TNPSC Thervupettagam

தேவை பிள்ளையாரா, குரங்கா?

July 12 , 2019 2010 days 1110 0
இந்தியாவில் மொழிப் பிரச்சினை
  • காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுமான இந்தியா முழுவதும் ஒரே அரசின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு நாடாக்கிய ஆங்கிலேயர், அனைத்து மக்களுக்கும் கல்விக் கூடங்களை அமைத்த போது ஆங்கில மொழியே கல்வி மொழியாகி இந்தியா முழுமைக்குமான பொது மொழியாயிற்று.
  • இந்தியர் அனைவருக்கும் தொடர்பு மொழியாகவும், இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் ஆங்கிலம் அல்லாத பொது மொழியொன்று தேவை என்னும் கருத்தை மகாத்மா காந்தி முன்வைத்தார்; அது மட்டுமல்லாமல், ஹிந்தியும், உருதுவும் கலந்த ஹிந்துஸ்தானியே இந்தியரின் பொது மொழியாகவும் இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் ஆக வேண்டுமென மகாத்மா முன்மொழிந்தபோதே மொழிப் பிரச்னை தொடங்கி விட்டது.
  • இந்தியா முழுவதுமுள்ள இந்துக்கள் அனைவரும் ஹிந்தி பேசுபவர்கள் அல்லர்; முஸ்லிம்கள் அனைவரும் உருது பேசுபவர்கள் அல்லர் என்னும் நிலையில் இரண்டும் கலந்த ஹிந்துஸ்தானி என்னும் செயற்கை மொழி பல்வேறு மொழியினத்தவருக்கும், இந்தியர் அனைவருக்கும் பொது மொழியாகுமா என்னும் சிந்தனை மகாத்மாவுக்கு ஏற்படாதது இந்தியர்களின் துரதிருஷ்டம்.
ஹிந்துஸ்தானி – இந்தி
  • 1925-ஆம் ஆண்டு நடைபெற்ற கயா மாநாட்டில் ஹிந்துஸ்தானியே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை மொழியாக வேண்டுமென இந்து தேசாபிமானிகள் அறிவித்தாலும், மெல்ல மெல்ல அதை ஹிந்தி என்றாக்கி, சுதந்திர இந்தியாவின் ஒரே ஆட்சி மொழி என அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்து விட்டனர்.
  • ஹிந்தியல்லாத பிற மொழியாளர்கள் தங்களின் மொழிகளும் ஹிந்திக்கு நிகராக இந்திய ஆட்சி மொழிகளாக வேண்டுமெனக் குரல் எழுப்பும் சிந்தனையின்றி, ஹிந்தியுடன் ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுகோள் விடுத்ததன் விளைவாக, ஹிந்தியல்லாத பிற மொழியாளர் விரும்புகிற வரையும் ஹிந்தியுடன் ஆங்கிலமும் பயன்படுத்தப்படலாம் என 1963-இல் ஆட்சி மொழிச் சட்டத்தை மகாத்மா காந்தியுடன் நெருக்கமாக இருந்த பண்டித நேரு நிறைவேற்றினார்; இதன் மூலம் இந்திய மொழிகளில் ஹிந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்பதை அவர் உறுதிப்படுத்திவிட்டார்.
தமிழகத்தில் மொழிப் போர்
  • இதற்கிடையில் 1937-இல் சென்னை மாநிலத் தேர்தலில் நீதிக் கட்சியைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வரான ராஜாஜி, 1938-இல் நடுநிலைப் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயப் பாடமாக்கினார்.
  • தமிழகம் கொந்தளித்தது. நீதிக் கட்சியினர், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தினர், மறைமலையடிகள், ச.சோமசுந்தர பாரதியார், திரு.வி.க. முதலான தமிழறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்று திரண்டனர்.
  • பெரியார் உள்பட 3,000-த்துக்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவர் உயிரிழந்தனர்.
  • ஒரு இராமசாமிக்கும், ஒரு பாரதிக்குமாக எனது திட்டத்தைக் கைவிடமாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்த ராஜாஜியின் அரசு, அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட ஒத்துழையாமை நிலைப்பாட்டின்படி பதவி விலகியது.
  • பின்னர் 1940-இல் ஹிந்தி மொழி தொடர்பான அரசாணையை ஆங்கிலேய ஆளுநர் விலக்கிக் கொண்டார்.
  • இரண்டாவது முறையாக 1948-இல் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆந்திரம், கர்நாடகம், கேரளப் பகுதிகளில் ஹிந்தி மொழி கட்டாயம் எனவும், தமிழ்ப் பகுதியில் ஹிந்தி, சம்ஸ்கிருதம், அரபி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலான மொழிகளில் ஏதேனும் ஒன்று கட்டாயப் பாடம் எனவும் அறிவித்தாலும், நடைமுறையில் ஹிந்தி கற்பிக்க மட்டுமே ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர்.
  • இதனால், தமிழகத்தில் இரண்டாம் மொழிப் போர் மூண்டது. பள்ளிகள் முன் அடையாள மறியல், ஆளுநரும், அமைச்சர்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கருப்புக் கொடி காட்டுதல் எனப் போராட்டம் தொடர்ந்து. இரண்டாண்டு கால இழுபறிக்குப் பின்னர், 1950-இல் கட்டாய ஹிந்தி கைவிடப்பட்டு, ஹிந்தி மொழிப் பாடம் உண்டு; தேர்வும் உண்டு; ஆனால், ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெறுதல் அவசியமில்லை என அறிவிக்கப்பட்டது.
அண்ணாவும் இந்தியும்
  • இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஹிந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்பது நடைமுறைக்கு வந்த 1965 ஜனவரி 26-க்கு முதல் நாள், ஹிந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்பதற்குத் துக்கம் தெரிவிக்கும் முறையில் தி.மு.க.வினர் அவரவர் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுதல், மௌன ஊர்வலம் நடத்துதல் எனும் எதிர்ப்பு முறையை அறிவித்தார் அண்ணா.
  • மதுரையில் மௌன ஊர்வலம் சென்ற மாணவர்கள் இந்தியத் தேசியவாதிகளால் தாக்கப்பட்ட சிறு பொறி, தமிழகத்தைப் பெரும் தீயாகப் பற்றிக் கொண்டது.
  • ஒன்பது பேரின் உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் இரண்டுமாக 1942 ஆகஸ்ட் கிளர்ச்சியை விடவும், கொடூரமான கலவர பூமியானது தமிழகம்.
  • 1967-இல் முதல்வர் பொறுப்பேற்ற அண்ணா, ஹிந்தி விருப்பப் பாடம் என்பதை நீக்கி, தாய் மொழி, ஆங்கிலம் என இரு மொழியே போதுமானது என்றாக்கினார்.
  • மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக் கொள்கையில், மூன்றாவது மொழியாக ஏதேனுமொரு இந்திய மொழி என்றாலும் மாணவர்கள் இந்திய ஆட்சி மொழியான ஹிந்தி மொழியையே தேர்ந்தெடுப்பர்.
கல்விக் கொள்கை
  • மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை என்னும் வரைவறிக்கையின் இயல் நான்கு பிரிவு பதினொன்றின் ஐந்தாவது உட்பிரிவு பின்வருமாறு அமைகிறது: இந்திய மொழிகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் சம்ஸ்கிருத மொழியின் சிறப்பு முக்கியத்துவத்தையும், நாட்டின் பண்பாட்டு ஒருமைக்கு அதன் தனித்துவமிக்க பங்களிப்பையும் கணக்கில் கொண்டு, பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களில் சம்ஸ்கிருதம் பயிற்றுவிக்க ஏதுவான வசதிகள் தங்கு தடையின்றி வழங்கப்படும்.
கட்டுரையாளர் கருத்து
  • உண்மையான உணர்வுப்பூர்வமான இந்தியத் தேசியத்தை வளர்க்கவும் இந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் இரண்டு விஷயங்களில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
  1. இந்திய தேசிய மொழிகள் அனைத்தையும் இந்திய ஆட்சி மொழிகளாக்க வேண்டும்
  2. கல்வியை முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
  • ஹிந்தி-சம்ஸ்கிருதம் வழியாக இந்திய ஒருமைப்பாட்டு முயற்சி என்பது, பிள்ளையார் பிடிக்க நினைத்து குரங்கு பிடித்த கதையாகவே முடியும்.
 

நன்றி: தினமணி (12-07-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்