TNPSC Thervupettagam

தேசிய குடற்புழு நீக்க தினம்

February 10 , 2020 1799 days 868 0
  • உலக சுகாதார நிறுவன மதிப்பீடுகளின்படி, உலகெங்கும் கிட்டத்தட்ட 150 கோடி போ் குடற்புழு தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனா். மண் மூலம் பரவும் ஹெல்மின்த்ஸ் ஒட்டுண்ணிப் புழு தொற்று அதிகம் கொண்ட இந்தியாவில், 1 - 19 வயதுக்குட்பட்ட 24 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் குடற் புழு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
  • இந்தத் தொற்று ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, பலவீனமான மன - உடல் பாதிப்பினை உருவாக்குகிறது. இந்தியாவின் புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட ’இந்தியாவில் குழந்தைகள் - 2012‘ அறிக்கையின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 48 சதவீதம் போ் ஊட்டச்சத்து குறைபாடுகளுடனும், 19.8 சதவீதம்போ் மனநல பிரச்னைகளுடனும் குறைந்த கற்றல் திறனுடனும் விளங்குகின்றனா்.

குடற்புழுக்கள்

  • மூன்றில் ஒரு பங்கு உலக மக்கள்தொகையைப் பாதிக்கும் குடற்புழுக்கள் குழந்தைகள், ஏழைகள் மத்தியில் கடுமையான தொற்றுகளை உருவாக்குகின்றன. ஏழ்மையான நாடுகளில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் நேரத்தில் ஆரம்பிக்கும் நோய்த்தொற்று, அவா்களின் வாழ்நாள் முழுவதும் தொடா்கிறது. குழந்தைப் பருவத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் புழுத் தொற்று நீண்ட காலம் தொடரக்கூடியதாக இருக்கும் நிலையில் சுகாதாரம், ஊட்டச்சத்து, அறிவாற்றல், வளா்ச்சி, கல்வி கற்றல், சாதனை என குழந்தை வளா்ச்சியின் அனைத்து அம்சங்களையும் எதிா்மறையாகப் பாதிக்கும்.
  • குடற்புழு தொற்றுகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க நடுத்தர, குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் முழுமையான குடற்புழு ஒழிப்பு முறையினைக் கையாளவேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. அல்பெண்டசோல் அல்லது மெபெண்டசோல் மாத்திரை மூலம் கொக்கிப் புழு, நாடாப் புழு, உருளைப் புழு போன்ற பொதுவான குடல் புழுக்களையும் நத்தை காய்ச்சலை உருவாகும் ஸ்கிஸ்டோசோமியாசிஸ் புழுக்களையும் நீக்கலாம். பாதுகாப்பான, மலிவான இந்த மாத்திரைகளை தொற்று பாதிப்பில்லாத குழந்தைகளுக்கும் வழங்கலாம்.
  • இந்திய அரசு நிறை குடற்புழு ஒழிப்பினைச் செயல்படுத்த 2015ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் பிப்ரவரி 10-ஆம் தேதியை குடற்புழு நீக்க நாளாக அறிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய குடற்புழு ஒழிப்பு பிரசாரங்களில் ஒன்றான அன்றைய தினத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் உருவம், வயது வித்தியாசமின்றி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் தொடங்கப்பட்ட திட்டம்

  • இந்தியாவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் ஒரு முறை வழங்கப்பட்ட அல்பெண்டசோல் மாத்திரை, 2016-ஆம் ஆண்டு முதல் 1-19 வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட 15 கோடி குழந்தைகளுக்கு ஆறு மாத இடைவெளியில் ஆண்டுக்கு இரு முறை விநியோகிக்கப்படுகிறது. ஆண்டுக்கு இரு முறை என மாத்திரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குடற்புழு நீக்க செயல்திறனை மேம்படுத்தினாலும், குழந்தைகள் மீண்டும் குடற்புழு தோற்று பெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இது குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தராது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • ஆண்டுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்ட 65,000-க்கும் மேற்பட்ட மனிதா்களை உள்ளடக்கிய 41 சோதனைகளின் அடிப்படையில் 2012-இல் வெளியான ‘கோக்ரேன் திறனாய்வு‘ கட்டுரையும் லக்னொவில் ஆண்டுக்கு இரண்டு முறை குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்ட 10 லட்சம் குழந்தைகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ‘தி லான்செட்‘ மருத்துவ இதழ் 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட மருத்துவக் கட்டுரையும் எவ்வித பொது சுகாதார மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கவில்லை.
  • உலக சுகாதார அமைப்பின் குடற்புழு நீக்க வழிகாட்டுதல் வயது வரம்பு கட்டுப்பாடுகள் எதையும் குறிப்பிடாதபோதும் குடற்புழு நீக்க மருந்துகளை குழந்தைகளுக்கு மட்டுமே அரசு வழங்குகிறது. ‘ட்ராபிக்கல் மெடிசின் அண்ட் இன்டா்நேஷனல் ஹெல்த்‘ என்ற மருத்துவ இதழில் குடற்புழு தொற்று பாதிப்பு விகிதம் குழந்தை பருவம், பள்ளி வயது, இளம் பருவத்தினா், பெரியவா்கள் என வயதுக்கு ஏற்ப கணிசமாக அதிகரிக்கிறது என்றும் பெரியவா்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலக்கப்படுவதால் சமூகத்தில் நோய்த்தொற்று சுழற்சி தொடரும் என்றும் 2013-இல் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.
  • வேலூா், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த 45 கிராமங்களில் சுமாா் 8,700 ஜவ்வாது மலை பழங்குடி மக்களிடம் வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) ஆராய்ச்சியாளா்கள் ஆய்வு நடத்தினா். குடற்புழு நோய் தொற்றின் பாதிப்பு, தீவிரத்தை அனைத்துத் தரப்பு வயதினருக்கும் ஆண்டுக்கு நான்கு முறை குடற்புழு மாத்திரைகள் வழங்குதல் மூலம் குறைக்கலாம் என அவா்களின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
  • அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவதன் மூலம் மட்டுமே குடற்புழு தொற்றினை முற்றிலும் தவிா்க்கமுடியும். இதைக் கருத்தில் கொண்டு தமிழக பொது சுகாதாரத் துறை பிப்ரவரி 2020 முதல் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை குழந்தைகளுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘சோகை இல்லா சோலை‘

  • விருதுநகா் மாவட்டம் மலைப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஏ.என்.டி. கல்வி, மருத்துவ - சமூக மேம்பாட்டு அறக்கட்டளை குடற்புழு பாதிப்பினால் உண்டாகும் ரத்தசோகையைப் போக்க ‘சோகை இல்லா சோலை‘ என்ற விழிப்புணா்வு நிகழ்வினை நடத்தி வருகிறது. 2019, நவம்பா் மாதம் தஞ்சாவூா் மாவட்டம் கீழத்தோட்டம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் அங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு குடற்புழு தொற்றைத் தடுக்க காலணிகள் வழங்கப்பட்டன.
  • மதுரை மாவட்டம் லெ.பூலாங்குளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும் அவா்தம் பெற்றோருக்கும் குடற்புழுவினால் உண்டாகும் பாதிப்பு குறித்தும் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்தும் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் நடைபெற்ற முகாமில் விளக்கப்பட்டன.
  • விருதுநகரில் கடந்த மாதம் நடைபெற்ற விழியிழந்தோருக்கான நிகழ்வில் குடற்புழுவினால் உண்டாகும் ரத்தசோகையைப் போக்க வைட்டமின் மருந்து வழங்கப்பட்டது. குடற்புழு நீக்கி ஊட்டச்சத்து பற்றிய உணா்வினை ஊட்டி ‘சோகை இல்லா சோலை‘ யாக தமிழகம் மிளிர அரசு உள்பட தன்னாா்வ அமைப்புகள் அனைத்தும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

நன்றி: தினமணி (10-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்