- பிரிட்டனுக்கு ஜி7 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள நான்கு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.
- அங்கே இந்தியத் தூதரகம் ஒருங்கிணைத்த கருத்தரங்கில் பேசும்போது, கடந்த 75 ஆண்டுகளாக இந்தியா மருத்துவக் கட்டமைப்புக்கு போதுமான அளவு முதலீடு செய்யவில்லை என்கிற எதார்த்தத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
- இப்போதாவது இது குறித்த விழிப்புணர்வும், நிஜ நிலையும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு புரியத் தொடங்கியிருக்கிறதே என்கிற அளவில் சற்று ஆறுதல்.
- மருத்துவமும், சுகாதாரமும் மாநிலப் பட்டியலில் இடம் பெறுவதால், சில மாநில அரசுகள் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தாமல் விட்டதன் விளைவை கொள்ளை நோய்த் தொற்றுக் காலத்தில் நாம் எதிர்கொள்கிறோம்.
- பொது சுகாதாரத்துக்கு எல்லா மாநில அரசுகளும் முன்னுரிமை வழங்கி கிராமப்புறங்கள் வரை முறையான மருத்துவப் பாதுகாப்பை மக்களுக்கு வழங்கியிருந்தால், கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் இந்த அளவிலான இடர்பாடுகளை இந்தியா சந்தித்திருக்கத் தேவையில்லை.
- நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்த விவாதம் தொடங்கிவிட்டது. 2017-இல் தேசிய சுகாதாரக் கொள்கை உருவாக்கப்பட்டு, 2025-க்குள் மருத்துவத்துக்கான நிதி ஒதுக்கீடு ஜிடிபி-யில் 2.5%-ஆக அதிகரிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
- ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கி பல்வேறு மருத்துவத் தேவைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதுதான் இலக்கு.
- பின்தங்கிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதன் மூலம், சிகிச்சை வசதிகளை அதிகப்படுத்துவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும் 2017 தேசிய சுகாதாரக் கொள்கையின் இலக்குகள்.
- செவிலியர்கள், தடுப்பூசி வழங்குபவர்கள், தொற்றுநோய் கண்காணிப்பாளர்கள், பரிசோதனைக்கூடப் பணியாளர்கள் உள்ளிட்ட துணை மருத்துவப் பணியாளர்கள் மிக அதிகமாக தேவைப்படுகிறார்கள் என்று தேசிய சுகாதாரக் கொள்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
- அவசர சிகிச்சைப் படுக்கைகள், தீவிர சிகிச்சைக் கட்டமைப்புகள் ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.
- அப்படியிருந்தும்கூட, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கொள்ளை நோய் தாக்கியபோது எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்கிற நிலையில்தான், 2017 தேசிய சுகாதாரக் கொள்கை காணப்பட்டது.
மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்
- கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் சுகாதாரத் தேவைக்கான அரசின் நிதி ஒதுக்கீடு ஜிடிபி-யில் 1.5%-க்கும் கீழாகவே இருந்து வருகிறது.
- பிரேஸில் (4%), சீனா (2.9%), ஈரான் (4.4%), அமெரிக்கா (8.6%) ஆகிய நாடுகள் சுகாதாரத்துக்கு வழங்கும் முக்கியத்துவத்தை நாம் கவனத்தில் கொள்ளாமல் போனது துரதிருஷ்டம்.
- கடந்த ஆண்டு கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோது இந்தியாவின் 410 மாவட்டங்களில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தேசிய அளவிலான ஆய்வை மேற்கொண்டனர்.
- கொவைட் 19-ஐ எதிர்கொள்ள எந்த அளவுக்கு மாவட்டங்கள் தயாராக இருக்கின்றன என்பதை அந்த ஆய்வு முன்னிலைப்படுத்தியது.
- தீவிர சிகிச்சைக்கான வசதிகள், உயிர் காக்கும் உபகரணங்கள், மாவட்ட - தாலுகா மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள், அவசர ஊர்திகள் உள்ளிட்ட கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான அனைத்து மருத்துவ தேவைகள் குறித்தும் அந்த ஆய்வில் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்படியிருந்தும்கூட போதிய படுக்கை வசதிகள் இல்லாமலும், தேவைக்கேற்ற மருந்துகள் இல்லாமலும், குறைந்தபட்ச ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்தாமலும் இருந்திருக்கிறோம் என்றால் அதற்கு கவனக்குறைவும், மெத்தனமும்தான் காரணம்.
- தமிழகத்தைத் தவிர, இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் பெரும்பாலும் பெருநகரங்களை சுற்றியே அமைந்திருக்கின்றன, குறைவாகவும் இருக்கின்றன.
- புதிய மருத்துவக் கல்லூரிகளும், செவிலியர் கல்லூரிகளும் பின்தங்கிய மாவட்டங்களில்தான் தொடங்கப்பட வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய குறைபாடு.
- பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், 2020 ஏப்ரல் மாதம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது.
- அதன்படி, இந்திய மருத்துவமனைகளில் 19 லட்சம் படுக்கைகள் உள்ளன. அதில் 12 லட்சம் தனியார் மருத்துவமனையில் காணப்படுகின்றன.
- 10,000 பேருக்கு 16 மருத்துவமனைப் படுக்கைகள் என்கிற அளவில்தான் இந்தியா இருக்கிறது. சிறிய அண்டை நாடான இலங்கையில்கூட 10,000 பேருக்கு 42 மருத்துவமனைப் படுக்கைகள் காணப்படுகின்றன.
- அதேபோல, இந்தியாவிலுள்ள அவசர சிகிச்சை படுக்கைகள் வெறும் 95,000 மட்டுமே.
- அதில் 59,000 தனியார் மருத்துவமனைகளில் காணப்படுகின்றன. வென்டிலேட்டர்களை எடுத்துக்கொண்டால் 47,000 வென்டிலேட்டர்களில் 29,000 தனியார் மருத்துவனைகளில்தான் காணப்படுகின்றன.
- முறையான திட்டமிடலும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் போனதன் விளைவுதான் இது.
- வீட்டில் இருக்கும் நகை நட்டுகளையும், வங்கியில் இருக்கும் சேமிப்புகளையும், அசையாச் சொத்துகளையும் விற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
- பொது மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், கிராமங்கள் வரை மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும் எந்த அளவுக்கு அத்தியாவசியம் என்பதை கொள்ளை நோய்த்தொற்று நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது.
நன்றி: தினமணி (10 – 05 - 2021)