TNPSC Thervupettagam

தொடரும் குழந்தைத் தொழிலாளர் முறை

August 14 , 2024 106 days 112 0

தொடரும் குழந்தைத் தொழிலாளர் முறை  

  • சமீபத்​தில், டெல்லியில் இரண்டு தொழிற்​சாலைகளி​லிருந்து 70க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலா​ளர்கள் மீட்கப்​பட்​டனர். தினமும் 14-15 மணி நேரம் வேலையில் ஈடுபடுத்​தப்பட்ட இக்குழந்தை​களுக்கு மிகக் குறைந்த ஊதியமே அளிக்​கப்​பட்​டுள்ளது.
  • போதிய உணவு, உறக்கம் இல்லாமல் தொழிற்​சாலைகளில் அடைத்து வைக்கப்​பட்​டிருந்த குழந்தை​களின் உடலில் காணப்பட்ட காயங்கள் தலைநகரை அதிர்ச்​சிக்கு உள்ளாக்​கின. டெல்லி மட்டுமல்ல, இந்தியாவின் பிற மாநிலங்​களிலும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை இருக்​கிறது.

வரையறையும் காரணங்​களும்:

  • இந்தியாவைப் பொறுத்தவரை 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைப் பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றம். எனினும், குழந்தைகள் செய்யும் அனைத்து வேலைகளும் குழந்தைத் தொழிலாகக் கருதப்​படு​வதில்லை. உதாரணமாக, குழந்தைகள் தமது திறன்களை வளர்த்​துக்​கொண்டு தங்களின் எதிர்​காலத்​துக்கு உதவும் வேலைகளைச் செய்யும்போது அவர்கள் குழந்தைத் தொழிலாளர் என்கிற வரையறைக்குள் வருவது இல்லை.
  • மாறாக, குழந்தை​களின் உடல்-மன நலம், சுதந்​திரம், பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவது குழந்தைத் தொழிலாளர் முறையாகும். இந்த அளவீட்​டின்படி, பெற்றோர்​களிட​மிருந்து பிரிக்​கப்​பட்டு சுரங்கம், பண்ணை வேலைகள், செங்கல் சூளை, பீடித் தொழிற்​சாலைகள் போன்றவற்றில் ஈடுபடுத்​தப்​படும் குழந்தைகள், குழந்தைத் தொழிலா​ளர்​களாகக் கருதப்​படுவர்.
  • குழந்தை​களைப் பாலியல் தொழிலில் தள்ளுவது, ஆபாசப் படங்களில் நடிக்​கவைப்பது, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுத்துவது, பயங்கரவாத அமைப்பு​களில் சேர்ப்பது போன்றவையும் குழந்தைத் தொழிலாளர் முறையாக வகைப்​படுத்​தப்​பட்​டுள்ளன.
  • குழந்தைகள் மோசமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் முதன்​மையானது குடும்​பத்தில் நிலவும் வறுமை. பெரும்​பாலான குழந்தைகள் குடும்பச் சூழ்நிலை காரணமாகக் கல்வி கற்க வேண்டிய வயதிலேயே வேலைக்குச் செல்லும் நிலை ஏற்படு​கிறது. இரண்டாவதாக, ஆதரவற்ற சிறுவர்​களும் பெற்றோரிட​மிருந்து பிரிய நேர்ந்த சிறுவர்​களும் சமூக விரோதி​களால் கடத்தப்​பட்டு இத்தகைய பணிகளில் ஈடுபடுத்​தப்​படு​கிறார்கள்.

உலக நிலவரம்:

  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு 2013இல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 26.5 கோடி பேர் குழந்தைத் தொழிலா​ளர்களாக உள்ளனர். அதாவது, உலக மக்கள்​தொகையில் 18 வயதுக்கு உள்பட்​ட​வர்​களில் 17% பேர் குழந்தைத் தொழிலா​ளர்களாக உள்ளனர்.
  • உகாண்டா, கானா, நைஜீரியா, தான்சானியா, கென்யா, ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா போன்ற சஹாரா​வுக்குத் தெற்கே உள்ள ஆப்ரிக்க நாடுகளில் குழந்தைத் தொழிலா​ளர்​களின் எண்ணிக்கை அதிகம். பொருளா​தா​ரத்தில் பின்தங்கிய வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட மக்களின் எண்ணிக்கை ஆப்ரிக்​காவில் அதிகம். தவிர போர், அரசியல் நிலையின்மை போன்ற காரணங்​களாலும் அங்கு குழந்தைத் தொழிலா​ளர்​களின் எண்ணிக்கை பிற நாடுகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. தெற்காசியா, மத்தியக் கிழக்கு நாடுகள், வட அமெரிக்க நாடுகளிலும் குழந்தைத் தொழிலா​ளர்கள் கணிசமான அளவில் இருப்​ப​தாகத் தரவுகள் சுட்டிக்​காட்​டு​கின்றன.

இந்திய நிலவரம்:

  • தெற்காசி​யாவில் குழந்தைத் தொழிலா​ளர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 2011 மக்கள்​தொகைக் கணக்கெடுப்​பின்படி இந்தியாவில் ஒரு கோடி குழந்தைத் தொழிலா​ளர்கள் இருந்​தனர். இவர்களில் 55 லட்சம் பேர் சிறுவர்கள், 45 லட்சம் பேர் சிறுமிகள். உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலங்​களில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது.
  • 2022இல், குழந்தைத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 982 வழக்குகள் பதிவு செய்யப்​பட்டன. அதிக வழக்குகள் பதிவு செய்​யப்பட்ட இந்திய மாநிலங்​களில் தெலங்கானா முதலிடத்​தி​லும், அசாம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

சட்டமும் தண்டனையும்:

  • குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்​க​வும், அதிலிருந்து மீட்கப்​படும் குழந்தை​களுக்கு மறுவாழ்வை வழங்கிடவும் இந்திய அரசு பல்வேறு சட்டங்களை வகுத்​துள்ளது.

தொழிற்​சாலைகள் சட்டம், 1948:

  • இந்தச் சட்டம் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தை​களைப் பணிக்கு அமர்த்து​வதைத் தடைசெய்​கிறது. இதில் குடும்பத் தொழில்கள், சினிமா போன்ற பொழுதுபோக்குத் துறைகளுக்கு விதிவிலக்கு வழங்கப்​பட்​டுள்ளது.
  • குழந்தைத் தொழிலாளர் சட்டம் (தடுப்பு மற்றும் ஒழுங்​காற்றுதல்) 1986: இச்சட்​ட​மானது, ஆபத்தானவை (பீடி, பட்டாசு, வேதித் தொழிற்​சாலை) என வரையறுக்​கப்​பட்​டுள்ள வேலைகளில் குழந்தைகள் ஈடுபடு​வதைத் தடைசெய்​கிறது.

சிறார் நீதிச் சட்டம், 2000:

  • இச்சட்டம் குழந்தைகளை அபாயகரமான வேலையிலும் அடிமைத்​தனத்​திலும் ஈடுபடுத்துவது தண்டனைக்​குரிய குற்றம் என வரையறுக்​கிறது.

இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம், 2009:

  • இந்தச் சட்டத்​தின்படி 6 வயது முதல் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இலவச, கட்டாயக் கல்வி பெறுவதை உறுதி​செய்வது அரசின் கடமை. இந்தச் சட்டங்கள், குழந்தைத் தொழிலா​ளர்​களைப் பணிக்கு அமர்த்​துபவர்​களுக்கு 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வகைசெய்​கின்றன. மேலும், ரூ.25,000 முதல் ரூ.50,000வரை அபராதமும் விதிக்​கப்​படு​கிறது.

சமூக - பொருளா​தாரப் பாதுகாப்பு:

  • 2025க்குள் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க ஐ.நா. அவை இலக்கு நிர்ண​யித்​துள்ளது. நாட்டின் எதிர்​காலமாகக் கருதப்​படும் குழந்தைகள் கல்வி, உணவு, ஆரோக்​கியம் உள்​ளிட்ட அனைத்து அடிப்படை உரிமை​களை​யும் பெறத் தகுதி​யானவர்​கள். அனைத்​துக் குழந்தை​களுக்​கும் இவற்றை உறு​திப்​படுத்தி சமூக, பொருளா​தாரப்​ பாது​காப்​பில் நிறைவை அளிப்​பதன்​ மூலமே குழந்​தைத் தொழிலாளர்​ முறையை முற்றி​லும் ஒழிக்க முடி​யும்.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்