TNPSC Thervupettagam

தொடருமா 100 நாள் வேலைத் திட்டம்

March 5 , 2023 526 days 273 0
  • ‘‘100 நாள் வேலை இருந்தாலாவது பரவாயில்ல... பசியில்லாம தூங்கப் போலாம்.’’
  • ‘‘100 நாள் வேலை இருந்ததாலதான் இந்த கரோனா காலத்துல எங்க வயிறு ஏதோ கொஞ்சம் நெறஞ்சுது.’’
  • ‘‘100 நாள் வேலை இருக்குறதாலதான் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் எல்லாம் கொஞ்சம் சம்பாரிக்க முடியுது.’’
  • தமிழ்நாட்டின் கடைக்கோடிக் கிராமங்களில் உள்ளபெரும்பாலான விளிம்புநிலை மக்களின் குரல்கள் இவை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் 2005 மூலம், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்தத் திட்டத்தால் விவசாயம் அழிந்துவிட்டது என்று சிலர் அறியாமை காரணமாகத் தவறாக நம்பினாலும், இன்றும் விளிம்புநிலை மக்களின் பசியைப் போக்கிக்கொண்டிருப்பது இத்திட்டம்தான்.
  • மக்கள் வேலை செய்யும் 100 நாள்கள் விவசாய நாள்களாக இல்லாத வகையில், கிராமசபை மூலம் முடிவெடுக்க வாய்ப்புள்ளது. இருந்தும் இத்திட்டம் விவசாயத்தை அழிக்கிறது என்று மக்களைப் பேசவைத்தது தேவையற்ற திசைதிருப்பல்.

திசைமாறும் திட்டம்

  • கடந்த நவம்பரில், பஞ்சாயத்து ராஜ் துறையின் முன்னாள் செயலாளரான அமர்ஜித் சின்ஹா தலைமையில், இச்சட்டத்தின் செயல்திறனை ஆராய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. அந்தக் குழுவின் முதல் கூட்டத்தில், ‘‘கேரளம் போன்ற வளர்ந்த மாநிலங்கள் இத்திட்ட நிதி மூலம் சமூகச் சொத்துகளை உருவாக்கும் நிலையில் பிஹார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வேலைகளைக்கூட உருவாக்க முடியவில்லை.
  • எனினும் இத்திட்டப்படி அம்மாநிலங்களுக்கான நிதியை மறுக்க இயலாது’’ என்று விவாதம் நடந்துள்ளது. அதே கூட்டத்தில், ‘‘வறுமையை ஒழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தை வசதியான மாநிலங்கள் நன்கு பயன்படுத்திக்கொள்கின்றன’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
  • 2016இல் இத்திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவிடும் எனும் பேச்சுகள் எழுந்தபோது, “70 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சிக்குப் பின்னரும் மக்கள் நிலத்தில் நின்று மண்வெட்டி பிடித்து வேலை பார்க்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள் அல்லவா? அதை உலகுக்கு எப்படிக் காட்டுவது? நான் ஏன் இதை ரத்துசெய்ய வேண்டும்?” என்று நாடாளுமன்றத்திலேயே பேசியவர் பிரதமர் மோடி.
  • இந்நிலையில், இத்திட்டத்துக்கான முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில், மத்திய அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செயலி மூலம் வருகைப்பதிவு செய்யும் முறையை (NMMS - National Mobile Monitoring System) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கட்டாயப்படுத்தியது.
  • இதனால், இணைய வசதி இல்லாத மலைக் கிராமங்கள், பழங்குடிகள் வாழும் வனப்பகுதியிலும்கூடச் செயலி மூலம் வருகைப்பதிவு செய்தால்தான் வேலை செய்ததற்கான ஊதியம் வழங்கப்படும் எனும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ‘‘காலைல 6 மணிக்கு வந்தாதான் வேலை, 5 நிமிஷம் தாமதமானதால வேலை இல்லன்னு திருப்பி அனுப்பிட்டாங்கப்பா’’ என்று மூதாட்டி ஒருவர் தொலைபேசியில் எங்கள் ஆர்வலர்களிடம் கூறினார்.
  • நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அந்தச் செயலியைத் திறப்பதால் சேவை முடங்கிவிடுகிறது. அதனால், காலை 6 மணிக்கே வேலைக்கு வரவேண்டும் என்கிற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், விதிமுறைப்படி காலை 6 மணி முதல் 11 மணிவரை செயலி மூலம் வருகைப்பதிவு செய்யலாம்.

குறையும் முக்கியத்துவம்

  • முன்பு வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் வழங்கப்பட்டுவந்தது. பிப்ரவரி 1 முதல் நாடு முழுவதும் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கின் மூலம் ஊதியம் வழங்கும் முறையை அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. அரசின் புள்ளிவிவரப்படி (MIS report), இந்தியா முழுவதும் 43% தொழிலாளர்கள் மட்டுமே (தமிழ்நாட்டில் 83%) ஆதார் இணைப்பு முறையைக் கொண்டுள்ளனர். எனில், மீதமுள்ள தொழிலாளர்களுக்கு அவர்கள் செய்த வேலைக்கான ஊதியம் தரப்படாதா?
  • இவை எல்லாம் போதாதென்று, இந்த ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கான நிதி ரூ.60,000 கோடியாகக் குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டின் ஊதியநிலுவைத் தொகையே 2023 ஜனவரி வரையில் ரூ.16,070 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கும்போது, தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வைத்து, நாடு முழுவதும் 20 முதல் 25 நாள்களுக்குத்தான் வேலை தர இயலும் என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள். குடும்பத்துக்கு 100 நாள் வேலையைச் சட்டம் உறுதிசெய்தாலும், அரசின் நடைமுறை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.
  • திட்ட ஊதியத்தொகை முழுவதையும் மத்திய அரசுதான் வழங்க வேண்டும் என்பதை மாற்றி, மத்திய - மாநில அரசுகள் முறையே 60:40 என்கிற வீதத்தில் பகிர்ந்துகொள்ளுமாறு சட்டம் திருத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். இந்தப் பின்னணியில் 100 நாள் வேலைத் திட்டம் குறித்த சிக்கல்கள், குழப்பங்கள் அதிகரித்துள்ளன.

உடனடிச் செயல்பாடு தேவை

  • இச்சட்டம் வறுமையை ஒழிக்கக் கொண்டுவரப்படவில்லை. மாறாக, ‘ஊரகக் குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தவே’ கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், ‘வேலை பெறும் உரிமையை’ச் சட்டமாக்கிய நாடு இந்தியா.
  • அது மட்டுமல்ல, எங்கு.. எப்போது.. என்ன வேலை செய்ய வேண்டும் என்கிற பணிகளின் தொகுப்பை முடிவுசெய்வது, வேலை செய்வதற்கான தொழிலாளர் வரவு-செலவுத் திட்டத்தை இறுதிப்படுத்துவது, கிராமசபையால் அமைக்கப்படும் கண்காணிப்புக் குழு மூலம் வேலையைக் கண்காணிப்பது, முடிந்த வேலைகளைக் கிராமசபை மூலம் சமூகத் தணிக்கை செய்வது என இத்திட்டம் சார்ந்த அனைத்து முடிவெடுக்கும் அதிகாரங்களையும் எளிய மக்கள் பங்கேற்கும் கிராமசபைக்கு வழங்கி, மக்களையும் கிராம ஊராட்சிகளையும் இச்சட்டம் அதிகாரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது எளிய மக்களுக்குப் பேராபத்தாக முடியும்.
  • அனைவருக்கும் சம ஊதியத்தை உறுதிப்படுத்தியுள்ள, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்கள் அதிகமாக வேலை செய்கிற, சமூகச் சொத்துகளை மக்களே உருவாக்க வகைசெய்துள்ள, கரோனா காலத்தில் கிட்டத்தட்ட 389 கோடி மனிதசக்தி நாள்களை உருவாக்கி வேலை வழங்கியுள்ள இச்சட்டத்தைக் காக்க வேண்டியது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, மக்களின் கடமையும்கூட. நாடு முழுவதும் ஐந்து கோடிக் குடும்பங்களுக்கு, கிட்டத்தட்ட 15 கோடி வேலைவாய்ப்பை வழங்கிவரும் இச்சட்டத்தை நீர்த்துப்போக வைப்பது தவறு.
  • மேலும், இந்தச் சட்டத்தில் கூறியுள்ளபடி தமிழ்நாட்டில் மக்கள் பங்கேற்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றும், ஊராட்சிப் பிரதிநிதிகளைமீறி அலுவலர்களே திட்டத்தைச் செயல்படுத்திவருகிறார்கள் என்றும், இதனால் 47 நாட்களே வேலை கிடைக்கிறது என்றும் ஐஜிஜி (Institute of Grassroots Governance) மற்றும் தன்னாட்சி இணைந்து மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.
  • ஏற்கெனவே, நிர்வாக முறைகேடு என்று கூறி கடந்த ஆண்டு மேற்கு வங்கத்துக்குத் தரப்பட வேண்டிய ரூ.7,500 கோடியை மத்திய அரசு முடக்கியது. அந்த நிலை தமிழ்நாட்டுக்கும் வரக்கூடாதென்றால், மக்கள் பங்கேற்பை உறுதிசெய்வது அவசியம். உள்ளூர் வளர்ச்சியைக் கீழிருந்து மேலாக அணுகும் இச்சட்டத்தைக் காக்க மக்கள் ஒன்றுபட வேண்டும்.
  • நாடு முழுவதும் ஐந்து கோடிக் குடும்பங்களுக்கு, கிட்டத்தட்ட 15 கோடி வேலைவாய்ப்பை வழங்கிவரும் இச்சட்டத்தை நீர்த்துப்போக வைப்பது தவறு.

நன்றி: தி இந்து (05 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்