- வறுமையை ஒழிப்பதற்கான கருவியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய, ஊரக வளர்ச்சித் துறை முன்னாள் செயலர் அமர்ஜீத் சின்ஹா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அண்மையில் அமைத்துள்ளது. அந்தக் குழு மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
- ஊரகப்பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆண்டில் நூறு நாள்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் இந்தத் திட்டம் 2005-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திறன் தேவைப்படாத, உடலுழைப்பின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களில் இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
- இந்தத் திட்டத்துக்கான தேவை, செலவு செய்யப்படும் விதம், மாநிலங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், மேற்கொள்ளப்படும் பணிகள் ஆகியவை குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும்.
- விவசாயிகளுக்கு உதவித் தொகையாக மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் தரப்படுகிறது. பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை திட்டமான இதில் தமிழகத்தில் போலி விவசாயிகள் லட்சக்கணக்கானோர் சேர்க்கப்பட்டு பலன் அடைந்து வந்தனர். அவர்கள் அண்மையில் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டனர்.
- இதுபோலவே, நூறு நாள் வேலைத் திட்டம் தொடர்பாகவும் ஆரம்பத்தில் இருந்தே புகார்கள் நிலவுகின்றன. இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்தே விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என விவசாயிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர். வேலைவாய்ப்புக்காக பதிவு செய்பவர்களில் நிறைய பேர், களத்துக்கு வந்து வருகைப் பதிவு செய்துவிட்டு வேறு வேலைக்கு சென்று விடுகின்றனர் என்ற புகாரும் நீண்டகாலமாக உள்ளது.
- இதுதவிர, வருகைப் பதிவேட்டில் போலியாக பெயர்கள் சேர்க்கப்பட்டும் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் 2012-ஆம் ஆண்டு 10 லட்சம் போலி பணி அட்டைகள் கண்டறியப்பட்டன. இதனால், அரசுக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டது. இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றதுதான். இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை இந்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் கவலை அளிப்பவையாக உள்ளன.
- இந்தத் திட்டத்தில் என்ன வகையான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை கிராமசபைகளே தீர்மானிக்க வேண்டும். அந்தத் திட்டங்கள் குறித்து கிராமசபை அவ்வப்போது சமூகத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள சுமார் 2.50 லட்சத்துக்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகளில் 2020-21-ஆம் ஆண்டில் 29,611 கிராம பஞ்சாயத்துகளில் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு முறை சமூகத் தணிக்கை நடைபெற்றுள்ளது.
- இதுபோன்ற தணிக்கையின் அறிக்கையும் பொதுவெளியில் வெளியிடப்படுவதில்லை. பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்படும்போது அது எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது கண்காணிக்கப்பட வேண்டாமா என்று நிலைக்குழு கேள்வி எழுப்பியிருக்கிறது.
- "நூறு நாள் வேலைத் திட்டம்' என்று இது அழைக்கப்பட்டாலும், எந்த மாநிலத்திலும் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு நூறு நாள் வேலை வழங்கப்படுவதில்லை. சராசரியாக 50 முதல் 60 நாள்தான் வேலை வழங்கப்படுகிறது. 2020-21-ஆம் ஆண்டில் 755 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றபோதும் அவற்றில் 72 லட்சம் குடும்பங்கள்தான் நூறு நாள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளன.
- விலைவாசி உயர்வுக்குத் தகுந்தாற்போல ஊதிய உயர்வு அளிக்கப்படாதது இந்தத் திட்டத்தில் உள்ள மற்றொரு குறைபாடு. வெவ்வேறு மாநிலங்களில் ஊதியம் ரூ.193 முதல் ரூ.318 வரை வழங்கப்படுகிறது. இப்படி வழங்கப்படும் ஊதியமும் உரிய காலத்துக்குள் அளிக்கப்படுவதில்லை. 2020-21-ஆம் ஆண்டில் ரூ.4,060 கோடி ஊதியம் நிலுவையில் உள்ளதையும், கட்டுமானப் பொருள்களுக்கு ரூ.9,000 கோடி நிலுவையில் உள்ளதையும் நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
- கடந்த மே மாதம் மேற்கு வங்கத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசு உரிய நேரத்தில் நிதியை விடுவிக்காததால் கடந்த நான்கு மாதங்களாக நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை என பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். "உண்மையான தொழிலாளர்கள் உரிய ஊதியத்தைப் பெறுவதில்லை. ஆனால், கிராம அளவில் திட்டங்களை நிறைவேற்றுகையில் கூட்டு சேரும் இரக்கமற்ற இடைத்தரகர்களின் சதியால் பணம் மட்டும் கைமாறிக் கொண்டே இருக்கிறது என்பது கசப்பான உண்மை' என்று நாடாளுமன்ற நிலைக்குழு பதிவு செய்திருக்கிறது.
- நூறு நாள் வேலைத் திட்டம் அளிக்கப்பட வேண்டும் என்றால் குறைந்தது ரூ.2.64 லட்சம் கோடி ஒதுக்கப்பட வேண்டும் என "பீப்பிள்ஸ் ஆக்ஷன் ஃபார் எம்ப்ளாய்மென்ட் கேரண்டீ' என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், 2022-23-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடு ரூ.98, 000 கோடி மட்டுமே.
- இத்திட்டத்தை வெளிப்படைத்தன்மையுடன் சிறப்பாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 16 ஆண்டுகளாக பல லட்சம் கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் இதற்காக செலவழிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட்டு, திட்டம் முறைப்படுத்தப்படாவிட்டால் அது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
நன்றி: தினமணி (12– 12 – 2022)