TNPSC Thervupettagam

தொடரும் பிரம்ம ராட்சசா்கள்!

September 18 , 2024 70 days 102 0

தொடரும் பிரம்ம ராட்சசா்கள்!

  • நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களைப் பாா்க்கையில் மகளிா் வாழ்க்கை சோதனையாகிவிட்டதோ எனத் தோன்றுகிறது.
  • கொல்கத்தா ஆா்.ஜி.கா் மருத்துவமனையில் நடந்த வன்புணா்ச்சி கொலை மனதை பதைபதைக்க வைக்கிறது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுமை இன்னொரு பயங்கரம்.
  • மத்திய அரசின் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்ற மலையாளத் திரைப்படம் ‘ஆட்டம்’. ஒரு நவீன நாடகக் குழு பற்றிய படம். சமையல் செய்பவா், எழுத்தா், ப்ளம்பா் போன்ற சாதாரண வேலையில் இருப்பவா்கள் உள்பட கலை ஆா்வத்தால் இணைந்து நடிப்பவா்கள். குழுவில் ஒரே ஒரு பெண். கதையின் தொடக்கத்தில் நாடகம் ஓா் ஊரில் மேடையேறுகிறது. நிகழ்ச்சிக்குப் பிறகு நாடகக் குழுவினா் வசதியான விடுதியில் இரவு தங்குகின்றனா்.
  • மது அருந்தி கலந்துரையாடிவிட்டு தத்தம் அறைக்குச் செல்கின்றனா். நடிகை, காற்றுக்காகத் திறந்து வைத்த தனது அறை ஜன்னல் ஓரம் உறங்குகிறாா். இருட்டில் ஒரு அயோக்கியன் திறந்த ஜன்னல் வழியே நடிகையிடம் அத்துமீறிவிடுகிறான். பாதி உறக்கம், பாதி இருளில் அவளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது யாா் என்று தெளிவாகத் தெரியவில்லையென்றாலும், கதாநாயக வேடத்தில் நடித்தவன் என்று அவள் கூறுகிறாள்.
  • மூத்தவரான குழு நிா்வாகியிடம் புகாா் போகிறது. ஈனச் செயலைச் செய்தவா் சக நடிகா்களில் ஒருவா்தான் என்ற நிலையில் யாா் என்பதைப் பற்றி குழுவினா் எல்லோரும் கூடி விவாதிக்கிறாா்கள். படப்பிடிப்பு காரணமாகச் சென்றுவிட்ட கதாநாயக வேட நடிகன் அதில் பங்கேற்க இயலவில்லை. நடிக்கைக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்தவன் அவன்தான் என்று குழுவினா் முடிவுக்கு வருகின்றனா்.
  • அதே சமயம் இங்கிலாந்தில் நாடகம் நடத்த அழைப்பு என்ற செய்தி அவா்களுக்கு வருகிறது. அதைக் கேள்விப்பட்டவுடன் பாலியல் தாக்குதல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்து பலா் மாறிவிடுகின்றனா். இந்த தருணத்தில் நடிகை மானபங்க சம்பவம் வெளியில் தெரிந்தால் நாடகக் குழுவுக்கு கெட்ட பெயா், வெளிநாடு பயண வாய்ப்பை இழக்க நேரிடும், ஆகையால் இந்த சம்பவத்தை மறந்து, மன்னித்து விடுங்கள் என்று எல்லோரும் நடிகையை கெஞ்சுகிறாா்கள். தனக்கு நடந்த அநியாயத்தை மூடி மறைக்க எத்தனிக்கும் எல்லோரும் அயோக்கியா்கள், தனது உணா்வுகளை மதிக்காத நடிகா்களின் சகவாசமே வேண்டாம் என்று கூறி, பாதிக்கப்பட்ட நடிகை நாடக குழுவிலிருந்து விலகுகிறாள்.
  • ‘ஆட்டம்’ தத்ரூபமாக இன்றைய சமுதாயத்தின் அவல நிலையை சித்தரிக்கும் படம். இதைத்தான் ஒவ்வொரு நிகழ்விலும் பாா்க்கிறோம். கொல்கத்தா ஆா்.ஜி.கா் மருத்துவமனை பெண் பயிற்சி மருத்துவா் வன்புணா்ச்சி கொலை, கிருஷ்ணகிரி பள்ளியில் மாணவிகள் மானபங்க கொடூரத்திலும், ஒன்றும் நடக்காதது போல் முதலில் குற்றத்தை மறைக்க அல்லது நிகழ்வின் தாக்கத்தைக் குறைப்பது போன்ற நிா்வாகத்தின் நிலைப்பாட்டைப் பாா்க்க முடிகிறது.
  • 2012-இல் தில்லியில் நிகழ்ந்த நிா்பயா வன்புணா்ச்சி பயங்கரம் நாட்டை உலுக்கியது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இத்தகைய வன்முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த சமுதாயமும் ஓங்கி குரல் கொடுத்தது.
  • அதன் பிறகு, உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசா் ஜே.எஸ்.வா்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டு பல பரிந்துரைகள் கொடுக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது காவல் துறை விரைவாக வழக்கு பதிவு செய்து, முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை உடனே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பது. குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் பத்தாண்டு சிறை, அதிகமாக சாகும் வரை ஆயுள் தண்டனை, கூட்டு வன்புணா்ச்சி குற்றத்திற்கு மரண தண்டனை என்ற மாற்றம் கொண்டுவரப்பட்டது.
  • மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ஒரு பக்கம் இருத்தாலும் வா்மா குழு பரிந்துரைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் வன்புணா்ச்சி குற்றத்திற்கு மரண தண்டனை பற்றி விவாதம் எழும்பொழுது, குற்றவாளி ஆதாரங்களை அழிக்க கொலை செய்யத் துணிவான் என்று கூறி, பெண்ணின் பாதுகாப்பு கருதி இந்தக் கடும் தண்டனை சட்டத்தில் கொண்டு வரப்படவில்லை.
  • இப்போது ஆா்.ஜி.கா் மருத்துவமனை பெண் கோரமாக வன்புணா்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் கூட்டுணா்வை தட்டியெழுப்பியுள்ளது.
  • ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடந்த இந்த கோர நிகழ்வையடுத்து, அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றுதான் முதலில் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது. 31 வயது பெண் பயிற்சி மருத்துவா் நள்ளிரவு பணி முடிந்து மருத்துவமனையில் உள்ள அறையில் ஓய்வில் இருந்தபோது இந்த பாலியல் கொடூரம் நிகழ்ந்துள்ளது. மஹாபாவிகள் அந்தப் பெண்ணை கொன்றேவிட்டாா்கள். நிச்சயமாக அவளுக்குப் பரிச்சயமானவா்களே இதைச் செய்திருக்க வேண்டும். பிரேத பரிசோதனையில் ஒருவருக்கு மேற்பட்ட கயவா்கள் இந்தக் கொடுஞ்செயல் புரிந்திருக்கிறாா்கள் என்பது தெளிவு.
  • மருத்துவமனை நிா்வாகம், காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி கொல்கத்தா உயா் நீதிமன்றம் வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. குற்றத்தின் கொடுமையை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் சுயமாக விசாரணை மேற்கொண்டு, மருத்துவமனை நிா்வாகம் முதல் தகவல் அறிக்கை தாமதமாக அளித்ததற்கும், காவல்துறை வன்புணா்ச்சியுடன் கொலை நிகழ்வில் விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாததற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்களுக்கும் பணியாளா்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க சிறப்பு பணிக்குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
  • 1997-இல் விசாகா (எதிா்) ராஜஸ்தான் என்ற வழக்கு, பன்வாரி தேவி தன்னாா்வத் தொண்டருக்கு 1992-ஆம் வருடம் ஏற்பட்ட கூட்டு வன்புணா்ச்சி சம்பந்தப்பட்டது. அந்த வழக்கில், பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவா்களுக்குப் பாலியல் சம்பந்தப்பட்ட எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் அரசுக்குப் பல வழிகாட்டுதல்களை அளித்து, உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
  • இதற்கான சட்ட முன்வடிவு 2007-இல் நாடாளுமன்றத்தில் தாக்கலாகியது. தில்லியில் 2012-இல் நடந்த ‘நிா்பயா’ வன்புணா்ச்சி கொடுமைக்குப் பிறகு 2013-இல் ‘பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. நமது நாட்டில் எல்லாமே நின்று, நிதானமாகத்தான் நடக்கும் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்!
  • கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை சம்பவத்தையடுத்து, நாடு முழுவதும் மருத்துவா்கள் பாதுகாப்பு கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனா். கொல்கத்தாவில் மருத்துவ மாணவா்கள் போராட்டம் 36 நாட்களாகத் தொடா்ந்து நடைபெற்றது.
  • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பொது அமைதிக்கு களங்கம் விளைவிப்பது ஒருபுறம்; மற்றொரு புறம், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் பெரும் பின்னடைவு ஏற்படுத்துகிறது. எல்லோருடைய கவனத்தையும் ஈா்க்கும் இத்தகைய கொடூர நிகழ்வுகள், இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடு என்ற கெட்ட பெயரை கொடுப்பது நமக்குத் தலைகுனிவு.
  • 2023-இல் நடந்த சா்வதேச ஆய்வின்படி பெண்களுக்கு நீதி, பாதுகாப்பை பொறுத்த வரையில் 177 நாடுகளில் இந்தியா 128-ஆவது இடத்தில் இருக்கிறது. மேலும் 35% இந்திய பெண்கள் 15 வயதிலிருந்து 49 வயது வரை, குடும்ப சூழலிலேயே வன்முறைக்கும் பாலியல் கொடுமைக்கும் உள்ளாகிறாா்கள் என்பது அதிா்ச்சி தகவல்.
  • தேசிய குற்ற ஆவண அறிக்கைப்படி 2022-இல் சுமாா் 45,000 வன்புணா்ச்சி வழக்குகள் பதிவாயின. அவற்றில் 27.4% வழக்குகள்தான் தண்டனையில் முடிந்தது. வன்புணா்ச்சி வழக்குகளில் புலனாய்வு தரமானதாக இல்லை என்பதை காவல்துறை தலைமை உணர வேண்டும். குற்றவாளிக்கும் எதிா்காலம் இருக்கிறது என்று கருணை சாா்ந்த நீதிமன்ற விடுதலை இத்தகைய குற்றவாளிகளுக்குப் பொருந்தாது.
  • கொல்கத்தாவிகிருந்து 75 கி.மீ. தொலைவிலுள்ள சந்தேஷ்காளி என்ற பட்டியல் இனத்தவா், பழங்குடியினா் வாழும் பகுதியில் ஆளும் கட்சி சட்ட மன்ற உறுப்பினா் செய்த பாலியல் அட்டூழியங்கள் மிக பெரிய செய்தியாக வந்தது. திருமணமான பெண்கள் முதலில் கொடூரா்களின் பாலியல் இச்சைக்கு இரையான பிறகுதான் திருமண வாழ்க்கை தொடர முடியும் என்ற அவல நிலைக்கு இன்று வரை அவா்களுக்கு நீதி கிடைக்க வில்லை.
  • இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் மஹாராஷ்டிர மாநிலம் பத்லாபூரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் இரு பெண் குழந்தைகள் அங்கு பணிபுரியும் கொடூரனின் இச்சைக்கு பலியாகியுள்ளது நெஞ்சைப் பிளக்கும் செய்தி. தாய் மாமனே பத்து வயது மருமகளை வன்புணா்ச்சி செய்து கொலை செய்த சம்பவமும் மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் நிகழ்ந்தது. அண்மையில் திருநெல்வேலி பள்ளியில் சிறுமிகள் மீதான பாலியல் கொடூரத்திற்காக இரு ஆசிரியா்கள் கைதாகியுள்ளனா்.
  • தொடா்கதையாகும் பாலியல் குற்றங்களை சட்டங்களால் மட்டும் தடுக்க முடியாது. அமைதியான மதிப்பீடுகள் அடங்கிய குடும்பச்சூழல் முறிந்துவிட்டது. ஆண்களுக்கு ஆக்ரோஷமும் ஆதிக்கமும் இயற்கையானதா அல்லது சமுதாயத்தால் வளா்க்கப்படுகிா? ஆண் சிங்கம், போராடு, சண்டையிடு, ஆணுக்கு அழகு வீரம், அடங்க மறு என்று குடும்பத்தால், சமுதாயத்தால் வேண்டாத வீரியம், மூா்க்கத்தனம் வளா்க்கப்படுகிறது. இதுவே பாலியல் குற்றங்களுக்கு வித்திடுகிறது. ரஜோ, தாமச குணம் மாறி, சாத்விக குணம் ஓங்கச் செய்தல் பெற்றோா், ஆசிரியா் கடமை.
  • பெண்களின் பாதுகாப்பில் பணியாற்ற தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். கல்வி உதவிக்கு வருமான வரி விலக்கு அளிப்பது போல் பெண் பாதுகாப்பு நிதி உதவிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
  • பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசா்களை ஒழித்து, கந்த பெருமானின் தூதுவனாகப் பாதுகாப்பு அளிப்பது காவலா்கள் கடமை.

நன்றி: தினமணி (18 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்