TNPSC Thervupettagam

தேர்தலும் செயற்கை நுண்ணறிவும்

April 4 , 2024 289 days 235 0
  • தேர்தல் மூலம் அரசியல் புரட்சியை ஏற்படுத்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் காலம் இது. அந்த வகையில் அண்மையில் அறிமுகமான செயற்கை நுண்ணறிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலின்போது, தனது கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றதாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறிய விடியோ உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. காரணம் இம்ரான் கானின் கட்சி அவரின் குரலை பிரதிபலிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியது. இந்த முயற்சி தேர்தல் பரப்புரையின் அடுத்த கட்ட நகர்வா அல்லது ஆபத்தான போக்கா என்பது குறித்து சிந்தித்தாக வேண்டும்.
  • இந்த ஆண்டு இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன், இந்தோனேஷியா, ரஷியா, தைவான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. முந்தைய தேர்தல்களைப் போலவே வரவிருக்கும் தேர்தலிலும் வாக்காளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் போலிச் செய்திகளின் பரவலாகும்.
  • ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மென், கூகுளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி எரிக்ஷ்மிட் போன்ற தொழில்துறையினரும் கூட தொழில்நுட்பத்தின் தாக்கங்கள் குறித்து எச்சரிக்கை தெரிவித்திருக்கின்றார்கள். தொழில்நுட்பப் பயன்பாடு, தேர்தல்களில் குழப்பத்தையும், சமூக ஊடகங்களில் தவறான கருத்துகளையும் பரப்பிவிடுகிற ஆபத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. எச்சரிக்கையாக இல்லாவிடில் வேகமாக மாறி வரும் தொழில்நுட்பமான ஏஐ தவறான தகவல்களை மக்களிடையே பரப்பிவிடக் கூடிய ஒன்றாக மாறிவிடக் கூடும்.
  • எவ்வாறெனில், உள்ளூர் சூழல்களுக்குள் தேர்தல் நடக்கும்போது, வாக்காளர்களின் முடிவுகளைப் பாதிக்கும் தகவல்கள் பேஸ்புக், கூகுள், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்ற டிஜிட்டல் தளங்களில் வெளிவருகிறது. இது குறித்து 16 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டதில் 87 சதவீதம் பேர் சமூக ஊடகங்களில் வெளியாகும் தவறான தகவல்கள் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
  • தேர்தல் ஆலோசனை நிறுவனமான ஆங்கர்சேன்ஜ்-இன் நிறுவனர் கூறியது போல் சமூக ஊடகங்கள் பல ஆண்டுகளாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவந்தாலும், அவற்றை அரசுகள் கட்டுப்படுத்துகின்றன; ஒழுங்குபடுத்துகின்றன. இப்போதுள்ள நிலையில், ஏஐ தொழில்நுட்பமும் சேர்ந்துள்ளதால், சவால்கள் அதிகமாக இருக்கின்றன. பல்வேறு மொழிகளில் போலியான உரை, படங்கள், விடியோ, ஆடியோ இவற்றை ஒரு பெரிய டிஜிட்டல் தளத்தில் பரப்புவதற்குத் தேவையான கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்த முடியும் என்று கூறுகிறார்கள்.
  • ஒரு சிறிய தரவு தொகுப்பைப் பயன்படுத்தி பிரசாரத்தை மேற்கொள்வதோடு, உலகெங்கிலும் உள்ள அரசுகள் மற்றும் நிறுவனங்களுக்கு, கணிசமான சவால்களை முன்வைத்து டீப் பேக்குகளை உருவாக்கி குரல் குளோன் செய்யப்பட்ட ஆடியோவை உருவாக்குவது ஏஐ தொழில்நுட்பத்தில் சாத்தியமே.
  • புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கை, ஏஐ-ஆல் உருவாகக்கூடிய நான்கு முக்கிய அச்சுறுத்தல்களைப் பட்டியலிட்டுள்ளது.
  • தவறான தகவல்களின் அளவு அதிகரிப்பு, தவறான தகவல்களின் தரம் அதிகரித்தல், தவறான தகவல்களின் தனிப்பயனாக்கம், போலியான ஆனால் நம்பத்தகுந்த வகையிலான தகவல்களின் பெருக்கம் இவை பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி விடக்கூடும். மொழித் தேர்ச்சியின் மூலம் ஏஐ , செய்திகளை தனிப்பயனாக்கவும் உலக நிகழ்வுகளை பாதிக்க அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி மக்களுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்கவும் முடியும்.
  • இவ்வாறு அறிவிக்கப்பட்ட கருத்துகளை மாற்றுவதற்கு நாம் நேரத்தை செலவிடுவது முற்றிலும் அர்த்தமற்றது. அதே நேரத்தில் ஏஐ செய்திகளை மிகவும் துல்லியமாக மேம்படுத்த முடியும். அமெரிக்காவில் உள்ள பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், 60 சதவீத இளைஞர்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தீமை ஏற்படுத்தக்கூடிய அல்லது சதிச்செயல் தொடர்புடைய சம்பவங்களில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.
  • ஒட்டுமொத்தமாக அவநம்பிக்கை சூழலையே இவை உருவாக்குகின்றன. இதன் மூலமாக ஒரு சமூகம் தவறான புரிதலோடு செயல்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பிரசார உள்ளடக்கத்தை உருவாக்க உதவுவதன் மூலமும் மைக்ரோ டிரேடிங் செய்திகளை உருவாக்குவதின் மூலமும் நேர்மையான முறையில் நடைபெறும் தேர்தல்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும். இந்த ஏஐ பிரசாரங்களை மிகவும் அழுத்தமான உரைகளாக, செய்தி வெளியீடுகளாக, சமூக ஊடகப் பதிவுகளாக மற்றும் பிற வகைகளிலும் உருவாக்க முடியும்.
  • உதாரணமாக, ஒரு தனி நபர் சட்டமசோதா அல்லது நீதிமன்ற தீர்ப்பின் சுருக்கமாக மொழி மாதிரியைப் பயன்படுத்தலாம். 2023-ஆம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் படிக்கட்டுகளில் தவறி விழும் படத்தை பெல்லிங்கேட் என்ற திறந்த மூல புலனாய்வு மூலமாக உருவாக்கினார்கள். இது ஐந்து மில்லியன் முறை மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. இதைப் போட்டியாளர்கள் வெளியிட்டு அதன் மூலமாக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள். சீனாவும், ரஷியாவும் வெளிநாட்டுத் தேர்தல்களில் குறிப்பாக தைவானில் செல்வாக்கு செலுத்த இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையே பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
  • இந்திய வாக்காளர்களில் கணிசமான பகுதியினர் சமூக ஊடகங்கள் அல்லது செய்தியிடல் பயன்பாடு மூலம் தங்கள் தகவல்களைப் பெறுகின்றனர். ஏஐ என்பது சக்திவாய்ந்த மற்றும் மலிவான கருவியாகும். ஒரு கட்சி 200 அல்லது 300 பேர் கொண்ட குழுவை உள்ளடக்கிய வாட்ஸ்ஆப் நிர்வாகியை அமர்த்திக் கொள்கிறது. அக்கட்சி ஏஐ உருவாக்கிய செய்திகளை கிராமப்புறங்களில் உள்ள மைக்ரோ உள்ளடக்கத்தில் பகிர்கிறது. இவற்றில் பெரும்பலான செய்திகள் இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைத்தும் போட்டி வேட்பாளர்களுக்கு எதிரான பிரசாரமாகவும் அமைகின்றன.
  • வேட்பாளர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் வெளியிடப்படுகின்றன. வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடகங்கள் இன்ஸ்டாகிராம் போன்ற உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தினாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விடியோ வெளியிடப்பட்டு வருகிறது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டாலும் பெரும்பாலான செய்திகள் ஏற்கெனவே பரவியிருக்கும். அதற்குப் பிறகு அதனைக் கட்டுப்படுத்தி என்ன பயன்?
  • உத்தர பிரதேசத்தில் ஒரு நிகழ்வின்போது பிரதமர் நரேந்திர மோடியின் ஹிந்தி உரையை தமிழுக்கு மொழி பெயர்க்க ஏஐ கருவி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆக, பல்வேறு தொழில்நுட்பத்தைப் போலவே ஏஐ பயன்படுத்தப்படலாம். ஆனால், அது தவறாகப் பயன்படுத்தப்படுமா என்கிற கேள்விக்கு சரியான விடை இதுவரை கிடைக்கவில்லை.
  • மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் செயற்கை நுண்ணறிவின் காலம் குறித்து தனது கருத்துகளைப் பதிவிடுகையில், "எனது வாழ்நாளில் தொழில்நுட்பம் சார்ந்து ஏராளமான டெமோக்களைப் பார்த்துள்ளேன். அதில் இரண்டு எனக்குள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. அந்த இரண்டும் தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவை.
  • வின்டோஸ் உள்பட அனைத்து நவீன ஆபரேட்டிங் சிஸ்டங்களுக்கும் முன்னோடியாகத் திகழும் கிராபிக்கல்யூசர் இன்டர்பேஸ் அதில் ஒன்று. அதன் அறிமுகத்தை 1980-களில் நான் பெற்றேன். சார்லஸ்சியோனி என்னும் புரோகிராமர் அப்போது அதன் டெமோவை எனக்கு நிகழ்த்திக் காட்டினார். அதன் மூலம் கணினியைக் கொண்டு என்னென்ன செய்ய முடியும் என்பதை அறிந்து ஆச்சரியமடைந்தேன். அதுவே எங்கள் நிறுவனத்தின் அடுத்த 15 ஆண்டுகளுக்கான திட்டத்தை வகுக்க காரணமாக அமைந்தது.
  • எந்தவொரு தொழில்நுட்பமும் பொதுவெளியில் அறிமுகமாகும் போது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். தொடக்க நாட்களில் அது மக்களை அச்சுறுத்தவே செய்யும். அதுபோன்றுதான் ஏஐ தொழில்நுட்பமும். பணிப்பாதுகாப்பு மற்றும் சட்ட நடைமுறை விஷயங்களில் மக்களிடையே இது அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும். சில நேரங்களில் தவறான தகவல்களைக் கூட ஏஐ-யில் பதிவுகளாகத் தரலாம்.
  • ஏஐ மற்றும் ஏஜிஐ வடிவமைப்பு என்பது கணினி சார்ந்த தொழில்நுட்பத் துறைக்கு நெடுநாள் கனவு எனச் சொல்லலாம். அது எப்படியென்றால், மனிதர்களை விட இயந்திரங்கள் எப்போதும் ஸ்மார்ட்டாக இருக்கும் என்ற கூறப்படுகிறது. மெஷின் லேர்னிங் மற்றும் திறன் வாய்ந்த கணினியின் மூலமாக இது சாத்தியமாகி உள்ளது. அதற்கான வேலையும் வேகமாக நடந்து வருகிறது.
  • எப்படியும் வரும் நாட்களில் நமது கணினிப் பயன்பாடு மாற்றம் காணும். அதற்கான வேலையை ஏஐ செய்யும். இப்போது கணினியின் சவால்களை மேற்கொள்ள சில கட்டளைகள் உள்ளிட வேண்டி உள்ளது. டெக்ஸ்ட் சார்ந்த டிராப்ட் பணிக்கு மைக்ரோசாப்ட் வேர்ட் அல்லது கூகுள் டாக்ஸ் போன்றவற்றைப் பயனர்கள் பயன்படுத்தப்படலாம். ஆனால், இயந்திரத்தால் தானாகவே மின்னஞ்சலை அனுப்பவோ, செல்ஃபியைப் பகிரவோ, ஒரு டேட்டாவை ஆராயவோ, சினிமா டிக்கெட் பதிவு செய்யவோ, மீட்டிங் ஷெட்டியூல்ட் செய்யவோ முடியாது.
  • இந்தப் பணிகளைச் செய்ய மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது. இன்னும் சில நாட்களில் கணினி உலகம் இரண்டாக அடையாளம் காணப்படும். செயற்கைத் தொழில்நுட்பத்துக்கு முந்தைய காலம், செயற்கைத் தொழில்நுட்பத்துக்குப் பிந்தைய காலம் என்று அறியப்படலாம். எந்தத் தொழில்நுட்பமும் அரசியல் லாபத்துக்காகத் தவறாகப் பயன்படுத்தாத வரை ஜனநாயகம் காக்கப்படும்.

நன்றி: தினமணி (04 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்