TNPSC Thervupettagam

தேசிய புலம்பெயர்வுக் கொள்கை

April 7 , 2021 1210 days 528 0
  • பொதுமுடக்கத்தால் போக்குவரத்து வசதியின்றிப் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாகவே ஊர் திரும்பிய காட்சிகள் கரோனா பெருந்தொற்றுக் காலத்தின் பெருந்துயரங்களில் ஒன்றாக என்றென்றும் நினைவில் இருக்கும்.
  • பருவக்காற்றுகளின் சூதாட்டக் களமான இந்தியாவில் சிறு குறு விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒருசில மாதங்களாவது தற்காலிகப் பணிவாய்ப்புகளைத் தேடிப் புலம்பெயர வேண்டிய நிலையே இன்னும் தொடர்கிறது.
  • இந்நிலையில், நிதி ஆயோக் தயாரித்திருக்கும் தேசிய புலம்பெயர்வுக் கொள்கைக்கான வரைவும் அது சார்ந்த விவாதங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
  • ஜனவரியில் தயாரிக்கப்பட்ட இந்த வரைவானது சுழற்சி முறை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாக இருப்பவர்கள் என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பு குறைந்தபட்சம் 10%-ஆக இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறது.
  • இந்தப் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருந்தாலும் ஏறக்குறைய அனைவருமே அமைப்புசாரா தொழிலாளர்கள்தான்.
  • அவர்களுக்கும் பணிவழங்குநர்களுக்கும் இடையே ஒப்பந்தங்களோ உடன்பாடுகளோ எதுவும் கிடையாது. எனவே, ஒரு தொழிலாளருக்கான குறைந்தபட்ச உரிமைகள்கூட அவர்களுக்கு இதுவரையில் இல்லை. பொதுமுடக்கக் காலத்தில் நாம் காண நேர்ந்த கொடுமைகளுக்கும் அதுவே காரணம்.
  • நிதி ஆயோக் தயாரித்திருக்கும் தேசிய புலம்பெயர்வுக் கொள்கைக்கான வரைவு, மீண்டும் அப்படியொரு அவல நிலை நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் அக்கறை காட்டுவது தெரிகிறது.
  • இந்த வரைவு கடந்த 2017-ல் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட பணிக் குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
  • புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தைப் பேசுவதோடு, அவர்களுக்கு நல்லதொரு பணியிடச் சூழலையும் நியாயமான ஊதியத்தையும் அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

ஒருங்கிணைந்த நடவடிக்கை

  • நிதி ஆயோக் தயாரித்திருக்கும் வரைவானது, புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்புடைய சமூகப் பாதுகாப்பு, வீட்டுவசதி, சுகாதாரம், கல்வி போன்ற பல துறைகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
  • இந்தத் துறைகள் ஒவ்வொன்றும் தங்களுக்கிடையில் ஒருமித்த உணர்வோடு ஒருங்கிணைந்த செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்; அமைச்சகங்களுக்கு இடையிலான இந்த நடவடிக்கைகளைக் கவனித்துக்கொள்வதற்காக ஒன்றியத் தொழிலாளர் நல மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் தனிப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்கிறது.
  • மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்வுகளை நிர்வகிப்பதற்கான புதிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் சுழற்சி முறை மற்றும் பருவகால புலம்பெயர்வுகள் குறித்த தரவுகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
  • தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் இன்னல்களைத் தீர்த்துவைப்பதாக இல்லை என்று சுட்டிக்காட்டி அச்சட்டங்களை இன்னும் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் இந்த வரைவு வேண்டுகிறது.
  • ஆனால், தொழிலாளர் நலச் சட்டங்கள் விதிக்கும் பொறுப்புச் சுமைகளிலிருந்து விடுபடுவதற்காகத்தான் தொழிலகங்கள் புலம்பெயர் தொழிலாளர்களைப் பெருமளவில் சேர்த்துக்கொள்கின்றன என்பதே அடிப்படையான எதார்த்தம்.
  • எனவே, தொழிலாளர் நலச் சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தினாலே புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மிக எளிதாகத் தீர்த்துவிடலாம் என்று எண்ணுவதும் அதற்காகத் திட்டமிடுவதும் பிரச்சினையின் அடிப்படையையே புரிந்துகொள்ளாத தன்மையைத்தான் காட்டுகின்றன.
  • ஆதார் அட்டைகள் பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது, ஆதார் அட்டையின் அடிப்படையில் சமூக நலத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்குவது எனப் பலவாறான யோசனைகளும் இப்படிப்பட்டவைதான்.

வீட்டுப் பணியாளர்கள்

  • இந்த வரைவில் விடுபடல்களும் கவனக் குறைவுகளும் கணிசமாக இருக்கின்றன. முக்கியமாக, வீடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களைக் குறித்து இந்த வரைவு கவனம் கொள்ளவில்லை.
  • இந்தியாவில் பொதுக் கவனத்துக்கே வராத இத்தகைய வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 2.5 கோடி முதல் 9 கோடி வரையில் இருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது சர்வதேச உலகத் தொழிலாளர்கள் அமைப்பு.
  • அவ்வமைப்பின் வீட்டுப் பணியாளர்கள் உடன்படிக்கை, 2011-ல் கையெழுத்திடாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
  • வடகிழக்கு மாநிலங்களின் வனப் பகுதிகளிலிருந்தும் கிராமப்புறங்களிலிருந்தும் வந்த பெண்களும் சிறுமியர்களும் இந்தியாவின் முக்கியப் பெருநகரங்கள் அனைத்திலும் முழுநேர வீட்டுப் பணியாளர்களாக வேலைசெய்து வருகிறார்கள்.
  • உண்ண உணவும், தங்க இடமும் தவிர அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் சொற்பமாகவே இருக்கிறது. சமயங்களில், அவர்களைப் பணிக்கு அழைத்துவரும் இடைத்தரகர்கள் வாங்கும் கமிஷன் தொகையைக் காட்டிலும் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் குறைவாக இருக்கிறது.
  • வீட்டுப் பணியாளர்களாக வேலைசெய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வன்முறைகளும் பொதுக் கவனத்துக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. இத்தகைய புலம்பெயர்வுகளை ஏற்றுக் கொள்வதோ அனுமதிப்பதோ அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரானது.

இடைத்தரகர்கள் ராஜ்ஜியம்

  • புலம்பெயர்வு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது என்ற வகையில் அதன் முக்கியத்துவத்தைப் பேசும் இந்தக் கொள்கை வரைவு, எழுத்தறிவும் பொதுவுலகுடனான தொடர்புகளும் இல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாவது குறித்து இன்னும் தீவிர அக்கறை எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.
  • காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர்களைப் பெரும் எண்ணிக்கையில் மொத்தமாக அழைத்துவந்து அவர்களை மிகவும் குறைவான ஊதியத்துக்கு அதிக நேரம் வேலைவாங்கும் இடைத்தரகர்களே புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினையின் அடிநாதமாக இருக்கிறார்கள்.  
  • ஆனால், அவர்களைக் கட்டுப்படுத்துவதைப் பற்றியோ அல்லது அவர்களைச் சட்டரீதியாக அங்கீகரித்து, அவர்களின் மீது பொறுப்புகளைச் சுமத்துவதைக் குறித்தோ இந்தக் கொள்கை வரைவு உரிய கவனம் கொடுக்கவில்லை.
  • கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளுக்கு வாய்ப்பே இல்லாத சூழலில்தான் புலம்பெயர் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் இடைத்தரகர்களை நாடுகிறார்கள். மொழி தெரியாத ஊரில் அவர்களை நம்பித்தான் கால் பதிக்கிறார்கள்.
  • ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு அல்லது முன்தொகைக்குத் தங்களைக் கொத்தடிமையாக ஒப்படைக்கிறார்கள். புலம்பெயர்ந்த இடங்களிலும் அவர்களுக்கு நிதியுதவிச் சேவைகள், திறன் மேம்பாடு, அரசியல் உள்ளடக்கம், கல்வி ஆகிய வாய்ப்புகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறது தேசிய புலம்பெயர்வுக் கொள்கை வரைவு.
  • பிறந்து வாழ்ந்த இடத்திலேயே கிடைக்காத வங்கிக் கடன் வாய்ப்புகள் பிழைக்க வந்த இடத்தில் கிடைக்கும் என்பதையெல்லாம் எப்படி நம்புவது?
  • புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஒரு தேசியக் கொள்கை காலத்தின் தேவை. ஆனால், அது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பரிந்துரைப்பதுபோலவே, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்க்கவும் முயற்சிக்க வேண்டும்.
  • நியாயமற்ற ஊதியங்களுக்காகப் புலம்பெயரும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குறைந்தபட்ச வாழ்வாதாரங்களை ஒவ்வொருவருக்கும் அவர் வாழும் பிராந்தியத்திலேயே உருவாக்கித்தர வேண்டும்.
  • தொழிலாளர் நலச் சட்டங்கள் விதிக்கும் பொறுப்புச் சுமைகளிலிருந்து விடுபடுவதற்காகத்தான் தொழிலகங்கள் புலம்பெயர் தொழிலாளர்களைப் பெருமளவில் சேர்த்துக்கொள்கின்றன என்பதே அடிப்படையான எதார்த்தம்!

நன்றி: இந்து தமிழ் திசை (07 - 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்