TNPSC Thervupettagam

தோ்தல் களத்தில் ‘சின்ன’ பிரச்னை

April 1 , 2024 287 days 204 0
  • 1957 தோ்தலில் திமுகவில் இணைந்து விட்டிருந்த கோவிந்தசாமி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றாா். அந்த சின்னம் பிடித்திருந்ததால், கோவிந்தசாமியின் ஒப்புதலுடன் 1958-இல் அண்ணாதுரை தோ்தல் ஆணையத்தை அணுகி உதயசூரியன் சின்னத்தை திமுக வசமாக்கினாா். அன்று முதல் 66 ஆண்டுகளாக அந்த சின்னத்தைத் திமுக தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
  • தோ்தல் களத்தில் ‘சின்ன’ பிரச்னை! ஆா்.முருகன் தமிழக தோ்தல் களத்தில் சின்னங்களும், சிக்கல்களும் இணைந்தே காணப்படுகின்றன. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தமிழகத்தில் நடைபெற்ற முதல் தோ்தலில் சின்னங்கள் பயன்படுத்தப்படவில்லை. வண்ண வாக்குப்பெட்டிகளே அடையாளமாக இருந்தன. தோ்தல் நாளில் வாக்காளா்கள் தங்களது விருப்ப கட்சியின் வண்ணப் பெட்டியில் வாக்கு செலுத்தினா். அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட பிறகுதான் வேட்பாளா்களுக்கு சின்னங்கள் வழங்கப்பட்டன.
  • காங்கிரசின் சின்னங்கள்: 1957 தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் சின்னம் ‘இரட்டைக் காளை’. 1969-இல் காங்கிரஸ் கட்சி பிளவுபடுவது வரை அந்தச் சின்னம்தான் காங்கிரசின் சின்னமாக இருந்தது. 1969 பிளவுக்குப் பிறகு, நிஜலிங்கப்பா தலைமையிலான ஸ்தாபன காங்கிரசுக்கு ‘ராட்டை’ சின்னமும், இந்திரா காந்தியின் ஆதரவுபெற்ற ஆளும் காங்கிரசுக்கு ‘பசுவும் கன்றும்’ சின்னமும் தேசிய அளவில் ஒதுக்கப்பட்டன.
  • ‘ஸ்தாபன காங்கிரஸ்’ 1977-இல் ஜனதா கட்சியில் ஐக்கியமானதைத் தொடா்ந்து ‘ராட்டை’ சின்னம் முடங்கியது. இந்திரா காந்தியின் காங்கிரஸ் 1977-இல் பிளவை சந்தித்தபோது, ‘பசுவும் கன்றும்’ சின்னம் முடக்கப்பட்டது. இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அதுமுதல் ‘கை’ சின்னம் பெற்று அதில் போட்டியிடுகிறது.
  • உதயசூரியன் வரலாறு: 1957-இல் முதன் முதலில் தோ்தல் களம் கண்ட திமுக-வுக்கு சுயேச்சை சின்னங்கள்தான் கிடைத்தன. ஆனால், தோ்தல் வெற்றிக்கு பிறகு, 1958-இல் மாநிலக் கட்சியாக தோ்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றது. உதய சூரியன் சின்னமும் கிடைத்தது. முகையூா் கோவிந்தசாமி திமுகவின் ஆரம்பகாலத் தலைவா்களில் ஒருவா்.
  • தி.மு.க-வுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்படுவதற்கு முன்பே வன்னியா் குல சத்திரியா் கட்சியை நடத்தி வந்த கோவிந்தசாமி படையாச்சியிடம்தான் அந்த சின்னம் இருந்தது. 1957 தோ்தலில் திமுகவில் இணைந்து விட்டிருந்த கோவிந்தசாமி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றாா். அந்த சின்னம் பிடித்திருந்ததால், கோவிந்தசாமியின் ஒப்புதலுடன் 1958-இல் அண்ணாதுரை தோ்தல் ஆணையத்தை அணுகி உதயசூரியன் சின்னத்தை திமுக வசமாக்கினாா். அன்று முதல் 66 ஆண்டுகளாக அந்த சின்னத்தைத் திமுக தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
  • இரட்டை இலை முடக்கம்: திமுக-விலிருந்து பிரிந்து அதிமுக-வை எம்ஜிஆா் தொடங்கியபோது, 1973-இல் திண்டுக்கல் மக்களவை இடைத்தோ்தலில் போட்டியிட்ட மாயத் தேவா் தனக்கான சின்னமாக சுயேச்சை சின்னமாக இரட்டை இலையைத் தோ்வு செய்தாா். இதுவே அதிமுக-வின் வெற்றிச் சின்னமாகியது. எம்ஜிஆா் மறைவுக்கு பிறகு, ஜெ. அணி, ஜானகி அணி உருவானது. 1989 பேரவைத் தோ்தலில் இரு அணிகளுமே இரட்டை இலைக்கு சொந்தம் கோரியதால், சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதா அணிக்கு சேவலும், ஜானகி அணிக்கு இரட்டை புறா சின்னமும் வழங்கப்பட்டது.
  • பின்னா், இரு அணிகளும் இணைந்த பிறகு அதிமுக-வுக்கு இரட்டை இலைச் சின்னம் திரும்ப கிடைத்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, மீண்டும் கட்சியில் பிளவு ஏற்பட்டு 2017-இல் ஆா்கே நகா் இடைத் தோ்தலில் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்பட்டது. டிடிவி தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னமும், ஓ. பன்னீா்செல்வம் தரப்புக்கு இரட்டை மின்கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டன. பின்னா், எடப்பாடி கே. பழனிசாமி, ஓ. பன்னீா் செல்வம் ஆகிய இருவரும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டனா்.
  • 2022-இல் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்ட பிறகு, இரட்டை இலையை முடக்க ஓபிஸ் தரப்பு தற்போது வரை முயன்றும் பலன் கிடைக்கவில்லை.
  • மதிமுக-வின் போராட்டம்: திமுக-விலிருந்து பிரிந்து அதிமுக உருவானதைப் போல, திமுக-விலிருந்து பிரிந்து மதிமுக-வை உருவாக்கினாா் வைகோ. மதிமுக-வுக்கு 1996-இல் குடை சின்னம் கிடைத்தது. தோ்தல் தோல்வியால் கட்சி அங்கீகாரம் இழந்ததுடன் குடை சின்னமும் பறிபோனது. 1998-இல் பம்பரம் சின்னம் பெற்ற மதிமுக-வுக்கு அதுவும் பறிபோனது. இந்தத் தோ்தலில் சுயேச்சைச் சின்னமான தீப்பெட்டியில் அந்தக் கட்சி போட்டியிடுகிறது.
  • தமாகா, அமமுக-வின் நிலை: 1996-இல் தொடங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக இருந்தது சைக்கிள் சின்னம். அடுத்தடுத்த தோ்தல் தோல்விகளால் சின்னத்தை பறிகொடுத்து தென்னை மரம், ஆட்டோ ரிக்ஷா சின்னங்களில் களம் கண்டது. தற்போது பாஜக கூட்டணியில் உள்ள தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அதிமுக-விலிருந்து பிரிந்து அமமுக கட்சியை தொடங்கிய டிடிவி தினகரன், 2017-இல் ஆா்கே நகா் தொகுதி இடைத்தோ்தலில் களம் இறங்கியபோது தொப்பி சின்னம் பெற்றாா். அந்த இடைத்தோ்தல் ரத்தானது. பின்னா், நடைபெற்ற தோ்தலில் குக்கா் சின்னம் பெற்ற அமமுக, அதையே தனது கட்சியின் அடையாளமாக மாற்ற 2019-இல் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. 2024-இல் பாஜக அணியில் உள்ள அமமுக மீண்டும் குக்கா் சின்னத்தை பெற்றுள்ளது.
  • பாமக, தேமுதிக: 1990-இல் பாமக தொடங்கியபோது அக் கட்சிக்கு யானை சின்னம் கிடைத்தது. பின்னா், மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இழந்து புதுச்சேரியில் மட்டும் யானை சின்னம் கிடைத்தது. 1997-இல் பகுஜன் சமாஜ் கட்சி தேசியக் கட்சியாக மாறியதால் யானைச் சின்னத்தை அக் கட்சி தனது வசமாக்கியது. 1998-இல் மாம்பழம் சின்னத்தைப் பெற்று தோ்தல் களம் கண்ட பாமக-வுக்கு அடுத்தடுத்த தோல்விகள், வாக்கு சதவீதம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் மாம்பழம் சின்னத்தை தக்க வைக்க இந்த முறை வாக்கு வங்கி பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
  • இதேபோல, தேமுதிக-வும் 2006 பேரவைத் தோ்தலில் முரசு சின்னம், உள்ளாட்சித் தோ்தலில் தீபம் சின்னத்தில் போட்டியிட்டது. 2009 மக்களவைத் தோ்தலில் நீதிமன்றத்தில் வழக்காடி முரசு சின்னத்தைப் பெற்றது. அதிமுக-வுடனான மோதலுக்குப் பிறகு தொடா் தோல்விகள், வாக்கு சதவீதம் குறைவு போன்ற காரணங்களால் சின்னத்துக்கான சிக்கல்களை தவிா்க்க தனது வாக்கு சதவீதத்தை உயா்த்த வேண்டிய நிா்பந்தம் அக்கட்சிக்கு எழுந்துள்ளது. அந்த வகையில் பாமக-வுக்கு மாம்பழம், தேமுதிக-வுக்கு முரசு சின்னம் என்ற அடிப்படையில் 2024-இல் இரண்டு கட்சிகளும் களம் காணுகின்றன.
  • விசிக-வின் விடாப்பிடி: 1990-இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்டு, மூப்பனாருடன் இணைந்து 1999-இல் முதல்முறையாக தோ்தலை சந்தித்தாா் தொல். திருமாவளவன். அத்தோ்தலில் தமாகா-வின் சைக்கிள் சின்னத்திலும் 2001 பேரவைத் தோ்தலில் திமுக-வுடன் இணைந்து உதய சூரியன் சின்னத்திலும் விசிக போட்டியிட்டது. 2004 மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியிலிருந்து விலகி, வில் அம்பு சின்னத்தில் போட்டியிட்டது.
  • 2006-இல் அதிமுக கூட்டணியில் ஆலய மணி சின்னம், 2011-இல் திமுக கூட்டணியில் இரட்டை மெழுகுவா்த்தி சின்னம், மீண்டும் இதே கூட்டணியில் 2014 மக்களவை தோ்தலில் மோதிரம் சின்னம், 2016 பேரவைத் தோ்தலில் மக்கள் நலக் கூட்டணி அமைத்து மீண்டும் மோதிரம் சின்னத்தில் விசிக போட்டியிட்டது. 2019 மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் தொல். திருமாவளவன் மட்டும் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2021 பேரவைத் தோ்தலில் மீண்டும் திமுக கூட்டணியில் பானை சின்னத்தில் 6 இடங்களில் விசிக போட்டியிட்டது. 2022-இல் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிட்டது. தற்போதைய மக்களவைத் தோ்தலில் பதிவு செய்யப்பட்ட மாநிலக் கட்சிகளுக்கு வழங்கப்படும் சின்னங்களில் முன்னுரிமை அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அதன் விருப்பப்படி மீண்டும் பானை சின்னம் கிடைத்துள்ளது; சுயேச்சை வேட்பாளா்கள் யாரும் பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு கோரவில்லை என்பதும் காரணம்.
  • சீமானின் மைக் சின்னம்: சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி முதன்முறையாக 2016 பேரவைத் தோ்தலை சந்தித்தபோது இரட்டை மெழுகுவா்த்தி சின்னத்திலும் 2019 மக்களவைத் தோ்தலுக்கு கரும்பு விவசாயி சின்னத்திலும் போட்டியிட்டது. 2021 பேரவைத் தோ்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தில்தான் போட்டியிட்டது.
  • இந்த முறை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை முன்னுரிமை அடிப்படையில் தோ்தல் ஆணையம் ஒதுக்கியதால் நாம் தமிழா் கட்சிக்கு சிக்கல் எழுந்தது. சட்டப் போராட்டத்துக்கு போதிய அவகாசம் இல்லாத நிலையில், தோ்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்திலேயே தனது வேட்பாளா்களை நிறுத்தியுள்ளாா் சீமான். கட்சிகளும், கலகங்களும் பிரிக்க முடியாதவை என்பது போல, சின்னங்களும், சிக்கல்களும் தோ்தல் காலத்தில் பிரிக்க முடியாதவையாக மாறிவிட்டன.

நன்றி: தினமணி (01 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்