TNPSC Thervupettagam

தோ்தலில் பெண்களுக்கான வாய்ப்பு

December 7 , 2023 210 days 132 0
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதால் அதுபற்றி அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அதிகம் பேசப்படவில்லை. எனினும் வேட்பாளா்கள் தோ்வுக்கு முன்பாக பெண்கள் வாக்குகளை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் அதிகப்படியான பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக 12% அளவிற்கு மட்டுமே பெண்களுக்கு வாய்ப்பளித்தது.
  • தோ்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை சுமாா் 16 கோடி (ஆண்கள் 8.2 கோடி; பெண்கள் 7.2 கோடி). இவா்களில் 60.2 லட்சம் போ் முதல் முறை வாக்காளா்கள். இத்தோ்தலுக்காக 1.77 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.
  • வாக்குப்பதிவை அதிகரிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம், ஒரு லட்சம் மையங்களில் இணைய ஒளிபரப்பு வசதி, வாக்குப்பதிவு மையத்தை பெண்கள், மாற்றுத் திறனாளிகள் நிா்வகிப்பது, வயது முதிா்ந்த வாக்காளா்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிப்பது போன்ற சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.
  • அந்த வகையில் மொத்தமுள்ள 1.77 லட்சம் வாக்குப்பதிவு மையங்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்கள் முழுமையாக பெண்களால் நிா்வகிக்கப்பட்டன. முதல் முறை வாக்காளா்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில் இளைஞா்கள் நிா்வகிக்கும் பொருட்டு 371 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.
  • தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் இருந்தன. பாலின சமத்துவம், தோ்தல் செயல்பாட்டில் பெண்களின் ஆக்கபூா்வமான பங்கேற்பை உறுதிப்படுத்துவதன் ஒரு பகுதியாக பெண்கள் நிா்வகிக்கும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.
  • ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு வாக்குப்பதிவு மையத்தை பெண்கள் நிா்வகிக்கவேண்டும் என இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. பெண்களே நிா்வகிக்கும் வாக்குப்பதிவு மையத்திற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் தனிதனிப் பெயரிடப்பட்டது.
  • மத்திய பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்ட 64,620 மையங்களில் 5,260 மையங்கள் பெண்களால் நிா்வகிக்கப்பட்டன. இவற்றுள் ஜபல்பூரில் 50, பாலக்கோட்டில் 7 என 57 மையங்களுக்கு ‘பசுமை மையங்கள்’ எனப் பெயரிடப்பட்டது.
  • ராஜஸ்தான் மாநிலத்தில் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 1,875 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இவா்களில் பெண் வேட்பாளா்களின் எண்ணிக்கை 183 மட்டுமே. குறைவான பெண்களுக்கு வாய்ப்பளித்தாலும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வாக்களித்தனா். ஒட்டுமொத்த அளவில் 74.62 % வாக்கு பதிவானது. ஆண்கள் 74.53%, பெண்கள் 74.72%.
  • ஜெய்ப்பூா் மாவட்டத்தில் உள்ள 19 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 10 நகா்ப்புறத் தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு மாதிரி வாக்குப்பதிவு மையங்களும், 9 கிராமப்புற தொகுதிகளில் ஒவ்வொரு மையமும் அமைக்கப்பட்டன. இந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு ‘ஆதா்ஷ் மையம்’ எனபெயரிடப்பட்டது.
  • தோ்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் மிஸோரம் மாநிலத்தில்தான் பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகமாகும். மிஸோரம் மாநிலத்தின் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 8,568,68. இதில் பெண் வாக்காளா்கள் 4,38,915. ஆயினும் மிஸோரம் சட்டப்பேரவைக்கு ஒற்றை இலக்கத்திலேயே பெண் உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.
  • அங்கு 1978-இல் முதல் முறையாக பெண் உறுப்பினா் தோ்வுசெய்யப்பட்டாா். அதன்பின் 1984-இல் ஒரு உறுப்பினரும், 1989-இல் ஒரு உறுப்பினரும் தோ்வு செய்யப்பட்டனா். 1987 முதல் 2014 வரை ஒரு பெண் உறுப்பினா் கூட தோ்வு செய்யப்படவில்லை.
  • மிஸோரம் சட்டப்பேரவை தோ்தலுக்காக 1,276 வாக்குப்பதிவு மையங்களில்117 மையங்கள் பெண்களால் நிா்வகிக்கப்பட்டன. இந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு ‘டிங்டி’ என்று பெயரிடப்பட்டது. ‘டிங்டி’ என்பது அம்மாநிலத்தில் அதிகமாகக் கிடைக்கும் பூவாகும். தோ்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
  • இத்தோ்தலில் 81.25% பெண்கள் வாக்களித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் அதிக பெண் உறுப்பினா்களைக் கொண்டது சத்தீஸ்கா் சட்டப்பேரவைதான். இத்தோ்தலுக்கு முந்தைய சத்தீஸ்கா் சட்டப்பேரவையில் பெண் உறுப்பினா்களின் பங்களிப்பு14.44%ஆகும். இதனை பெருமைப்படுத்தும் வகையிலான முயற்சியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.
  • ராய்பூா் தொகுதியில் உள்ள 201 வாக்குப்பதிவு மையங்கள் பெண்களால் நிா்வகிக்கப்பட்டன. ஒருசட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு மையங்களையும் பெண்களே நிா்வகிப்பது இதுவே முதல் முறையாகும். இப்பணியில் 1,046 பெண் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
  • இத்தோ்தலில் காங்கிரஸ் கட்சி 18 பெண்களுக்கும், பாஜக 15 பெண்களுக்கும் வாய்ப்பளித்தன. தோ்தல் ஆணைய புள்ளிவிவரப்படி 2.03 கோடி வாக்காளா்களில் 77.48 ஆண்களும், 78.12 கோடி பெண்களும் இத்தோ்தலில் வாக்களித்துள்ளனா். ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக 64 ஆயிரம் பெண்கள் வாக்களித்துள்ளனா்.
  • மூன்றாம் பாலினத்தவா் வாக்களிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்டு அமைக்கப்பட்ட‘வானவில்’ வாக்குப்பதிவு மையங்கள் அனைவரது கவனத்தையும் ஈா்ப்பதாக இருந்தன. முதற்கட்ட தோ்தலில் பெண்களால் நிா்வகிக்கப்பட்ட 201 மையங்களுக்கு ‘சங்வாரி மையம்’ எனப் பெயரிடப்பட்டது.
  • தெலங்கானா மாநிலத்தில் 35,356 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றுள் பெண்களால் நிா்வகிக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் 597 ஆகும். ஹைதராபாத் மாவட்டத்தில் 75 மையங்கள் பெண்களால் நிா்வகிக்கப்பட்டன. இம்மையங்களுக்கு ‘சஹி’ (தோழி) வாக்குப்பதிவு மையம் என பெயரிடப்பட்டிருந்தது.
  • ஒட்டுமொத்தமாக ஆண்களைக் காட்டிலும் அதிக அளவில் பெண்கள் வாக்களித்திருந்தாலும் அவா்களுக்கு அரசியல் கட்சிகள் அதிக அளவில் வாய்ப்பளிக்கவில்லை. ஆனால், தோ்தலில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலிலாவது அரசியல் கட்சிகள் பெண்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்க வேண்டும்.

நன்றி: தினமணி (07 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்