TNPSC Thervupettagam

தேர்தல் நடைமுறையில் தேவை மாற்றம்

April 24 , 2024 263 days 237 0
  • இந்தியாவில் தற்போதுள்ள தேர்தல் முறையில், ஒரு தொகுதியில் யார் அதிகமான வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவர். இந்த முறையைப் பெரும்பாலான ஜனநாயக நாடுகள் ஏற்றுக்கொள்வதில்லை. இந்திய நடைமுறையை ஒத்த தேர்தல் முறையைப் பின்பற்றிக்கொண்டிருந்த நாடுகள் பலவும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைக்கு மாறிவிட்டன.
  • அமெரிக்கா தொடங்கி அண்டை நாடான இலங்கை வரை விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைதான். இந்த முறை பின்பற்றப்படுமானால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், மத, மொழி, சிறுபான்மைச் சமூகங்களுக்கும் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் அவர்களுடைய மக்கள்தொகை விகிதத்துக்கு ஏற்பப் பிரதிநிதிகள் கிடைப்பார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும் அறிஞர்களும் இந்த முறைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்றனர்.
  • விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை இருந்திருந்தால், 5% வாக்கு வங்கி உள்ள கட்சி தமிழகச் சட்டமன்றத்தில் கிட்டத்தட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற முடியும். ஆனால், தற்போதுள்ள தேர்தல் முறையில், ஒவ்வொரு தேர்தலிலும் இத்தகைய கட்சிகளின் வாக்கு வங்கி சரிகிறது. சிறிய கட்சிகள் தனித்துப் போட்டியிடும்போது, வாக்குகளைச் சிதறடிக்கிறார்கள், பெரிய கட்சியின் ‘பி டீம்’ என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றன; இதில் உண்மையும் உண்டு.
  • தேர்தலில் தோல்வியடையும் கட்சிகள், ‘தேர்தல் நடைமுறையில் மாற்றம் வேண்டும்; விகிதாச்சாரத் தேர்வு முறைதான் உண்மையான ஜனநாயகத்தை மீட்டெடுக்கும்’ என்று பேசுவது வாடிக்கை. ஆனால், ஆட்சிக்கு வரும் கட்சிகள், இதைப் பரிசீலிப்பதே இல்லை. விகிதாச்சாரத் தேர்தல் முறை தொடர்பான விவாதங்களில் இம்மியளவுகூட முன்னேற்றம் இல்லை.
  • தற்போதைய தேர்தல் முறையில் மாற்றம் வராத வரையில், சிறு கட்சிகள் தங்கள் கொள்கை-கோட்பாட்டுடன் செயல்படுவது இயலாத ஒன்று. தேர்தல்நடைமுறையில் மாற்றம் வந்தாக வேண்டியது காலத்தின்கட்டாயம். அறிவுத்தளத்தில் மட்டுமல்லாமல், பொதுத்தளத்திலும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை தொடர்பாக விவாதம் எழும்போது மட்டுமே இந்தக் குரலுக்கான வெற்றி கிடைக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்