- தேர்தல் என்று சொன்னால் நமக்கு எளிதில் புரியும். ஏனென்றால், சுதந்திரம் அடைந்த நாள் முதல், நல்ல விதமாகவோ கெட்ட விதமாகவோ 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் அதைச் சந்தித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தல். சட்டமன்றத் தேர்தல். நாடாளுமன்றத் தேர்தல். இவை போகக் கட்சிகளுக்குள் தேர்தல். இன்னும் பலப்பலத் தேர்தல்கள்.
- ஆனால், ‘நியமனம்’ என்பதற்கு அப்பால் எதையுமே அறியாத தேசங்களும் உண்டு. காலத்தின் தேவைக்கேற்ப ஒப்புக்குத் தேர்தல் என்று சொல்லிவிட்டு வழக்கமான நியமன ஏற்பாடுகளை மட்டும் பின்பற்றும் கலாச்சாரமும் உலகின் பல்வேறு பகுதிகளில் உண்டு. ஓர் உதாரணத்துக்கு, வட கொரியாவில் ஒரு ஜனாதிபதி தேர்தல் என்று வைத்துக் கொள்வோம். யார் வேண்டுமானாலும் அதிபர் கிம்மை எதிர்த்து நிற்கலாம். மக்கள் ஓட்டுப் போடலாம் என்று கிம்மே அறிவித்தாலும் யாராவது எதிர்ப்பார்களா? அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவார். அவ்வளவுதான் இல்லையா? ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வழக்கம். ஒவ்வொரு நடைமுறை.
- பாலஸ்தீனர்களுக்கும் தேர்தலெல்லாம் தெரியாது. முதலில், அங்கீகரிக்கப்பட்ட நாடு என்ற ஒன்று இருந்தால் அல்லவா தேர்தல் என்ற ஒன்று வரக்கூடிய சாத்தியம் இருக்கும்? அவர்கள் அறிந்ததெல்லாம் போராட்டம், புரட்சி, போர். அவ்வளவுதான். யாசிர் அர்ஃபாத் அமைதி வழியைத் தேர்ந்தெடுத்து, ஓஸ்லோ ஒப்பந்தம் கையெழுத்தானதன் தொடர்ச்சியாகத்தான் சிறிய அளவில் வரையறுக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரமாவது அவர்களுக்குக் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் தேர்தல் என்ற ஒன்று அங்கே நடைமுறைக்கு வந்தது.
- கடந்த 1996-ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் முதல் முதலில் தேர்தல் திருவிழா நடத்தப்பட்டது. இதெல்லாம் சுத்த அபத்தம் என்று சொல்லி ஹமாஸ் அதனைப் புறக்கணித்தது. மக்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஓட்டுப் போடச் சொன்னார்கள்; எனவே போட்டார்கள். அர்ஃபாத் ஆள வேண்டும் அவர்களுக்கு. அவ்வளவுதான். ஆனாலும் அவரது ஃபத்தா கட்சிக்குத் தெளிவான வெற்றியெல்லாம் அப்போது கிடைக்கவில்லை. யாசிர் அர்ஃபாத் மீது இருந்த மரியாதை அவரது கட்சிக்காரர்களின் மீது கிடையாது என்றுதான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் தேர்தல் நடந்து அவர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்.
- ஃபத்தாவுக்கு அந்தத் தேர்தலில் தெளிவான வெற்றி கிடைக்காததன் காரணத்தை அந்த ஆட்சிக் காலத்தில் அவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார்கள். விவரிக்க இயலாத அளவுக்கு ஊழல்கள், முறைகேடுகள். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆகக் கூடிய அளவுக்குக் கொள்ளை அடித்துக் கொண்டு போய்விட வேண்டும் என்பதிலேயே அரசியல்வாதிகள் கவனமாக இருந்தார்கள். மக்களுக்கு இது பிடிக்கவில்லை. நமக்காகப் போராடுபவர்கள் என்று நாம் மதிக்கிறோம். அவர்கள் நம்மைச் சுரண்டித்தான் பிழைப்பார்கள் என்றால் என்ன பொருள்? கசப்புணர்வு பெருகத் தொடங்கியது.
- இந்தச் சூழ்நிலையில் 2004-ம் ஆண்டின் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கும் என்று யாசிர் அர்ஃபாத் அறிவித்திருந்தார். மீண்டும் அதே ஃபத்தா, அதே இதர கட்சிகள் என்றால் அதே ஊழல், அதே அவலம்தானே தொடரப் போகிறது? மொத்தமாக அடிப்பது போதாமல் பிராந்தியவாரியாகவும் கொள்ளையா என்று மக்கள் வெறுப்படைந்தார்கள்.
- இது ஒரு புறம் ஓடிக்கொண்டிருந்த போதுதான் இண்டிஃபாதா வந்தது. பாலஸ்தீனர்கள் ஆயுதம் ஏந்த வேண்டாம் என்று முடிவு செய்து அமைதி காத்து, அதனால் நிறைய இழக்கவும் வேண்டி வந்தது. ஹமாஸ் உள்ளே நுழைந்து தாக்க ஆரம்பித்த பின்புதான் இஸ்ரேலின் கொலைவெறித் தாண்டவம் சற்று மட்டுப்படத் தொடங்கியது. இந்தச் சம்பவம் பாலஸ்தீன மக்களிடையே மிகப் பெரிய அளவில் ஒரு மன மாற்றத்தை விதைத்தது.
- இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம். யாசிர் அர்ஃபாத் உயிருடன் இருந்த வரை பாலஸ்தீனர்கள் நிபந்தனையில்லாமல் அவரை ஆதரித்தார்கள். அவரது கட்சியினர் எத்தனை அட்டகாசம் புரிந்தாலும் சகித்துக் கொண்டார்கள். ஆனால் அர்ஃபாத்துக்குப் பின்னால் என்ற வினா எழும்பட்சத்தில் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஹமாஸை மட்டுமே ஆதரிப்பார்கள் என்பதை அந்த இண்டிஃபாதாவும் அதில் ஹமாஸின் பங்களிப்பும் உறுதி செய்தது.
- ஹமாஸில் அப்போது ஷேக் அகமது யாசீன் உயிருடன் இல்லை. அவருக்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்ற அப்துல் அஜிஸ் ரண்டிஸியையும் (தோற்றுவித்தவர்களுள் ஒருவர்) கொன்றுவிட்டார்கள். அடுத்தடுத்த இழப்புகளால் அவர்களும் நிலைகுலைந்திருந்த சமயம் அது. ஆனால் எதையாவது செய்தாக வேண்டும். கொஞ்சம் விட்டால் மொத்த பாலஸ்தீனத்தையும் இஸ்ரேல் எடுத்து விழுங்கிவிட்டுப் போய்விடும். மிச்சம் மீதி ஏதாவது இருந்தால், ஃபத்தா அரசியல்வாதிகள் விழுங்கிவிடுவார்கள். இதற்காகவா இத்தனைப் பாடுகள்?
- இதையும் இதற்கு அப்பாலும் பல காரணங்களை யோசித்து, அந்த உள்ளாட்சித் தேர்தலில் ஹமாஸ் பங்கேற்கும் என்று அறிவித்தார்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 11 - 2023)