- இந்தியத் தேர்தல் ஆணையம் எப்படி கட்டமைக்கப்படுகிறது, தேர்தல் ஆணையர்கள் எப்படி நியமிக்கப்படுகின்றனர் என்கிற வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு, இவ்வாண்டு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் விசாரித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. புத்தாண்டின் தொடக்கத்தில் தீர்ப்பு வெளியாகலாம்.
- இந்த வழக்கில் பிரச்சினை தெள்ளத் தெளிவானது, ஆனால் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தின் மீது பாரதூர விளைவுகளை ஏற்படுத்தவல்லதாக தீர்ப்பு அமையக்கூடும்: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களை நாட்டின் நிர்வாக அங்கம் மட்டும் தேர்ந்தெடுக்கும் இப்போதைய முறை, அரசமைப்புச் சட்டப்படி ஏற்கத்தக்கதா? இதுதான் கேள்வி.
- அப்படி இல்லையென்றால் எந்த வகையில் ஆணையர்கள் நியமிக்கப்பட்டால் அது தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சியைப் பாதுகாப்பதில் போதுமானதாக இருக்கும், தேர்தல்கள் நடுநிலையாகவும் நேர்மையாகவும் நடப்பதை உறுதிசெய்யும்?
- நவீன ஜனநாயக கோட்பாட்டின்படி, அரசுக்கு மூன்று முதன்மையான உறுப்புகள் உள்ளன. அவை சட்டமியற்றும் (நாடாளுமன்ற – சட்டமன்ற) அமைப்பு, அரசு நிர்வாகம், நீதித் துறை. அரசமைப்புச் சட்டத்தின் கடமை என்னவென்றால் இந்த மூன்று உறுப்புகளுக்கும் உரிய அதிகாரங்களை வழங்குவது, அவை ஒன்றையொன்று ஆதிக்கம் செலுத்திவிடாமல் கண்காணிப்பது – சமநிலைப்படுத்துவது.
- தொடக்கக் காலம் முதலே, நிர்வாகத்துடன் சம்பந்தப்பட்ட துறைகளும், அரசு ஆணைகளை அமல்படுத்தும் பிரிவுகளும் அரசு நிர்வாகப் பிரிவின் கீழ் வருபவையாகவே கருதப்பட்டுவந்துள்ளன. தேர்தல் நடத்துவது தொடர்பான அனைத்து நடைமுறைகளுமே நிர்வாகத் துறையினால் மேற்கொள்ளப்படுவதால் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளும் அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டவையாகவே இருக்கின்றன.
புரிதலில் ஏற்பட்ட தேய்வுகள்
- இப்போதைய காலகட்டத்தில் அந்தப் பழைய கண்ணோட்டம் பெரிய அளவு ஆதரவைப் பெறவில்லை. ஆரோக்கியமான – அரசமைப்புச் சட்டப்படியான ஜனநாயகம் என்றால் அதன் நான்காவது அங்கங்களான சில தனித்துவ அமைப்புகள், நேர்மையாகவும் நாணயமாகவும் செயல்பட தன்னாட்சி அவசியம் என்றே கருதப்படுகிறது. தேர்தல் ஆணையம், தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகம், இந்திய ரிசர்வ் வங்கி, பட்டியல் இனத்தவருக்கான ஆணையம், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் போன்றவை நான்காவது அங்கமாக கருதப்படுகிறது.
- இத்தகைய அமைப்புகள் சுயேச்சையாக செயல்படாவிட்டால் அரசமைப்புச் சட்டம் உறுதியளிக்கும் அடிப்படை உரிமைகளை அனைவரும் பெற முடியாமலும் அந்த உரிமைகளின் பலன்களைப் பெற முடியாமலும் போய்விடும் என்பதே நவீன ஜனநாயகர்களின் சிந்தனையாக வலுப்பெற்றுவருகிறது.
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட தகவல் ஆணையத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்; பெரும்பாலான நவீன ஜனநாயக நாடுகளில் இது மிகவும் முக்கியமான உரிமையாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்பு நடுநிலையாகச் செயல்படுவதற்கேற்ற அடிப்படைக் கட்டமைப்பு இல்லையென்றால், இது வெறும் காகித உறுதிமொழியாகவே இருந்துவரும். இந்த அமைப்புக்கு அரசு போதிய நிதியை அளிக்க வேண்டும், பணிப் பொறுப்புக்கு ஏற்ற எண்ணிக்கையில் ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும், தகவல் அறியும் உரிமையை அரசுத் துறைகள் எப்படி அமல்படுத்துகின்றன என்பதைக் கண்காணிக்கும் உரிமை இதற்கு வழங்கப்பட வேண்டும், மக்கள் கேட்கும் தகவல்களைத் தர விரும்பாமல் இழுத்தடிக்கும் அரசுத் துறைகளையும் நிறுவனங்களையும் கட்டாயப்படுத்தி தகவல்களை வாங்கும் நிலையில் இருக்க வேண்டும், கேட்கும் தகவலின் தன்மை தொடர்பாக கேட்பவருக்கும் – கொடுக்க கடமைப்பட்டவருக்கும் இடையே பூசல்கள் ஏற்பட்டால், அதைத் தீர்த்துவைக்கும் நிலையில் ஆணையம் இருக்க வேண்டும் என்று பல அம்சங்கள் இருந்தால்தான் தகவல் ஆணையம் சுயேச்சையாக – சிறப்பாகச் செயல்பட முடியும்.
- இப்படிச் செய்வதற்கு நிர்வாகத் துறையின் கட்டமைப்பும் வேண்டும், நீதித் துறையின் செயல்திறனும் வேண்டும். எனவே, இந்த ஆணையம் நீதித் துறை அமைப்பைப் போல மட்டும் செயல்பட்டுவிட முடியாது, அன்றாடம் அலுவல்களை மேற்கொள்ளும் பிற ஆணையங்களைப் போலவும் செயல்பட வேண்டும்.
- இந்தக் காரணங்களால் நான்காவது உறுப்பு என்று கருதப்படும் சில அமைப்புகள் அரசியல் தலைமையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுயேச்சையாகச் செயல்பட்டாக வேண்டும். காரணம், நிர்வாகத் துறைக்கு எதிராக – மக்களுடைய அரசமைப்புச் சட்ட உரிமைகளை நிலைநாட்டும் கடமை இந்த அமைப்புகளுக்கு இருக்கிறது.
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே எடுத்துக்கொள்வோம்; நிர்வாகம் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்பதற்காக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, சில தகவல்களைத் தருமாறு மக்கள் விண்ணப்பம் செய்வார்கள். ஆனால், இத்தகைய கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் தவிர்ப்பது அல்லது நீண்ட காலம் தாமதிக்க வைப்பது போன்றவற்றையே அரசு நிர்வாகம் எதிர் நடவடிக்கையாக மேற்கொண்டுவருகிறது.
- இந்த நிலையில் ஆணையம் வலுவாகச் செயல்பட வேண்டும் என்றால் ஆணையரும் அரசு நிர்வாகத்துக்கு எந்த வகையிலும் கட்டுப்படாத, சுயாதிகாரம் மிக்கவராக இருக்க வேண்டும். தகவல் அறியும் சட்டப்படி கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய, முழுமையான பதிலைப் பெறுபவராகவும் இருக்க வேண்டும். இதை பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை. சமீப காலங்களில் பார்த்த அனுபவத்திலிருந்தே சொல்கிறோம்.
- ஒன்றியத் தகவல் ஆணையம் மீது ஒன்றிய அரசு விரிவான கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறது. ஆணையர் உள்பட அனைவருமே ஒன்றிய அரசால்தான் நியமிக்கப்படுகின்றனர். எனவே, இது பல் இல்லாத சிங்கமாக, பலனற்ற அமைப்பாக மாறிவிட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் நம்மை நம்முடைய செயல்களுக்குப் பொறுப்பாளியாக்குகிறதே என்ற விரக்தியில், தகவல் ஆணையமும் நன்றாகச் செயல்பட முடியாமல் முடக்கப்படுகிறது.
வெளிநாட்டு உதாரணம்
- உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களும் இந்த நிலையை உணர்ந்து அதற்கேற்ப மாறுதல்களைக் கொண்டுள்ளன. தென்னாப்பிரிக்கா, கென்யா நாடுகளின் அரசமைப்புச் சட்டம் இந்த மாறுதல்களுக்கு நல்ல உதாரணம். நாலாவது உறுப்புகளுக்கு சுயாதிகாரம் வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம் போன்றவை சுயேச்சை அமைப்புகளாகத் திகழ்கின்றன. இந்த அமைப்புகளுக்கான தலைமை நிர்வாகிகளை அரசின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, ஆர்வலர்கள் மூலம் அரசு தேர்வுசெய்து நியமிக்கிறது.
- இந்திய அரசமைப்புச் சட்டமும் இப்படி நாலாவது உறுப்பு அமைப்புகளுக்கு இடம் தந்துள்ளது. தேர்தல் ஆணையம், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், ஒன்றிய அரசின் பொதுத் தேர்வாணையம், பட்டியல் இனத்தவருக்கான தேசிய ஆணையம் உள்ளிட்டவற்றுக்கு உயர் நிர்வாகிகள் நியமனங்கள் முக்கியமானவை. இந்த அமைப்புகளின் சுயேச்சைத் தன்மையைப் பராமரிக்க அரசமைப்புச் சட்டம் இடம் தந்தாலும், அதிகாரிகள் உள்பட அனைவரையும் நியமிக்கும் அதிகாரம் அரசு நிர்வாகத் துறையிடமே தொடர்கிறது.
- குடியரசுத் தலைவர் பெயரில் நியமனங்கள் நடந்தாலும் ஒன்றிய அமைச்சரவையின் ஆலோசனைகளுக்குக் கட்டுப்பட்டே குடியரசுத் தலைவர் இந்த நியமனங்களை மேற்கொள்கிறார். சுருக்கமாகச் சொல்வதென்றால் நான்காவது உறுப்பு அமைப்புகளின் தலைமை நிர்வாகிகளையும் அரசின் நிர்வாக அமைப்புதான் நியமிக்கிறது.
- நிச்சயமாக இது பெரிய பிரச்சினைதான். சுயேச்சையாக செயல்பட வேண்டிய அமைப்பின் தலைவரைத் தேர்வுசெய்து நியமிப்பதும், பிறகு அவர் கையை மீறிவிடாமல் கண்காணிப்பதும் அரசு நிர்வாகப் பிரிவின் உள்ளுணர்வால் உந்தப்பட்ட செயலாகவே நீடிக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்புகளை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதையே அரசால் தீர்மானிக்க முடிகிறது என்பது பல தருணங்களில் அனுபவப்பூர்வமாகவே அனைவராலும் உணரப்பட்டிருக்கிறது.
- ஒற்றை மனிதர், அலுவலகம் அல்லது அமைப்பு வசமே நியமன அதிகாரம் இருக்குமென்றால் இத்தகைய நான்காவது உறுப்பு அமைப்புகளால் உண்மையாகவும் நடுநிலையாகவும் செயல்படவே முடியாது என்று தென்னாப்பிரிக்காவின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் சரியாக சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணையில் உள்ள வழக்குக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்புதான் அடிப்படை.
- இந்தப் பிரச்சினையை இந்திய அரசமைப்புச் சட்ட வரலாறும் சுட்டிக்காட்டுகிறது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் மட்டுமே அடங்கிய கொலீஜியமே உச்ச நீதிமன்ற – உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யும் முறை பற்றியும் சமீபகாலத்தில் அதிகம் பேசப்படுகிறது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று நிர்வாகத் துறையும் சட்டமியற்றும் துறைகளும் சுட்டிக்காட்டுகின்றன.
- ஆனால், குடியரசுத் தலைவர் மூலம் நியமிக்கும் முறை என்பது தனிநபரின் முடிவுக்கேற்ப இருக்கிறது என்றும் இது நீதித் துறையை கட்டுக்குள் வைப்பதற்கான முயற்சி என்றும் நீதித் துறை கருதுகிறது. நீதித் துறை சுயாதீனமாகச் செயல்பட நிர்வாகத்துறையின் கட்டுப்பாடு கூடவே கூடாது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
- வினீத் நாராயண் வழக்கில், சட்டப்படியான ஆட்சியை உறுதி செய்ய வேண்டுமென்றால் சிபிஐ (மத்தியப் புலனாய்வுக் கழகம்) போன்ற அமைப்பின் தலைவராக யாரை நியமிப்பது என்பதை பிரதமர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேரைக் கொண்ட குழுதான் தீர்மானிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. சுயேச்சையாகச் செயல்பட வேண்டிய அமைப்புக்கு நிர்வாகத் துறையின் தலைமை நியமனங்கள் செய்வது என்கிற தீங்குகள் இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றுக்குப் புதிதும் அல்ல. அதேபோல தீமைகளைக் குறைப்பதற்கான மாற்று நடவடிக்கைகளும் புதியவை அல்ல.
நியமன நடைமுறை
- அப்படியென்றால் தலைமைத் தேர்தல் ஆணைய நியமனம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும்? ஜனநாயகத்தைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய கடமையுள்ள தேர்தல் ஆணையத்தின் நிர்வாகிகளை அரசியல் தலைமை மட்டுமே நியமிப்பதை அரசமைப்புச் சட்டப்படியான ஜனநாயகம் எங்குமே அனுமதிப்பதில்லை. ஆளும் அரசுத்தரப்பு, எதிர்க்கட்சிகள், சுயேச்சையான நிபுணர்கள், நீதித்துறை நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட குழுதான் நியமிக்க அனுமதிக்கப்படுகிறது.
- இதன் மூலம் எந்த ஒரு அமைப்பும் ஏகபோக நியமன உரிமை அல்லது நியமனத்தை நிராகரிக்கும் உரிமையைப் பெற முடிவதில்லை. ஆனால், இதை நீதித் துறை மட்டுமே தன்னுடைய தீர்ப்பாலோ உத்தரவாலோ மாற்றிவிட முடியாது. இதை அமல்படுத்துவதற்கு அரசியல் கருத்தொற்றுமை முதலில் அவசியம். அடுத்து பொதுவெளியில் இதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டும். அதன் பிறகே மிகவும் கவனமாக இதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்.
- உச்ச நீதிமன்றத்தின் முன்புள்ள கடமை என்னவென்பது இப்போது தெளிவாகிவிட்டது. தேர்தல் ஆணையர்களை அரசு நிர்வாகத் தலைமையே நியமிக்கும் இப்போதைய முறை திருப்தியளிப்பதாக இல்லை; பல ஆண்டுகளாகவே இது பிரச்சினைக்குரியதாகவே பேசப்படுகிறது; (அரசமைப்பு) சட்டப்படியான ஆட்சி என்ற கருத்தையும் இது சேதப்படுத்திவருகிறது. அதேசமயம் உச்ச நீதிமன்றம் புண்ணுக்குப் புனுகு பூசுவது போன்ற செயலையோ, வெட்டுக்காயத்துக்கு பஞ்சுத் துணியை மட்டும் சுற்றுவது போன்ற வேலையையோ செய்துவிடக் கூடாது.
- அரசின் நிர்வாகத் துறை மட்டுமே தேர்தல் ஆணைய நியமனங்களைச் செய்வது செல்லாது என்று மட்டும் அது கூறிவிட வேண்டும். அடுத்து என்ன செய்யலாம் என்று இடைக்கால வழிகாட்டு நெறிகளை வேண்டுமானால் பட்டியலிடலாம். நிரந்தரமான, கட்டமைப்பு மிக்க ஏற்பாட்டை சட்டரீதியாகச் செய்யும் வேலையை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும். இப்படி சட்டம் இயற்றும் வேலையை எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை நீதிமன்றம் முடிவுசெய்யலாம். அதேசமயம் தேர்தல் ஆணையத்தின் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு உரியவர்களை நியமிப்பது முதல் அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் காலத்தைத் தீர்மானிப்பது வரை அனைத்துமே நிர்வாகத் துறையின் தலையீட்டுக்கும் அப்பால் நடைபெற வேண்டும்.
நன்றி: அருஞ்சொல் (23 – 12 – 2022)