TNPSC Thervupettagam

தேர்தலில் ஒரே ஒரு கேள்வி கேட்ட ஹமாஸ் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

November 10 , 2023 236 days 129 0
  • பிராந்தியவாரியாக நடத்தப்பட்ட இந்தத் தேர்தலை, 5 கட்டங்களாக நடத்துவது என்றுமுடிவு செய்திருந்தார்கள். ஆனால் நடந்தது 4கட்டத் தேர்தல்கள் மட்டுமே. பல பகுதிகளில் பல்வேறு காரணங்கள் சொல்லி இறுதி வரை தேர்தலை நடத்தவேயில்லை. அப்படித் தேர்தல் நடத்தப் படாத பகுதிகளில் வசித்த மக்கள், மொத்த பாலஸ்தீனர்களில் சுமார் 25 சதவீதத்தினர்.
  • இதில் கவனிக்க வேண்டிய சங்கதி என்னவென்றால், தேர்தல் நடந்த பகுதிகளில் பெரும்பாலும் ஹமாஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தார்கள். இது காஸாவுக்கு வெளியிலும் நடந்தது என்பதுதான் முக்கியம். பொதுத் தேர்தலில் போட்டியிடுவது என்ற ஹமாஸின் முடிவுக்கு அதுதான் மிக நெருக்கமான காரணமாக இருந்தது. மக்கள் நம்புகிறார்கள். மக்கள் விரும்புகிறார்கள். யாசிர் அர்ஃபாத்தின் மறைவுக்குப் பிறகு ஃபத்தாவை நம்புவதில் பயனில்லை என்று அவர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த நேரத்தில் தேர்தல் களத்தில் ஹமாஸ் இல்லாது போனால்அவர்கள் சம்பந்தமில்லாத வேறு யாரையாவது தேர்ந்தெடுத்தே தீர வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்படுவார்கள். அல்லது வேறுவழியின்றி, மீண்டும் ஃபத்தாவை ஆட்சியில் அமர்த்தி, அதே அவலங்களைத் தொடர அனுமதிக்க வேண்டி வரும். சரி, நாமே நிற்போம் என்று அதனால்தான் முடிவு செய்தார்கள்.
  • யாசிர் அர்ஃபாத்தின் மறைவுக்குப் பிறகுபாலஸ்தீன அத்தாரிடியின் தலைமைப் பொறுப்புக்கு மம்மூத் அப்பாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட அதேநேரத்தில்தான் காஸாவிலிருந்து இஸ்ரேலிய துருப்புகள் விலக்கிக் கொள்ளப்படும் என்றுஇஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் சொல்லியிருந்தார். காரணம், மம்மூத் அப்பாஸ் மிதவாதி. அர்ஃபாத்தின் வழித் தோன்றல். அவரால் பெரிய சிக்கல் இராது என்று இஸ்ரேல் நம்பியது. ஒரு சுமாரான நல்லுறவை வெளியுலகத்துக்குக் காட்டியாக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருந்ததால், பாலஸ்தீனத்தில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் இஸ்ரேலியத் துருப்புகள் விலக்கிகொள்ளப்படும் என்ற அறிவிப்பு வந்தது. அவர்கள் எதிர்பார்க்காதது ஒன்றுதான். தேர்தலில் ஹமாஸ் போட்டியிடும் என்பது. அவர்கள் என்ன, யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
  • அது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததேர்தல். உலகெங்கிலும் இருந்து 1,042 அரசியல் வல்லுநர்களைச் சிறப்புப் பார்வையாளர்களாக வரவழைத்திருந்தார்கள். அதாவது, பாலஸ்தீன தேர்தல் எப்படி நடக்கிறது என்பதை அருகிருந்து கவனித்து, உலகத்துக்குத் தெரியப்படுத்துவதற்காக. மறுகணமே மத்தியக் கிழக்கு மீடியா கருத்துக் கணிப்புகளில் இறங்கத் தொடங்கிவிட்டது. மேற்குக் கரையிலும் ஜெருசலேத்திலும் காஸாவிலும் யாருக்கு என்ன செல்வாக்கு என்று வீடு வீடாகச் சென்று விசாரிக்கஆரம்பித்தார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், தனியார் ஏஜென்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு இந்தப் பணியை மேற்கொண்டன.
  • தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளில் பெரும்பாலும் மம்மூத் அப்பாஸின் ஃபத்தாவே அனைத்துப் பிராந்தியங்களிலும் (காஸா நீங்கலாக) முன்னணியில் இருந்தது.யாசிர் அர்ஃபாத்தின் மீதுள்ள மரியாதையைபாலஸ்தீனர்கள் இந்தத் தேர்தலில் ஃபத்தாவுக்கு வாக்களித்து வெளிப்படுத்துவார்கள் என்று அத்தனை மீடியாக்களும் தலைப்புச் செய்தியாக்கின. அப்பாஸின் உருக்கமான சொற்பொழிவுகள், ஃபத்தா கட்சியினரின் இரவு பகல் பாராத தேர்தல் பணி, மேற்குக் கரைமக்களின் நீண்ட கால அர்ஃபாத் விசுவாசம் என்று எல்லாமே அதற்குச் சாதகமாகத்தான் தென்பட்டன.
  • மறுபுறம் ஹமாஸுக்கு அதுமுதல் தேர்தல் அனுபவம். என்ன செய்வது, எப்படிச்செய்வது என்று அவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். எனவே வேட்பாளர்கள் மக்களிடம் ஓட்டுக் கேட்டார்கள். அவ்வளவுதான். அதற்கு மேல் ஒன்றும்கிடையாது. இஸ்லாமிய காங்கிரஸாக இருந்தபோது காஸா பகுதியில் வீராவேசமான சொற்பொழிவுகளால் மட்டுமே பிரபலமானவர்கள் அவர்கள். யாசின் காலத்துக்குப் பிறகு பேச்சு மெல்ல மெல்லக் குறைந்து, ஒரு கட்டத்தில் அறவே நின்றுவிட்டிருந்தது. மீண்டும் மைக், மீண்டும் மேடைப் பேச்சு என்றால் என்ன செய்ய முடியும்?
  • அவர்கள் முன்வைத்த வாதம் ஒன்றுதான். 1993-ம் ஆண்டு ஓஸ்லோ உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது 2006. பன்னிரண்டு ஆண்டுகள் முழுதாக முடிந்துவிட்டன. சுதந்தர பாலஸ்தீனம் கிடைத்துவிட்டதா? உலகம் நம்மை தனி நாடாக அங்கீகரித்துவிட்டதா?

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்