TNPSC Thervupettagam

தேசிய குடிமக்கள் பதிவேடு: மனிதாபிமான வெளிச்சம் நம் முடிவை வழிநடத்தட்டும்

September 7 , 2019 1908 days 751 0
  • தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியான இந்த ஒரு வாரத்தில், அசாம் துயரம் தேசியத் துயரமாக மாறியிருக்கிறது. அசாமில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் காணத் தலைப்பட்ட இந்தப் பதிவேட்டுத் திட்டம், அதைத் தாண்டிய தீர்வுகளைக் கையில் வைத்திருக்கவில்லை. இந்தப் பட்டியலில் 19 லட்சம் பேர் விடுபட்டிருக்கிறார்கள்.

தீர்ப்பாயம்

  • அதாவது, நாடற்றவர்கள் ஆகியிருக்கிறார்கள். இவர்கள் அந்நியர்களுக்கான தீர்ப்பாயத்தில் முறையீடுசெய்து தங்களுடைய குடியுரிமையை நிரூபிப்பதற்கு 120 நாட்கள் காலக்கெடுவை உள்துறை அமைச்சகம் அளித்திருக்கிறது. நம்முடைய அரசு இயந்திரத்துக்கே உரிய குளறுபடிகள் இந்தப் பதிவேட்டுப் பணியிலும் தலைகாட்டாமல் இல்லை; ஓய்வுபெற்ற ராணுவ வீரரான முகம்மது சனாலுல்லா, சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த குமார் மாலோ என்று ஊர் அறிந்த பலருடைய பெயர்களையே விட்டிருக்கின்றனர் அதிகாரிகள். இவையெல்லாம் சரிபடுத்தப்பட்டாலும், அதற்குப் பிறகும், சட்ட விரோதக் குடியேறிகள் என்று எஞ்சுவோரை என்ன செய்வது என்ற கேள்வி இருக்கிறது. அதற்கு யாரிடமும் பதில் இல்லை.

சட்ட விரோதக் குடியேறிகள்

  • சட்ட விரோதக் குடியேறிகள் என்று இனம் காணப்படு வோரில் ஆகப் பெரும்பான்மையினர் வங்கதேசத்தினர். இப்படியான சட்டவிரோதக் குடியேற்றத்தை வங்கதேசம் இதுவரை ஒப்புக்கொண்டதில்லை; இந்தியாவும் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தை உள்நாட்டு விவகாரம் என்றே கூறிவந்திருக்கிறது. சர்வதேச உறவு சார்ந்து முக்கியமான உறவுநிலையில் உள்ள கூட்டாளியான வங்கதேசத்துடன் இந்த விவகாரத்தை எப்படி இந்திய அரசு அணுகப்போகிறது என்பது முக்கியமான சவால். அவர்கள் எங்கும் அனுப்பப்படப்போவதில்லை என்றால், இதுகுறித்து தாராள மனதுடன் இந்தியா ஒரு முடிவு எடுப்பது முக்கியம்; மனிதாபிமானப் பார்வைதான் அதில் முக்கியமான பங்கு வகிக்க வேண்டும்; இல்லையென்றால், பெரும் மானுடத் துயராக அது அமைந்துவிடும்.
  • இப்போதைக்குத் தடுப்புக் காவல் முகாம்களை விஸ்தரித்துக்கொண்டிருக்கிறது மாநில நிர்வாகம். அந்நியர் கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் பல லட்சம் பேர் என்பதால், அந்த முகாம்களெல்லாம் பெரும் திறந்தவெளிச் சிறைச்சாலைகளாகத்தான் இருக்கும். ‘வேலைக்கான பர்மிட் முறை கொண்டுவரப்படலாம்; ஒரு சில நிபந்தனைகளுக்குப் பின் பிணையில் விடுவிக்கப்படலாம்’ என்றெல்லாம் பேசப்படுகிறது. அவையெல்லாம் முழுத் தீர்வுகளாக அமையாது. சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் அல்ல; அரசாங்கத்துக்கும் சேர்த்துதான் பிரச்சினை.

நன்றி: இந்து தமிழ் திசை (07-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்