TNPSC Thervupettagam

தேவை தெளிவும் வெளிப்படைத்தன்மையும்

May 8 , 2021 1357 days 589 0
  • இந்தியாவில் கொள்ளை நோய்த்தொற்றால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு இரண்டு லட்சத்தைக் கடந்திருக்கும் நிலையில், அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசிலுக்கு அடுத்தபடியாக மிக அதிகமான உயிரிழப்பை நாம் எதிர்கொள்கிறோம்.
  • பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடும்போது மக்கள்தொகை - உயிரிழப்பு விகிதம் இந்தியாவில் மிகவும் குறைவு என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
  • நம்மைவிட அதிக உயிரிழப்பை எதிர்கொள்ளும் மூன்று நாடுகளிலும் 10 லட்சம் பேருக்கு சுமார் 1,700 உயிரிழப்புகள் என்றால், இந்தியாவில் வெறும் 150 தான் என்கிறது அரசின் புள்ளிவிவரம்.
  • குறைந்த உயிரிழப்பு விகிதம் காணப்படுவதற்கு அரசு இயந்திரத்தின் திறமையான செயல்பாடுதான் காரணம் என்று ஆட்சியாளா்கள் மார்தட்டிக் கொள்வார்களேயானால், அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் இருக்கும்.
  • இந்தியாவின் பெரும்பான்மை மக்களிடம் பொதுவாகவே காணப்படும் நோய் எதிர்ப்பு சக்தியும், பழக்க வழக்கங்களும் அதற்குக் காரணங்கள் என்று கருதுவதும்கூட மாயத்தோற்றமேயொழிய நிஜமல்ல.

கொள்ளை நோய்

  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் சரியானவையல்ல என்பதை பல எடுத்துக்காட்டுகள் உணா்த்துகின்றன.
  • மத்திய - மாநில அரசுகள் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை வெளிப்படைத் தன்மையுடன் அறிவிக்காமல் குறைத்து வெளியிடுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
  • மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் அதிகரித்துவிடலாகாது என்கிற கண்ணோட்டத்துடன் உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை அடக்கிவாசிப்பது நிர்வாக அணுகுமுறையின் வழக்கம் என்பதால், அதைக் குறை கூறுவதிலும் அா்த்தமில்லை.
  • கடந்த மாதம் குஜராத் அரசின் சுகாதாரத் துறை அறிக்கையின்படி, ஏப்ரல் 16-ஆம் தேதி 78 அதிகாரபூா்வ கொள்ளை நோய்த்தொற்று மரணங்கள் பதிவாகியிருந்தன.
  • ஆனால், கொவைட் 19 விதிமுறைகளுக்கு உட்பட்டு, அதே தேதியில் புதைக்கப்பட்ட அல்லது தகனம் செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 689.
  • தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இணை நோய்கள் இருந்தவா்களின் கொவைட் 19 மரணங்கள் கணக்கில் சோ்த்துக் கொள்ளப்படவில்லை.
  • இந்தியாவைப் பொருத்தவரை, மூன்றில் இரண்டு மரணங்கள் அநேகமாக அவரவா் வீடுகளில்தான் நிகழ்கின்றன. சுமார் 15% மரணங்கள் பதிவு செய்யப்படுவதில்லை.
  • பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட மரணங்களில் எத்தனை மரணங்கள் கொவைட் 19 பாதிப்பால் ஏற்பட்டவை என்பது குறித்த புள்ளிவிவரங்களில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
  • கொள்ளை நோய்த்தொற்று உயிரிழப்புகள் குறித்து வெளிப்படைத்தன்மையுள்ள புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும்.
  • அதைவிடக் கவலையளிப்பது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நோய்த்தொற்று சிகிச்சை குறித்து சரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கவில்லை என்பது.
  • கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வது குறித்து சரியான திட்டமிடலுடனும், கலந்தாலோசனையுடனும், நிபுணா்களின் பரிந்துரைகளுடனும் சிகிச்சை வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படவில்லை என்கிற வேதனைக்குரிய நிலையை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
  • ஓராண்டுக்கு முன்பு மத்திய சுகாதார அமைச்சகம், கொவைட் 19-ஐ எதிர்கொள்வதற்கான முதலாவது வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
  • அதன்படி, ஆரம்பகட்ட சிகிச்சை வழிமுறைகளில் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் இணைக்கப்பட்டது. கடந்த ஓராண்டில் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயினால் பெரிய பயன் எதுவும் இல்லை என்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
  • பெரும்பாலான மருத்துவா்கள் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனா்.
  • அப்படி இருந்தும்கூட கடந்த மாதம் வெளியிடப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் தொடா்கிறது.
  • ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மட்டுமல்ல, இதுபோல கைவிடப்பட்ட பல சிகிச்சை முறைகள் இப்போதும்கூட வழிகாட்டு நெறிமுறைகளில் காணப்படுவதிலிருந்து முறையான தொடா் ஆலோசனைகளும், மறுபரிசீலனைகளும், திட்டமிடலும் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு இல்லை என்பது தெரிகிறது.
  • ஆா்ஜென்டீனாவில் ஓா் ஆய்வில், கான்வெலசென்ட் பிளாஸ்மா முறை மிதமான பாதிப்புகளில் நோய்ப் பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டது.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் கொவைட் 19 நோயாளிகளை பிளாஸ்மாவால் காப்பாற்ற முடியாதது உறுதிப்பட்டது. அப்படியிருந்தும்கூட வழிகாட்டு நெறிமுறைகளில் கான்வெலசென்ட் பிளாஸ்மா இடம் பெற்றிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
  • ரெம்டிசிவிர், கொவைட் 19 நோயாளிகளின் உயிர்காக்கும் மருந்து அல்ல. மருத்துவமனையில் தொடா்வதை குறைக்க உதவும் என்கிற அளவில்தான் அதன் பயன்பாடு. கள்ளச் சந்தையில் பல ஆயிரங்களை தொடும் அந்த மருந்தால் பயனில்லை எனும்போது, அதை கட்டுப்படுத்துவதும், பயன்பாட்டு பரிந்துரையை அகற்றுவதும் அரசின் கடமை. ஆனால், இன்னும்கூட சுகாதார அமைச்சகம் ஏன் தயங்குகிறது என்று தெரிய வில்லை.
  • கொவைட் 19 சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகள் எவை; பயன்படுத்தக் கூடாத மருந்துகள் எவையெவை; தேவைப்படும் மருந்துகள் தட்டுப்பாடில்லாமல் நியாமான விலையில் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்வது - இவையெல்லாம் சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளில் உடனடியாக இடம்பெற்றாக வேண்டும்.

நன்றி: தினமணி  (08 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்