TNPSC Thervupettagam

தேர்தலில் கிடைக்குமா சுதந்திரமும் வளர்ச்சியும்

March 18 , 2024 124 days 183 0
  • ஒரு தேசிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான (நாடாளுமன்ற) தேர்தல், மக்கள் அனைவரையும் பொதுவான ஒரு இலக்கு அல்லது கொள்கைகளுக்கு ஆதரவாக அணிதிரள வைக்க வேண்டும். மக்கள் தங்களுடைய வாக்குகளைத் தாங்கள் விரும்பும்அல்லதுபிஆகிய கட்சிகளுக்குசில வேளைகளில் இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு - இடையில் பிரித்து அளிக்கலாம், ஆனால் நோக்கம் பொதுவானதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தனியான தேர்வுதான் இயல்பானது, நன்மை தருவது, நிரந்தரமான காயங்களை ஏற்படுத்தாத அளவுக்குப் பாதுகாப்பானது.
  • ஜவஹர்லால் நேரு அவருடைய காலத்தில் மாபெரும் ஆளுமையாக நாடு முழுவதும் அறியப்பட்டு ஆதரவையும் செல்வாக்கையும் பெற்றவராக இருந்தார்; எனவே காங்கிரஸ் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்துக்கும் சில பகுதிகளில் மட்டும்தான் எதிர்ப்பு நிலவியது. சம வலிமை மிக்க இரண்டு மாபெரும் அரசியல் இயக்கங்களுக்கு இடையிலான தேர்தல் போட்டி என்பது 1977ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக தேசிய அளவில் தோன்றியது. ‘நெருக்கடிநிலைஅமலுக்குப் பிறகு பெரிய அரசியல் கட்சிகள் சில, ஒரே குடையின் கீழ் – ‘ஜனதா கட்சிஎன்ற ஒரே பெயரில் ஜெயப்பிரகாஷ் நாராயணனால் இணைக்கப்பட்டது.
  • மக்களவை பொதுத் தேர்தலில் அப்போது ஜனதா கட்சிக்குக் கிடைத்த வெற்றி, திட்டவட்டமானது, ஆனால் மக்களைவடவர்கள்’ – ‘தென்னிந்தியர்கள்என்று பிரித்துவிட்டது. வட இந்திய மாநிலங்கள் ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும், தென்னிந்திய மாநிலங்கள் காங்கிரஸுக்கு ஆதரவாகவும் அந்தத் தேர்தலில் வாக்களித்தன. நாட்டை ஆளும் கட்சியைத் தேர்வுசெய்வதில் வடக்குக்கும் தெற்குக்கும் உள்ள இந்த வேறுபாடு 1977 முதல் தொடர்கிறது.

மகிழ்ச்சியைத் தராத பிளவு

  • அடுத்தடுத்து நடந்த பொதுத் தேர்தல்களிலும், சில விதிவிலக்குகளைத் தவிர்த்து - வட இந்தியா ஒரு மாதிரியும் தென்னிந்தியா வேறு மாதிரியும் அரசுகளைத் தேர்ந்தெடுத்தன. ‘இந்தி பேசும்’ – ‘இந்தி மொழியைப் பேசத் தெரிந்தமாநிலங்களில் போட்டி என்பது காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையில்தான். மெதுவாக, ஆனால் படிப்படியாக காங்கிரஸின் இடத்தைப் பிடித்துவிட்டது பாஜக. தென்னிந்தியாவிலோ நிலைமை வேறு. 1977ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை மாநிலக் கட்சிகள் வலுவாக எதிர்க்கத் தொடங்கின.
  • தமிழ்நாட்டில் திமுக - அஇஅதிமுக, ஆந்திரத்தில் முதலில் தெலுங்கு தேசம்இப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி, கர்நாடகத்தில் ஜனதா - பிறகு மதச்சார்பற்ற ஜனதா, கேரளத்தில் மார்க்சிஸ்டுகள் தலைமையிலான இடதுசாரி கூட்டணி. தென்னிந்தியாவில் நிரம்பிவழியும் இந்தக் களத்தில் பாஜகவால் ஊடுருவ முடியவில்லை, கர்நாடகம் விதிவிலக்கு, அங்கும் அதற்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறிக் கிடைத்துவருகிறது.
  • மாநிலக் கட்சிகளுக்குக் கிடைத்த வெற்றியால் வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்குமான அரசியல் கள இடைவெளி இப்போது மேலும் அதிகமாகிவிட்டது. தென்னிந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகள் பாஜக மீது தீவிர ஐயம் கொண்டுள்ளன. காங்கிரஸ் கட்சியைவிட மாநிலக் கட்சிகள்தான் பாஜகவைஇந்திஇந்து - இந்துத்துவ கட்சிஎன்று தொடர்ந்து சாடிவருகின்றன.
  • தத்தமது மாநில மொழி மீது தனிப்பெருமை, அனைத்து மதக் குழுக்களையும் சமமாக ஏற்கும் போக்கு, சமூக சீர்திருத்தவாதிகள் ஏற்படுத்திய பாரம்பரியத்தால் உருவான முற்போக்கு மனப்பான்மை காரணமாக தென்னிந்திய மாநில மக்கள் தனித்துவமான பாதையில் பயணிக்கின்றனர். வரி வருவாயை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்வதில் தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிராக கடைப்பிடிக்கப்படுவதாகக் கருதப்படும் வஞ்சனை, மற்ற மொழிகளைவிட இந்திதான் ஆட்சிக்குரிய மொழி என்ற ஆதிக்க உணர்வு, உணவுஉடை - பண்பாடு ஆகியவற்றில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றைத்தன்மையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்ற திணிப்பு முயற்சிகள் ஆகியவை தென்னிந்தியர்களின் ஐயங்களைத் தீவிரப்படுத்திவிட்டன.
  • ஒன்றியமாநில அரசுகளுக்கு இடையிலான உறவில் கூட்டாட்சித்தன்மையை வளர்க்கும் உணர்வுகளுக்குப் பதிலாக, ‘மையமே வலிமை மிக்கதுமையமே காக்கப்பட வேண்டியதுஎன்ற விஷத்தை பாஜக அரசு செலுத்துகிறது; அடுத்தடுத்து பல்வேறு சட்டங்களை இயற்றி மாநிலங்களின் சுயாட்சித்தன்மையைக் குறுக்கிவருகிறது. மாநிலக் கட்சிகளை அடக்குவதற்கும் ஒழிப்பதற்கும் பல்வேறு சட்டங்களை ஆயுதமாகப் பயன்படுத்திவருகிறது. இவற்றின் விளைவாகவும் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான அரசியல் இடைவெளி, வருத்தப்படும் வகையில் மேலும் பெரிதாகிக்கொண்டிருக்கிறது.

ரகசிய செயல்திட்டம் அம்பலம்

  • காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை பாஜகவின் அணுகுமுறை எப்படிப்பட்டது என்பதில் ரகசியம் ஏதுமில்லை. நாட்டில் காங்கிரஸ் கட்சியே இல்லாதஅதாவது செயல்படாமல் முடங்கிவிட்டநிலையைத்தான் அது விரும்புகிறது. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் வளர்வதையும் அது விரும்புவதில்லை, எனவே அவற்றையும் எதிர்த்தோ - உடனிருந்தோ அழிக்கத்தான் விரும்புகிறது. சில காலத்துக்கு மாநிலக் கட்சியுடன் அது கூட்டுவைத்துச் செயல்படுவதைப் போலத் தோன்றும், ஆனால் உள்ளூர அந்தக் கட்சிகளையும் அழிப்பதுதான் அதன் இறுதி இலக்கு.
  • ஜனதா கட்சி, அகாலி தளம், இந்திய தேசிய லோக தளம், பகுஜன் சமாஜ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று அதனுடன் கூட்டணி அமைத்த பல கட்சிகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாநிலக் கட்சிகளின் தனி அடையாளத்தையே அது இப்படித்தான் சிதைத்துவிட்டது. ஒரு காலத்தில் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (ஒய்எஸ்ஆர்சிபி), தெலங்கானா ராஷ்ட்ர சமிதி (டிஆர்எஸ்) ஆகிய கட்சிகளுடன் தோழமை கொண்டு செயல்பட்டது, ஆனால் அதன் உள்மனதில் இருந்த நோக்கம் மேற்கு வங்கம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களிலிருந்து அந்தக் கட்சிகளை விரட்டிவிடுவதுதான்.
  • இப்போது அதே லட்சியத்துடன்தான் மகாராஷ்டிரம், ஒடிஷா, ஆந்திர பிரதேசம், ஹரியாணாவில் மாநிலக் கட்சிகளை அரவணைக்க முற்பட்டிருக்கிறது. திமுகவும் அஇஅதிமுகவும் உரிய நேரத்தில் விழித்துக்கொண்டுவிட்டன. சிவ சேனை, தேசியவாத காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) ஆகியவை விழித்துக்கொள்ளத் தாமதம் ஆகிவிட்டது. ஒன்றிய அரசில் பாஜக மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியதும்தான் ராஷ்ட்ரீய லோக தளம், பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகியவை, தங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை உணரத் தொடங்கும்.
  • நீண்ட கால ரகசிய செயல்திட்டங்களை அமல்படுத்த தன்னுடைய கட்சிக்கு மட்டும் 370 தொகுதிகளில் வெற்றியை தேடித்தருமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது பாஜக. அதன் தீவிர இந்துத்துவப் பிரச்சாரம் அயோத்தி, காசியில் இந்து வழிபாட்டிடங்களை மீட்பதுடன் நின்றுவிடாது; மேலும் பல மசூதிகளுக்கு அடியில் இடிக்கப்பட்ட இந்து கோயில்கள் இருப்பதாக பிரச்சினைகளைக் கிளப்பிக்கொண்டே இருக்கும். மேலும் பல நகரங்களுக்கும் சாலைகளுக்கும் பெயர்கள் மாற்றப்படும். 2019இல் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், 2024 மார்ச் 11 முதல் புதிய விதிகளின்படி அமலுக்கு கொண்டுவரப்படுகிறது.
  • அனைவருக்கும் பொது சிவில் சட்டம் என்பது உத்தராகண்ட் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது. அதை அடியொற்றியே நாடாளுமன்றமும் பொது சிவில் சட்டத்தை இயற்றக்கூடும். நாடு முழுவதற்கும் ஒரே சமயத்தில் மக்களவைசட்டப்பேரவை - உள்ளாட்சி மன்றத் தேர்தல் என்னும் நடைமுறைஒரே நாடுஒரே தேர்தல்என்ற கொள்கை முடிவின் மூலம் அமலுக்கு வந்துவிடும், அதற்காக அரசியல் சட்டம் திருத்தப்படும். கூட்டாட்சித் தத்துவமும் நாடாளுமன்ற ஜனநாயக முறைகளும் மேலும் வலுவிழக்கச் செய்யப்படும்; நாட்டின் நிர்வாக அதிகாரம் அனைத்தும் ஒரேயொரு தலைவரிடம் மட்டும் இருக்கும் வகையில்அதிபர் ஆட்சி முறைக்கு நெருக்கமாக - இந்திய அரசும் சென்றுவிடும்.
  • துரதிருஷ்டவசமாக ஏராளமான மக்கள், இப்படி அதிகாரத்தை மையத்தில் குவிப்பதையும்கூட வரவேற்பார்கள்; காரணம் ஜனநாயகத்தின் தன்மை, விழுமியங்கள் என்னவென்று நம்முடைய குடும்பங்களிலோ, சமூகத்திலோ, அரசியல் கட்டமைப்பிலோ முறையாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கவில்லை. ‘வளர்ச்சிக்காக…’ என்ற போர்வையில், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகும் நடைமுறையை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டுவிடுவோம்; பெரும் பணக்காரர்கள் மேலும் கொழுத்துவிடுவார்கள்.
  • மக்கள்தொகையில் 50% எண்ணிக்கையில் உள்ள மக்கள், எஞ்சியிருக்கும் 3% அளவு சொத்துகளையும், தேசிய வருவாயில் 13% அளவையும் தங்களிடையே பகிர்ந்துகொள்வார்கள். மக்களில் பெரும்பாலானவர்கள் சமூக அளவிலும் பண்பாட்டு தளத்திலும், மிகச் சிலருக்குத் தொடர்ந்து அடிமையாக இருப்பதும், அவர்களால் ஒடுக்கப்படுவதும் தொடரும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்கும்.

வரலாற்றிலிருந்து பாடம்

  • நான் சொல்வதெல்லாம் கற்பனையில் உதித்த கொடுங்கதைகள் அல்ல; நாட்டில் சுதந்திரமும் வளர்ச்சியும் நீடிக்க வேண்டும் என்றால் ஆளுங்கட்சியை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்று உலக வரலாறு நமக்குக் கற்றுத்தருகிறது. ஐரோப்பிய நாடுகள் இதை எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்கின்றன.
  • அதிபராக ஒருவர் இரண்டு முறைக்கு மேல் இருக்கக் கூடாது என்று அமெரிக்க அரசமைப்புச் சட்டம் கட்டுப்படுத்தியிருக்கிறது. தென் அமெரிக்கக் கண்டத்திலும் ஆப்பிரிக்காவிலும் பல நாடுகள் இந்தப் பாடத்தை சரியாகப் படிக்காததால் தொடர்ந்து சர்வாதிகார ஆட்சிகளின் கீழ் தத்தளிக்கின்றன. இந்தியாவில் நாம் இந்தப் பாடத்தைப் படித்தோம் - ஆனால் இப்போது மறந்துவிட்டதைப் போலத் தெரிகிறது.
  • சீனா, ரஷ்யா, துருக்கி, ஈரான் உதாரணங்கள் நம் முன்னால் இருக்கின்றன. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று உலகமும் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நன்றி: அருஞ்சொல் (18 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்