TNPSC Thervupettagam

தேர்தல் முடிவுகளைத் தாமதப்படுத்துவது சரியா?

April 12 , 2021 1205 days 503 0
  • ஏறக்குறைய ஒரு மாத காலக் காத்திருப்பு. போட்டியிட்ட வேட்பாளர்களும் அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகளும், அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களும் ஒருசேரப் பரிதவிப்போடு நிற்கிறார்கள்.
  • தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்புகளுக்கும் ஊகங்களுக்கும் கற்பனைகளுக்கும் இன்னமும்கூட முடிவில்லை. அரசியல் களம் மட்டுமல்ல, அரசின் நிர்வாகப் பணிகளும்கூட தேக்கத்தை எதிர்கொள்கின்றன.
  • வாக்குகள் எண்ணுவதை எளிதாக்கவும், செல்லாத வாக்குகளைத் தவிர்க்கவும் வாக்கு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகும் வாக்கு எண்ணிக்கையைத் தள்ளிவைப்பதற்கான காரணங்கள் விளங்கவில்லை.
  • இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுகிறபோது, அவற்றின் முடிவுகள் அனைத்தும் ஒரே நாளில் அறிவிக்கப்படுவதே சரி என்று தேர்தல் ஆணையம் கருதியிருக்கக் கூடும்.
  • தென்னிந்திய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே வெளிவந்தால் அது வங்கம், அஸாம் மாநிலங்களின் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கக் கூடும் என்று நினைத்திருக்கலாம். ஆனால், வங்கத்தில் எட்டுக் கட்டங்களாகவும் அஸாமில் மூன்று கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது.
  • தேர்தல் நாளில் வன்முறைகள் எழுவதற்கான வாய்ப்புள்ளது என்ற அச்சத்தின் காரணமாகவே இத்தகைய பல கட்டத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
  • தமிழகத்திலும் கேரளத்திலும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் அமைதியான முறையிலேயே தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன.
  • இந்நிலையில், பல கட்டத் தேர்தல்கள் நடத்தப்படுகிற மாநிலங்களின் கடைசிக் கட்டத் தேர்தலையொட்டியே ஒரு கட்டத் தேர்தல்களையும் திட்டமிட்டிருக்கலாமே! வங்கத்தில் வன்முறைக்கு வாய்ப்பிருக்கிறது என்பதற்காக தமிழகமும் கேரளமும் இப்படிப்பட்ட பாதிப்பை ஏன் எதிர்கொள்ள வேண்டும்?
  • தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட நாளிலேயே நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிடுகின்றன. தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் ஆளுங்கட்சி எந்தக் கொள்கை முடிவையும் எடுக்க முடியாது.
  • தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவரும் வரைக்கும் இந்த நிலை தொடரவே செய்யும்.
  • தேர்தல் அறிவிப்புக்கும் தேர்தல் நாளுக்கும் இடையிலான காலகட்டத்தில், தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தை முழுமையான அளவில் பயன்படுத்துவதற்கு இத்தகைய நியாயமான கட்டுப்பாடுகள் அவசியமாக இருக்கின்றன.
  • ஆனால், மாறிவரும் காலச் சூழல்களுக்கு ஏற்ப விதிகளும் திட்டமிடல்களும் தேர்தல் அட்டவணையும் மாற வேண்டியது அவசியம் இல்லையா?
  • தேர்தலில் அறிவிப்புக்கும் வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையிலான இடைவெளியானது எவ்வளவு குறைக்கப்பட வேண்டுமோ அவ்வளவு குறைக்கப்பட வேண்டும்.
  • ஏனென்றால், இது ஒருபுறம் அரசு ஊழியர்களுக்குத் தொடங்கி அரசியலர்கள் வரை தேவையற்ற அலைக்கழிப்பு; மறுபுறம் அரசு நிர்வாகத்துக்குத் தேவையற்ற ஸ்தம்பிப்பு.
  • இதில் பெரிதும் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள். இத்தகு நடைமுறை ஜனநாயகத்துக்குப் பெருமை சேர்ப்பதாக அமையாது.

நன்றி: இந்து தமிழ் திசை (12 - 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்