TNPSC Thervupettagam

தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு முன்வைக்கும் உண்மைகள்

December 22 , 2020 1491 days 628 0
  • கரோனா பெருந்தொற்றால் உடல்நலப் பாதிப்புகள், மரணங்கள் போன்றவற்றோடு பொருளாதாரச் சரிவும் ஏற்பட்டு உலகமும் இந்தியாவும் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன.
  • ஏழை எளிய மக்கள் உணவு நுகர்வும் முறையும் அவர்களின் உணவுப் பாதுகாப்பும் பெருந்தொற்றாலும் பொதுமுடக்கத்தாலும் பெரும் பாதிப்பு அடைந்திருக்கின்றன.
  • இந்நிலையில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு-5 2019-20-ன் தரவுகள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் கணக்கெடுப்பு பெருந்தொற்றுக்கு முன்பே எடுக்கப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • 22 மாநிலங்கள்/ ஒன்றிய பிரதேசங்களின் தரவுகள் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கின்றன.
  • உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்க்கண்ட், ஒடிஷா ஆகிய மாநிலங்களின் தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
  • இந்தத் தரவுகளை வைத்துப் பார்க்கும்போது பெருந்தொற்றுக்கு முன்பே குழந்தைகள் ஊட்டச்சத்து, இளைஞர்களின் உடல் வளர்ச்சி போன்றவை ஒரு மோசமான சித்திரத்தையே முன்வைக்கின்றன.
  • கணக்கெடுப்பு மேற்கொண்ட பல மாநிலங்களில் 2015-2016 அளவைவிட 2019-20-ல் நிலைமை கவலையளிக்கும் விதத்திலேயே இருக்கிறது.
  • குஜராத், மஹாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ரத்தசோகை, வளர்ச்சிக் குறைபாடு போன்ற விஷயங்களில் முந்தைய கணக்கெடுப்பைவிட தற்போது முன்னேற்றம் காணப்படுகிறது.
  • சிறுவர்கள் வளர்ச்சிக் குறைபாட்டைப் பொறுத்தவரை 13 மாநிலங்கள்/ ஒன்றியப் பிரதேசங்களில் முன்னேற்றம் காணப்படுகிறது.
  • பிஹாரிலும் அசாமிலும் சிறிதளவு முன்னேற்றம் இருந்தாலும் அரசு நிர்ணயித்த இலக்குக்கும் அதற்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது. எனினும், பெரிய மாநிலங்களில் அதிக அளவு வளர்ச்சிக் குறைபாட்டை (42.9%) கொண்ட மாநிலமாக பிஹார்தான் இன்னமும் இருக்கிறது.
  • இன்னொரு புறம் ஊட்டச்சத்துக் குறைபாடு, மோசமான உடல்நல பாதிப்பு போன்ற விஷயங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களைக் கவனப்படுத்துகிறது. முக்கியமாக, சுத்தமான தண்ணீர், கழிவுநீர் அமைப்பு, அதிகம் மாசு ஏற்படுத்தாத சமையல் எரிபொருள் போன்ற விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
  • பெண்கள் நலனைப் பொறுத்தவரை 17 மாநிலங்கள்/ ஒன்றியப் பிரதேசங்களில் குடும்ப வன்முறை சற்றே குறைந்திருக்கிறது.
  • 18-ல் குழந்தைத் திருமணங்கள் குறைந்திருக்கின்றன. ஆனாலும், பட்டினி, ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சினைகள் மோசமான அளவில் நீடிப்பது ஏற்கெனவே உள்ள போஷான் அபியான் உள்ளிட்ட திட்டங்களுக்கு முனைப்பும் வேகமும் தேவை என்பதை உணர்த்துகிறது.
  • மிக முக்கியமாக, பெருந்தொற்றால் எழும் பிரச்சினைகளுக்கு மத்தியில் மக்களின் உடல்நலனை மேம்படுத்தும் வழக்கமான நலத்திட்டங்களை எப்படிக் கிடைக்கச் செய்வது என்பது குறித்து ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து திட்டமிட வேண்டும்.
  • ஒருங்கிணைந்த நடவடிக்கைகள்தான் பட்டினியையும் கடும் வறுமையையும் ஒழிக்கும். இதுவே ஐநாவின் வளம்குன்றா வளர்ச்சி இலக்கின் நோக்கம்.
  • இதுவே, கடந்த சில தசாப்தங்களாகப் பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் நல்வாழ்வையும் ஒன்றுசேர்த்த ஒரு நாடாக இந்தியா தன் மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டிய விஷயமுமாகும்.

நன்றி: தி இந்து (22-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்