- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பல மாநிலக் கட்சிகள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. பாஜக, காங்கிரஸ் ஆகியவை தலைமையேற்ற கூட்டணிகளின் நகர்வுகளுக்கு வலுச் சேர்ப்பதாகவும் அச்செயல்பாடுகள் அமைந்திருந்தன.
- மதவாதத்துக்கு எதிரான கொள்கை, மாநிலத்தின் தேவைகள் ஆகிய நோக்கங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தமிழ்நாட்டை ஆளும் திமுக, காங்கிரஸுக்கு மிக இணக்கமான ஒரு கூட்டணிக் கட்சியாக நடந்துகொண்டது. வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய அளவில் ராகுல் காந்தி முன்னிறுத்தப்படுவதை ஊக்குவிப்பவராக இருந்தார்.
- நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக்கும் காங்கிரஸுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தன. ஆனால், தேர்தல் நெருக்கத்தில் அவை களையப்பட்டு, காங்கிரஸுடன் ஒத்திசைவாக நடந்து, 37 தொகுதிகளில் சமாஜ்வாதி வெற்றி பெற்றுள்ளது.
- மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸின் தலைவருமான மம்தா பானர்ஜி காங்கிரஸுக்கு ஈடாக பாஜக அரசின் நிர்வாக நடவடிக்கைகளை விமர்சித்துவந்தவர். மேற்கு வங்கத்தில் பாஜக செல்வாக்கு அதிகரித்துவரும் சூழலில், மம்தாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட திரிணமூல் 29 தொகுதிகளில் வென்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனை.
- மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய இரண்டு கட்சிகளும் பிளவுபட்ட நிலையில் உள்ளன. ஆனால், உத்தவ் தாக்ரே சிவசேனா, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்கவில்லை என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தியது.
- பிஹாரில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம், இண்டியா கூட்டணியைத் தவிர்த்துவிட்டு, கடைசி நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தது. அதன் தலைவர் நிதிஷ் குமார் அரசியல் பார்வையாளர்களின் கேலிக்கு உள்ளானாலும், மாநில முதல்வராக மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் நன்மதிப்பைத் தேர்தலில் நிரூபித்துள்ளார். மத்தியில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியைப் பெற்றவராகவும் உயர்ந்துள்ளார்.
- ஆந்திரத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள சந்திரபாபு நாயுடுவுக்கும் வியக்கத்தக்க வெற்றி கிடைத்துள்ளது. ஆந்திராவின் தற்போதைய அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு, பாஜகவுடனும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடனும் கூட்டணி அமைத்து, ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு எதிரான வாக்குகளைச் சிதறவிடாமல் பார்த்துக்கொண்டார்.
- கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் தேசியக் கட்சிகள் தனிப்பெரும்பான்மை பெற்றால், மாநிலக் கட்சிகளின் பங்களிப்பை மறந்துவிடுவது இந்திய அரசியலில் அடிக்கடி நேரும் நிகழ்வு. கடந்த முறை பாஜக அரசின் மீது வைக்கப்பட்ட முக்கியமான விமர்சனங்களில் ஒன்று, அது எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் நடந்துகொண்டது என்பதுதான்.
- நதிநீர்ப் பங்கீடு, இயற்கைப் பேரிடருக்கான நிவாரணம், ஜிஎஸ்டி வரி வருவாயில் பங்கீடு போன்றவை தொடர்பாக ஆளும் பாஜக அரசுடன் தமிழகம் இதுவரை முரண்பட வேண்டிய சூழலே இருந்தது. மத்தியில் ஆட்சியில் அமரும் கட்சி, இனியாவது மாநிலங்களின் தேவைகளை நியாயத்துடன் அணுக வேண்டும்.
- மாநிலக் கட்சிகளும், கூட்டணியை மட்டுமே முன்னிறுத்தி, மக்களுக்கான உரிமைகளைப் போராடிப் பெறுவதில் தயக்கம் காட்டக் கூடாது. மத்திய-மாநில அரசுகளின் ஒத்திசைவில்தான் மொத்த நாட்டு மக்களின் நலனும் அடங்கியுள்ளது. தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் இந்த உண்மையை மறந்துவிடக் கூடாது.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 06 – 2024)