்சாட்டை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது.
  • தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்த வினோத் துவா, குறைந்தபட்சம் பத்தாண்டு காலம் ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர்கள் மீது இக்குற்றச்சாட்டைப் பதிவுசெய்யும் முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர், எதிர்க்கட்சித் தலைவர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட குழுவிடம் முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கில் அவர் கோரிய இந்த வேண்டுதலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
  • தேசத் துரோகச் சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்ற காரணத்துக்காகவே அச்சட்டப்பிரிவைச் செல்லும் என்று அறிவித்த முன்னோடித் தீர்ப்பு ஒன்றை மறுபரிசீலிக்க வேண்டிய தேவையில்லை என்பது, இவ்விஷயத்தில் மத்திய அரசின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதே கருத்துரிமை. ஆனால், காலனிய காலத்தில் சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் மீது பிரயோகிக்கப்பட்ட தேசத் துரோகச் சட்டப்பிரிவைக் கருத்துரிமைக்கான கட்டுப்பாடாக இனிமேலும் தொடர வேண்டுமா என்பதுதான் கேள்வி. அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பதே தேசத் துரோகம் என்ற பார்வையிலிருந்து உருவானது இதச பிரிவு 124(அ). சுதந்திரம் பெற்ற பிறகும், அதைத் தொடரத்தான் வேண்டுமா?
  • இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறு என்பதே அப்போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட தேசத் துரோக வழக்குகளின் வரலாறுதான். தேசத் துரோக வழக்குகளில் காலனிய ஆதிக்கம் மட்டுமல்ல, அதனூடாக நிறவெறிப் போக்கும் சேர்ந்தியங்கியது. 1878-ல் இயற்றப்பட்ட பிராந்திய மொழிகள் பத்திரிகைச் சட்டப்படி தலைவர்கள் தாங்கள் நடத்திய பத்திரிகைகளில் எழுதிய, வெளியிட்ட செய்திகளுக்காகவும் கட்டுரைகளுக்காகவும் தேசத் துரோக வழக்குகளை எதிர்கொண்டனர்.
  • பாலகங்காதர திலகர் இரண்டு முறை தேசத் துரோக வழக்குகளை எதிர்கொண்டார். அவற்றில் ஒரு வழக்கில் வெற்றிபெறவும் செய்தார். புனே மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அவருடைய வழக்கறிஞராக முகம்மது அலி ஜின்னா வாதாடினார் என்றாலும், அவரால் மாவட்ட நீதிமன்றத்தில் வெற்றிபெற முடியாமல் போனது. ஆனால், அவ்வழக்கை பம்பாய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து திலகரை தேசத் துரோக வழக்கிலிருந்து விடுவித்தார்.
  • 1937-ல் மெக்காலே தயாரித்த குற்றவியல் சட்ட வரைவிலேயே இந்தச் சட்டப்பிரிவு இடம்பெற்றிருந்தபோதிலும், இந்தியத் தண்டனைச் சட்டத்தை இயற்றியபோது, அது சேர்க்கப்படவில்லை. தேசத் துரோகக் குற்றத்துக்கான அப்போதைய சட்டப்பிரிவுகளில் இருந்த போதாமைகளைக் களையும் நோக்கத்தில், அக்குற்றத்துக்கான வரையறையும் தண்டனையும் 1870-ல்தான் இந்திய தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு, பின்பு அது 1898-ல் திருத்தப்பட்டது.
  • தேசத் தந்தை காந்தியும் ஜவாஹர்லால் நேரு, மௌலானா ஆஸாத் போன்ற பெருந்தலைவர்களும் இக்குற்றச்சாட்டின் பேரில் கைதாகியிருக்கிறார்கள். அதனால்தான் இந்தச் சட்டப்பிரிவு நடைமுறைக் காரணங்களுக்காக மட்டுமின்றி, வரலாற்றுக் காரணங்களுக்காகவும் நீடிக்கக் கூடாது என்ற கருத்தை நாடாளுமன்றத்திலேயே நேரு வெளிப்படுத்தினார். ஆனாலும், அது தொடரவே செய்கிறது. ஆனால், சமீப காலமாக அரசுக்கு எதிரான கருத்துகளைப் பகிரும் பத்திரிகையாளர்களுக்கும் மாணவர் தலைவர்களுக்கும் எதிராக அந்தச் சட்டப்பிரிவைக் கையாளும் வழக்கம் உருவாகியிருக்கிறது.
  • இந்திய அரசமைப்பு விவாதிக்கப்பட்டபோதும்கூட, தேசத் துரோகம் குறித்த கூறு விவாதிக்கப்பட்டது. ஆனால், அதை இறுதிசெய்யும்போது, தேசத் துரோகம் குறித்த வார்த்தைகள் மிகுந்த கவனத்துடன் தவிர்க்கப்பட்டன. அரசுக்கு எதிரான விமர்சனங்களுக்கான கருத்துரிமை மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே கருத்துரிமை தொடர்பான அரசமைப்புக் கூறில் தேசத் துரோகம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது.
  • 1950-ல் ரொமேஷ் தாப்பர் வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்த வார்த்தை அரசமைப்பில் தவிர்க்கப்பட்டதற்கான காரணம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இத்தீர்ப்பைப் பின்பற்றி 1952-ல் மாஸ்டர் தாரா சிங் வழக்கில் பஞ்சாப் உயர் நீதிமன்றமும் 1958-ல் ராம் நந்தன் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றமும் தேசத் துரோகக் குற்றத்துக்கான 124(அ) சட்டப்பிரிவைச் செல்லாது என்றே அறிவித்தன. நீதிபதி ஜி.எஸ்.ராஜத்யாக்ஷா தலைமையிலான பத்திரிகை ஆணையத்தின் அறிக்கையும், இதச பிரிவு 124(அ) நீக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அளித்துள்ளது.
  • 1962-ல் கேதார் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பே இந்திய தண்டனைச் சட்டத்தில் 124(அ) பிரிவைத் தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. ஆனால், அத்தீர்ப்பில் விதித்த கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து மாறுபட்ட கருத்துகளே நிலவுகின்றன. இப்போது, அந்த வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யலாமா என்பது குறித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் முன்வந்துள்ளது. இந்தியச் சட்ட அமைப்புமுறையில், காலனிய அம்சங்களைத் துடைத்தெறிய வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டிருக்கும் மத்திய அரசு, இவ்விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் முடிவை ஏற்றுக்கொள்ளுமா இல்லை மறுக்குமா என்பது இன்றோ நாளையோ தெரிந்துவிடும்.

நன்றி: தி இந்து (15 – 05 – 2022)

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top