TNPSC Thervupettagam

தேர்தல் விவாதமல்ல!

May 20 , 2024 60 days 88 0
  • இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் தேர்தல் பிரசாரத்தின்போது காஷ்மீர் ஒரு பிரச்னையாக எழுப்பப்படாமல் இருந்தால்தான் ஆச்சரியம். எதிர்பார்த்ததுபோலவே நடந்துகொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில் காஷ்மீரும் பாகிஸ்தானும் விவாதப் பொருளாக எழுப்பப்பட்டிருக்கின்றன.
  • மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்தப் பகுதி எப்போதும் நம்முடையதுதான்' என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு மறுப்பு பாகிஸ்தானில் இருந்து வராமல், இந்தியாவிலேயே எழுந்திருப்பதுதான் வேடிக்கை.
  • "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க முற்பட்டால் பாகிஸ்தான் அமைதியாக வேடிக்கை பார்க்காது. அந்த நாடு வளையல்களை அணிந்திருக்கவில்லை. அந்த நாட்டிடம் அணுகுண்டுகள் உள்ளன' என்று காங்கிரஸ் தலைமையிலான "இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தச் சூடு அடங்குவதற்குள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயரின் கருத்து விவாதத்தை மேலும் வளர்த்தது.
  • "பாகிஸ்தான் என்பது இறையாண்மை கொண்ட நாடு. மிகவும் மதிக்கத்தக்க நாடும்கூட. அவர்களுடன் நமக்குள்ள பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை வாயிலாகத் தீர்வு காண வேண்டும். அவர்களிடம் அணுகுண்டு உள்ளது. நாம் அவர்களை மதிக்கவில்லை எனில் அதை நம் மீது ஏவ வாய்ப்புள்ளது. நாம் உலகுக்கு வழிகாட்டும் விஸ்வகுருவாக ஆசைப்படுவதற்கு, அண்டை நாடான பாகிஸ்தானுடன் நல்லுறவை மேம்படுத்த வேண்டும்' என்று மணிசங்கர் ஐயர் சொன்னது சமூக வலைதளங்களில் பரபரப்பானது. ஃபரூக் அப்துல்லா, மணிசங்கர் ஐயர் ஆகியோரது பேச்சுகள் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தையே திசைதிருப்பிவிட்டன.
  • "இந்தியா கூட்டணித் தலைவர்கள் பாகிஸ்தானின் அணுசக்தியைக் கண்டு அஞ்சுகின்றனர். ஆனால், பாகிஸ்தான் தன்னிடம் உள்ள வெடிகுண்டுகளைக் கையாள முடியாமல் அதை விற்பனை செய்ய முயற்சிக்கிறது. அவை தரமற்றவை என்பதால் அவற்றை வாங்க ஆளில்லை' என பிகார் மாநிலத்தில் பல தேர்தல் கூட்டங்களில் பிரதமர் மோடி பாகிஸ்தானை மட்டம்தட்டிப் பேசினார்.
  • மேற்கு வங்கம், தெலங்கானா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இப்போது போராட்டமும் விடுதலை முழக்கமும் எழுந்துள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான். அதை நாம் இணைத்துக் கொள்ள முடியும்' என்று கருத்து தெரிவித்தபோது தேர்தல் பிரசாரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மையமடைந்தது.
  • "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என நாடாளுமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது. அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. எதிர்காலத்தில் இந்தியாவின் பகுதியாக மாறும் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை' என்று தன் பங்குக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.
  • "தேர்தல் பரப்புரையில் தேவையில்லாமல் பாகிஸ்தானை இழுக்கும் பழக்கத்தை இந்தியத் தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜம்மு- காஷ்மீர் தொடர்பாக இந்தியா ஆதாரம் இல்லாமல் உரிமை கொண்டாடுவதற்கு எதிராகவே வரலாறு, சட்டம், நடைமுறை ஆகியவை உள்ளன' என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜஹ்ரா பலூச் தெரிவித்திருக்கிறார்.
  • கடந்த 75 ஆண்டுகளாகவே இந்திய எதிர்ப்பே பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு கைகொடுத்து வந்திருக்கிறது. இப்போது கடும் உணவுத் தட்டுப்பாடு, பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி என முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிகளை அந்த நாடு எதிர்கொண்டு வருகிறது.
  • இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து காஷ்மீர மன்னராக இருந்த மகாராஜா ஹரிசிங் 1947 அக்டோபரில் தனது சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க முடிவெடுத்தார். அதைத் தொடர்ந்து, காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முற்பட்டது. ஐ.நா. சபை தலையீட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த பகுதிகள் அந்த நாட்டின் வசம் இடைக்காலமாக ஒப்படைக்கப்பட்டன. அதற்கு ஆசாத் ஜம்மு-காஷ்மீர் என்றும், கில்ஜித் பல்டிஸ்தான் என்றும் பாகிஸ்தான் பெயரிட்டது.
  • இந்தியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது வரலாற்று ரீதியாக, சட்டரீதியாக, தார்மிக ரீதியாக இந்தியாவின் ஆளுகைக்குட்பட்டது. இதுகுறித்து இந்திய நாடாளுமன்றத்திலேயே, ஜவாஹர்லால் நேரு அரசு தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறது.
  • சுதந்திரம் அடைந்ததிலிருந்து கார்கில் போர் உள்பட நான்கு முறை இந்தியா மீது படையெடுத்த பாகிஸ்தான் தோல்வியையே தழுவியது. அதனால், இப்போது உத்தியை மாற்றி, பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வது, இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றுவது, ட்ரோன்கள் மூலம் இந்தியாவில் உள்ள தங்கள் ஆதரவாளர்களுக்கு ஆயுதங்கள் அளிப்பது போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அது ராஜாங்கரீதியாக நடத்தப்பட வேண்டுமே தவிர தேர்தல் பிரசார வீராவேச வசனங்களால் நிகழ்த்தப்படுவது அல்ல.
  • அந்தப் பிரச்னையை தேர்தல் பிரசாரத்தில் பிரதமரும் அமைச்சர்களும் எழுப்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு எதிர்வினையாற்றி "இந்தியா' கூட்டணித் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்குவதும், பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது என்று பீதியைக் கிளப்புவதும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது!

நன்றி: தினமணி (20 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்